என் மலர்
திருவண்ணாமலை
ஆரணி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நூதனமாக நகை பறித்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி டவுன் சைதாப்பேட்டை நாடகசாலைபேட்டை தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரின் மனைவி காளியம்மாள் (வயது 67). சேவூரில் உள்ள இவரது உறவினர் இறந்ததையொட்டி துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது ஒரு டிப்-டாப் ஆசாமி, காளியம்மாளிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, தாலுகா அலுவலகம் அருகில் கட்சி அலுவலகத்தில் இலவசமாக அரிசி, மளிகைப் பொருட்கள், ரூ.2 ஆயிரம் கொடுக்கிறார்கள், அதை வாங்கி கொண்டு போகலாம் வாருங்கள், எனக் கூறினார்.
அதை, உண்மை என்று நம்பிய மூதாட்டி டிப்-டாப் ஆசாமியுடன் சென்றுள்ளார். கட்சி அலுவலகம் அருகில் சென்றபோது மூதாட்டியிடம், போட்டோ எடுக்க வேண்டும் எனக்கூறி ஒரு ஸ்டூடியோ அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்றதும் போட்டோ எடுக்கும்போது, தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கக் கூடாது, அதை கழற்றி என்னிடம் கொடுங்கள் எனக் கூறி, மூதாட்டி அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, தாலி சரடு என 2 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டார்.
நீங்கள் போட்டோ ஸ்டூடியோவுக்குள் சென்று போட்டோ பிடித்து வாருங்கள் எனக்கூறி உள்ளே அனுப்பி வைத்து விட்டு, மர்ம ஆசாமி நகைகளுடன் தப்பியோடி விட்டார்.
ஸ்டூடியோவுக்குள் சென்று வெளியே வந்த மூதாட்டி, அந்த நபர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணவில்லை. தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மூதாட்டி அது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி, சலுகையுடன் கூடிய கடனுதவி வழங்கப்பட உள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
விவசாயிகளை ஒன்றிணைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்கி அவர்களை வேளாண் சாகுபடி மட்டுமல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்பட செய்வதில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் தொடங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 3 திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
இச்சவால்களை எதிர்கொண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் லாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில் அரசு 3 திட்டங்களை தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெற உருவாக்கி உள்ளது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தி வணிக ரீதியாக வளரும் வகையில் இத்திட்டத்தினை 4 ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழக அரசு ரூ.266 கோடியே 70 லட்சம் ஒப்பளிப்பு செய்துள்ளது.
இத்திட்டத்தினை செயல்படுத்திட வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டத்தினை அரசு செயல்படுத்துவதால் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் உத்தரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும்.
மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
இந்தத் தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஆரணி அருகே தீயில் கருகி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் பரமேஸ்வரி (வயது 17). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த 25-ந் தேதி வீட்டில் அடுப்பில் வெந்நீர் வைப்பதற்காக ஸ்டவ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது அடுப்பு தீ அவருடைய புடவையில் பட்டு, உடல் முழுவதும் பரவியது. இதனால் அலறிதுடித்த அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலையி்ல் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் பிப்ரவரி 10-ந்தேதி தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது.
திருவண்ணாமலை:
கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த முகாம் பிப்ரவரி 26-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. ராணுவத்தில் காலியாக உள்ள தொழில்பிரிவு, உதவி செவிலியர், கால்நடை பராமரிப்புக்கான உதவி செவிலியர், எழுத்தர், பொருட்கள் பாதுகாவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த தேர்வு தற்போது நடைபெறுகிறது.
இந்த பணிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் ஜனவரி 25-ந் தேதிக்கு பிறகு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆட்கள் தேர்வு திருவண்ணாமலையில் உள்ள அருணை என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் எந்த தேதியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒருநாளைக்கு 500 பேர் கலந்து கொள்ளும் வகையி்ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து மேலும் தகவல் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் சென்னையி்ல் உள்ள ராணுவ வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-25674924 மற்றும் 044-25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு நடைமுறை நேர்மையான முறையில் வெளிப்படையாக நடைபெறும். தேர்வில் பங்கேற்கவோ அல்லது ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகவோ யாரேனும் கூறினால் அதை நம்ப வேண்டாம். தகுதியின் அடிப்படையி்ல் மட்டுமே வேலை வழங்கப்படும்.
மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் மையம்(பாதுகாப்பு பிரிவு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் பிப்ரவரி 10-ந் தேதி தொடங்குகிறது. இந்த முகாம் பிப்ரவரி 26-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. ராணுவத்தில் காலியாக உள்ள தொழில்பிரிவு, உதவி செவிலியர், கால்நடை பராமரிப்புக்கான உதவி செவிலியர், எழுத்தர், பொருட்கள் பாதுகாவலர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இந்த தேர்வு தற்போது நடைபெறுகிறது.
இந்த பணிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் ஜனவரி 25-ந் தேதிக்கு பிறகு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம். ஆட்கள் தேர்வு திருவண்ணாமலையில் உள்ள அருணை என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் எந்த தேதியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
ஒரே நாளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒருநாளைக்கு 500 பேர் கலந்து கொள்ளும் வகையி்ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து மேலும் தகவல் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் சென்னையி்ல் உள்ள ராணுவ வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-25674924 மற்றும் 044-25674925 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு நடைமுறை நேர்மையான முறையில் வெளிப்படையாக நடைபெறும். தேர்வில் பங்கேற்கவோ அல்லது ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகவோ யாரேனும் கூறினால் அதை நம்ப வேண்டாம். தகுதியின் அடிப்படையி்ல் மட்டுமே வேலை வழங்கப்படும்.
மேற்கண்ட தகவல் பத்திரிகை தகவல் மையம்(பாதுகாப்பு பிரிவு) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
கலசபாக்கம் தாலுகா வீரளூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). ஆதமங்கலம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (43). இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை காணவில்லை என்று கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில், கடலாடி இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிள்களை திருடியது வெங்கடம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் (20), காந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த மணி என்ற அய்யப்பன் (20) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலையில் செவித்திறன், பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2020-2021-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும் மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்கள் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்லூரி பயிலும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில்புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்று, கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், சுயதொழில் புரிபவராக இருந்தால் சுயதொழில் புரிவதற்கான சான்று மற்றும் மார்புஅளவு புகைப்படம் 2 போன்ற ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.
கலசபாக்கம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
கலசபாக்கம்:
கலசபாக்கம் அருகே உள்ள ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சபீர் வெங்காய வியாபாரி. இவருக்கு திருமணமாகி மரின் (வயது 16) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சபீரின் மனைவி இறந்து விட்டனர். இதனால் அவளது மகள் தந்தையுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மரின் திடீரென வீட்டில் இருந்த டீசலை எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த மரினை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அவரது சாவில் மர்மம் உள்ளதாக கலசப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் உறவினர் ஒருவர் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பா.ஜ.க.விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்து விட்டார், என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நேற்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்று தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வந்தேன். அவருக்கு அரசியலில் நாட்டம் இல்லை. காரணம் ஆன்மிகத்தை விரும்புகிறவர்கள் தேர்தல் அரசியலை விரும்ப மாட்டார்கள்.பாஜக மிகுந்த அழுத்தம் கொடுத்து ரஜினியின் மனதையும் கெடுத்து, உடல் நலத்தையும் கெடுத்து விட்டது.
இது, பாஜகவின் மகத்தான தோல்வியாகும். ரஜினியை கட்சி ஆரம்பிக்க வைத்து அ.தி.மு.க. அரசுக்கு எதிரான வாக்குகள் பெற வைத்து அ.தி.மு.க.வை எளிதில் வெற்றி பெற செய்து விடலாம் என்று தவறான கணக்கு போட்டது. அது, தவறான கணக்கு. ரஜினி ஏதோ ஒரு வகையில் பாஜக விரித்த வலையில் இருந்து வெளியே வந்து விட்டார். அவருக்கு எனது பாராட்டு.

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பா.ஜ.க. தலைமை தான் முடிவெடுக்கும் என்று பாஜக தலைவர்கள் சொல்வது அவர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால் அ.தி.மு.க.விற்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது.
