என் மலர்
வேலூர்
வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே வடக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் விருதம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகிய இருவரும் போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
நள்ளிரவில் அவர்கள் இருவரும் வடக்கு போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர். ஜெகதீசன் கைத்துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் உள்ள மேஜையில் வைத்துள்ளார். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி வெடித்தது.
அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து பாய்ந்த குண்டு யார் மீதும் படாமல் போலீஸ் நிலைய மேற்கூரையை துளைத்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் மேற்கூரை கடுமையாக சேதம் அடைந்தது.
துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு போலீஸ் நிலையத்தில் இருந்த மற்ற போலீசார் பதட்டம் அடைந்தனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்பதால் நிம்மதி அடைந்தனர்.
இந்த சம்பவம் வேலூர் மாவட்ட போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் மேஜையில் வைத்தபோது துப்பாக்கி வெடிக்க காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவ தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவிதுள்ளது.
தமிழக- ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடி பகுதியில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து வேலூருக்கு வாகனங்களில் வரும் பொதுமக்களை மடக்கி கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டத்திற்கு அருகில் ஆந்திரா மாநிலம் உள்ளது. வர்த்தக ரீதியாகவும், திருப்பதி, காளஹஸ்தி, கானிப்பாக்கம் போன்ற கோவில்களுக்கும் வேலூர் மாவட்ட மக்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அதிகளவில் சென்று வருகின்றனர்.
அப்படி சென்று வரும்போது கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் பைக்கில் வருபவர்களுக்கு கட்டாயமாகவும், கார்களில் வரும் சிலருக்கும் பிசோதனை செய்து வருகிறோம். அதேபோல் அடிக்கடி மருத்துவமனை சிகிச்சைக்கும், மார்க்கெட்டிற்கும் வந்து செல்பவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இதன்மூலம் மாவட்டத்தில் முழுமையாக கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
இதேபோல் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக வாகனங்களில் மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் தொரப்பாடி அவ்வைநகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65), ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று காலை ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். சாய்நாதபுரம் அன்பு இல்லம் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் கணேசன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 2 வாலிபர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்தவர்கள் வேலப்பாடியை சேர்ந்த தாமோதரன் (25), கண்ணன் (25) என்பது தெரியவந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களை தொடர்பு கொள்ளும் பெண்கள் நாங்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும், 100 நபர்களின் செல்போன் எண்களை தேர்ந்தெடுத்து குலுக்கல் நடத்தியதில் தங்கள் பெயர் வந்துள்ளதாகவும், தங்களுக்கு செல்போன் மற்றும் பவர்பேங்க் குறைந்த விலையில் தருவதாக கூறுவார்கள்.
பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என செல்போன் மூலம் பொதுமக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி வந்துள்ளனர். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்தி பொருட்களை பெற்ற போது அந்த பொருட்கள் தரமற்றதாகவும், களிமண்ணை வைத்தும் பார்சல் செய்து அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதரன் உத்தரவின்பேரில், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று மதியம் போலீசாருடன் குடியாத்தம் புதுப்பேட்டை கோட்டா சுப்பைய்ய தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது அந்த வீட்டில் 15 இளம்பெண்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது பொதுமக்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு, குறைந்த விலையில் செல்போன் மற்றும் பவர்பேங்க் பரிசு விழுந்திருப்பதாக பேசி வந்ததாக கூறி உள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது ஏராளமான செல்போன்கள், களிமண் பார்சல், செல்போன் எண்கள் கொண்ட புத்தகங்கள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். போலி கால் சென்டர் நடத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க. அணி பிரசார பிரதிநிதிகள் மாநாடு நேற்று மாலை நடந்தது. மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன், பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் வாசுதேவன், வேலூர் மாவட்ட பார்வையாளர் வெங்கடேசன் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் எஸ்.பி. விஜயகுமார், டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர் உட்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி மாநாடு நடத்தியது, உத்தரவை மீறி ஒன்று கூடுதல், கொரோனா காலத்தில் கூட்டம் கூடுதல், சமூக விலகலை கடைப்பிடிக்கவில்லை என்று மாநிலத்தலைவர் முருகன் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பா.ஜ.க.வின் அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
பெண்களின் மத்தியில் பிரதமர் மோடியின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஆனால் தி.மு.க. போன்ற கட்சிகள் பொய் பிரசாரம் செய்து இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.
மருத்துவக் காப்பீட்டு திட்டம், முத்ரா திட்டம், தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறுவதுடன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பா.ஜ.க இருக்கும்’’.
தி.மு.க.வால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் மு.க.ஸ்டாலிடம் கேள்வி கேட்ட பெண் அவர்களுடைய கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.

தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. வருகிற மே மாதம் தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம்.
வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வை புலம்பச் செய்துள்ளோம். வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வின் தூக்கம் தொலைந்து விட்டது.
தி.மு.க. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடாது. தமிழக சட்டப் பேரவைக்கு பாஜ.க. கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக செல்ல அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






