search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தினகரனை பெண் போலீசார் தடுத்து நிறுத்தியபோது எடுத்த படம்.
    X
    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தினகரனை பெண் போலீசார் தடுத்து நிறுத்தியபோது எடுத்த படம்.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் புதியகாலனி பகுதியை சேர்ந்தவர் தினகரன் (வயது 55), மாற்றுத்திறனாளி. இவர் நேற்று காலை மனைவி மற்றும் மகள் நிவேதா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்களை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் சமூகநலத்துறை அலுவலத்தில் மனு அளிக்க செல்வதாக தெரிவித்தனர். அதையடுத்து 3 பேரையும் போலீசார் சோதனை செய்து கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.

    சிறிதுநேரத்தில் கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே தினகரன் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பெண் போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, உடலின் மேல் தண்ணீர் ஊற்றி அமைதிப்படுத்தினர். இதனை கண்ட அவருடைய மனைவி மற்றும் மகள் இருவரும் கதறி அழுதனர். தினகரனிடம் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், தினகரன் மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து, வருகிற 29-ந் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்துள்ளது. ஆனால் திடீரென வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு மறுத்துள்ளனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

    அதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான தினகரன் இதுகுறித்து லத்தேரி போலீஸ் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த அவர் நிச்சயம் செய்யப்பட்ட வாலிபருடன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. அதையடுத்து தினகரன் தான் வைத்திருந்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினார்.

    கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தினகரன் கலெக்டர் அலுவலகத்திற்குள் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×