search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மணப்பெண்ணை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி- அக்காள் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

    முலகலசெருவு அருகே மணப்பெண்ணுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து கொல்ல முயன்ற செயல் தோல்வியில் முடிந்ததால், ஓரிடத்தில் வீசப்பட்ட விஷ உணவை சாப்பிட்ட வளர்ப்பு பிராணிகள் செத்தன. இதையடுத்து மணப்பெண்ணை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது.
    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம் முலகலசெருவு மண்டலம் கட்டுகிந்தபள்ளேரு பஞ்சாயத்து சோம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரி சிவன். இவருக்கு 3 மகள்கள் உண்டு. அதில் முதல் 2 மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் சுமதி (வயது 24). இவர், மதனப்பள்ளியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சுமதிக்கும், வாலிபர் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு வருகிற 25-ந்தேதி திருமணம் நடக்க இருந்தது.

    இந்தநிலையில் கதிரி சிவனின் 2-வது மகள் மாதவியை வெங்கடேசன் என்பவர் திருமணம் செய்துள்ளார். வெங்கடேசனுக்கும், சுமதிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சுமதியை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் திருமணத்துக்கு மறுத்து வந்தார். ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், சுமதியை உணவில் விஷம் வைத்து கொலை செய்யவும், இல்லையேல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டியிருந்தார்.

    அந்த சதித்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முன்தினம் இரவு கதிரி சிவன் வீட்டுக்கு வந்த வெங்கடேசன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுமதியை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தான் ஏற்கனவே விஷத்தை கலந்து வைத்திருந்த உணவை சுமதியிடம் சாப்பிட கொடுத்துள்ளார். அந்த உணவை வாங்கி சாப்பிட அவர் மறுத்துள்ளார். விஷம் கலந்த உணவை வெங்கடேசன் எடுத்துச் சென்று கிராமத்தில் ஓரிடத்தில் வீசி உள்ளார்.

    முதல் கொலை முயற்சி தோல்வியில் முடிந்ததால், 2-வது முயற்சியாக வெங்கடேசன் சுமதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். எரியும் தீயில் துடித்த சுமதி கூச்சலிட்டு அலறினார். அந்த நேரத்தில் வெங்கடேசன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சுமதி மீது எரிந்த தீயை குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அணைத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக தம்பலப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இரவில் கிராமத்தில் ஓரிடத்தில் வீசப்பட்ட விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 2 நாய்கள், 20 கோழிகள், ஒரு பூனை ஆகியவை நேற்று காலை இறந்து கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முலகலசெருவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×