இப்படி அவர்கள் சொல்வதினால் தங்களது சுயமரியாதையை இழந்து நிற்கும் அ.தி.முக. மோசமான சூழ்நிலையை அடையும். அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளரை பாஜக எவ்வாறு முடிவு செய்ய முடியும், இதனை அ.தி.மு.க.வினர் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. எங்களது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி.
இந்த முறை கொள்கைகளுக்காக மக்கள் வாக்களிப்பார்களே தவிர தனி மனிதர்களுக்காக வாக்களிக்க மாட்டார்கள். ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெற்று இருக்கும்
நரேந்திர மோடி ஓரு சர்வாதிகாரி. கடந்த 30 நாட்களுக்கு மேலாக கொட்டுகின்ற பனியில் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். உலகிலேயே விவசாய குடும்பங்கள் வன்முறையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகள் அகிம்சை வழியில் போராடி வருகின்றனர். இதை மோடி புறக்கணிக்கலாம், ஆனால் இதன் விளைவு மக்கள் மோடியை புறக்கணிப்பார்கள்.
விவசாயிகள், புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். ஆனால் அப்போது தமிழக அரசு உதவாமல் வழங்காமல் தற்போது பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது மிகப் பெரிய ஊழல்.
தேர்தலில் வாக்குகளை பெருவதற்கும், ஏழை மக்களின் மனதை மாற்றுவதற்காக இந்தப் பணத்தை வழங்குகின்றனர். இது மிகவும் தவறு. இதனை தேர்தல் ஆணையம் நன்கு கவனித்துக்கொண்டு இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இது போன்று செய்வது மிகவும் தவறானது.
குஷ்புவை விட உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றாகவே அரசியல் தெரியும். அவர், ஒரே கட்சியில் இருக்கிறார். குஷ்பு பல்வேறு கட்சிகளை மாறுகிறார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளேன். தற்போது வரையில் கொரோனா தொற்றிற்கு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட தலைவர் செங்கம் குமார், நகர தலைவர் வெற்றிசெல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தமிழ்அரசு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மோகன், மாநில ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் காமராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
தண்டராம்பட்டு அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு அருகில் உள்ள ரா.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கோமளவள்ளி (வயது 65). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி ரோட்டின் ஓரம் நடந்து வந்த போது பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணாபுரம் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் - மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாணாபுரம்:
கோவை பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 56). இவர், அங்குள்ள சர்க்கரை ஆலையில் வேலை செய்து வருகிறார். இவர், தனது மனைவி சுப்புலட்சுமி (50), மகன்கள் கார்த்திக் (23), அஸ்வின்நடராஜ் (18) ஆகியோருடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காரில் வந்தார். கார்த்திக் காரை ஓட்டினார்.
வாணாபுரத்தை அடுத்த மேல்புத்தியந்தல் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே ஆடுகள் சென்றதால் ஆடுகள் மீது மோதாமல் இருக்க கார்த்திக் ‘பிரேக்’ போட்டதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சுப்புலட்சுமி, கார்த்திக், அஸ்வின் நடராஜ், பழனியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வின் நடராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூசி:
காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39), எலக்ட்ரீசியன். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் டிஜிட்டல் ஒளிர்ப்பலகை (நியான் லைட்) வடிவமைக்கும் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 6 மணியளவில் அவர் தூசி அருகில் உள்ள மாங்கால் கூட்டுரோடு சிப்காட் எதிரே ஒரு பேக்கரி கடையில் டிஜிட்டல் ஒளிர் பெயர் பலகை பொருத்தும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட முருகனை சக ஊழியர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாகின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், அண்ணாமலை மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது போளூர் வழியாக கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்த போளூர் டவுன் பகுதியைச் சேர்ந்த தினகரன் (வயது 32), செல்வராஜ் (47) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி கைது செய்தனர். அவரது மாட்டுவண்டியை மணலுடன் பறிமுதல் செய்தனர்.






