என் மலர்
வேலூர்
நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை புத்தாண்டு தினத்தில் மொத்தம் 16 குழந்தைகள் பிறந்தது.
இதில் 8 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள். நேற்று பிறந்த இந்த 16 குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தூர் அடுத்த பைப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மது என்ற வசந்தகுமார் ரெட்டி (வயது 36), கார் டிரைவர். இவர், திருமணமான பெண்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி நம்பவைத்து, அவர்களை ரகசியமாக செல்போனில் படம் பிடிப்பார்.
அந்தப் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, சம்பந்தப்பட்ட பெண்களின் குடும்பத்தினர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் ரெயில்வே துறையில் பலருக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி, லட்சக்கணக்கான ரூபாய் பணம் பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்து வந்துள்ளார்.
வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அவர் மீது ரொம்பிச்செர்லா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழகத்தில் வேலூர் பஸ் நிலையம் அருகில் நின்றிருந்த மது என்ற வசந்தகுமார் ரெட்டியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
திருமணமான பெண்களை குறிவைத்து, அவர்களை ரகசியமாக படம் பிடித்து, அதை மார்பிங் செய்து, அந்தப் படத்தை அவர்களுக்கே அனுப்பி வைத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறனார்.
அவர் மீது சித்தூர் மாவட்டத்தில் பலமநேர், தவனம்பள்ளி, ஐராலா, ரொம்பிச்சேர்லா ஆகிய போலீஸ் நிலையங்களில் பணமோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஆற்காடு:
நடிகர் ரஜினி டிசம்பர் 31-ந்தேதி புதிதாக கட்சியை தொடங்கி அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கட்சி தொடங்கப்போவதில்லை. அரசியலுக்கும் வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார்.
ரஜினி அரசியல் கட்சியை தொடங்கி மக்கள் பணியாற்றுவார் என எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் அவரது அறிவிப்பால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ரஜினி கட்சியை தொடங்கி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி ரஜினி வீட்டு முன்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆற்காடு அடுத்த வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோவில் முன்பு ரஜினி பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டி அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தனர்.
ஆற்காடு நகர செயலாளர் ஏ.எம்.வரதன், ஒன்றிய செயலாளர் வி.எம்.சேட்டு, திமிரி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ரஜினி பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதுதொடர்பாக எருதுவிடும் விழா சங்கத்தினர் மற்றும் காளை உரிமையாளர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசு வகுத்த கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் விழா குழுவினர் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:-
கொரோனா தொற்று காரணமாக வேலூர் மாவட்டத்தில் 82 கிராமங்களில் மட்டுமே எருது விடும் விழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஜனவரி 14-ந் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 28-ந் தேதிக்குள் அனைத்து எருது விடும் விழாக்களையும் நடத்தி முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் எருது விடும் விழா நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன் காளையின் உரிமையாளர்கள், உடன் வருவோர் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றை பெற்றிருக்க வேண்டும். சான்று பெறாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எருதுவிடும் விழாவில் 150 வீரர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். பார்வையாளராக வரும் அனைவருக்கும் விழா நடைபெறும் இடத்திலேயே காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். எருதுவிடும் விழா நடத்த ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்கு ஜனவரி 4-ந் தேதி கடைசி நாள் ஆகும்.. அனுமதி பெறாமல் எருதுவிடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தினமும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் 13 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டு தோறும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும், என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் சர்க்கரை, முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 4 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வேலூர் தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பரிசு தொகுப்பு பைகளில் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்பணி முடிவடையும் என்றும், வருகிற 4-ந் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. டாஸ்மாக் அருகே அனுமதியின்றி தள்ளுவண்டி, பெட்டிக்கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பார் உரிமையாளர்கள் வேலூர் கோட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் பொது மேலாளர் கீதாராணி நேற்று மாலை பென்னாத்தூர், அடுக்கம்பாறை, வேலூர் பழைய, புதிய பஸ்நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது அந்தக் கடைகளின் அருகே காணப்பட்ட தள்ளுவண்டி, பெட்டிக்கடைகளுக்கு அனுமதி உள்ளதா என்று சோதனையிட்டார். அதில், பெரும்பாலான கடைகள் அனுமதியின்றி இயங்குவது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த கடைகளை அகற்றப்பட்டன. அனுமதியின்றி தொடர்ந்து கடைகள் வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்தார்.
வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே அனுமதியின்றி 33 தள்ளுவண்டி, பெட்டி கடைகள் இயங்கி வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த கடைகள் விரைவில் அகற்றப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 30), ஆட்டோ டிரைவர். இவர் தனது உறவினர் மகள்களான 7 மற்றும் 9 வயதுடைய 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பள்ளிக்கு சென்ற ஒரு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர், சிறுமியின் தாயை அழைத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தாயார் அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டருக்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதை அறிந்த தாயார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது சுரேஷ்பாபு என்பதும், அவர் அந்த சிறுமியின் சகோதரியையும் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில், சுரேஷ்பாபு மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 21 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சுரேஷ்பாபுவை போலீசார் ஜெயிலுக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழக அரசு சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செய்யும் வேலூர் கோட்ட அலுவலகம் வேலூர் கோட்டை சுற்று சாலையில் செயல்பட்டு வருகிறது. இதன் இணை ஆணையராக விமலா (வயது42) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கூடுதலாக நுண்ணறிவு பிரிவு மற்றும் பொது நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஒருங்கிணைந்த வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.
இந்நிலையில் நேற்று வேலூர், திருவண்ணாமலை மாவட்ட உதவி ஆணையர்கள் மற்றும் மாநில வரி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் சுமார் 50 பேர் வரை பங்கேற்றனர்.
பயிற்சி முடிவில் புத்தாண்டு பரிசு பொருட்கள் பெற இருப்பதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி.ஹேமசித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் மாநில வரிதுறை இணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது புத்தாண்டு பரிசாக ரொக்கப்பணம் மற்றும் சால்வை, இனிப்புகள், டைரிகள் பெறப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இணை ஆணையர் விமலாவின் அறை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கணக்கில் வராத மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இணை ஆணையர் விமலாவிடம் விசாரணை நடத்தினர். ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் பணத்திற்க்கு உரிய கணக்கு காட்டாததால் அவை லஞ்ச ஒழிப்பு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. புத்தாண்டையொட்டி பணம் மற்றும் இனிப்பு வகைகள் சால்வை போன்றவற்றை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.
சுமார் 7 மணி நேரத்திற்கு பிறகு லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவடைந்தது. மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இணை ஆணையர் விமலாவிடம் அதிகாரிகள் இது தொடர்பாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






