என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஆரணி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
ஆரணி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நூதனமாக நகை பறித்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி டவுன் சைதாப்பேட்டை நாடகசாலைபேட்டை தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரின் மனைவி காளியம்மாள் (வயது 67). சேவூரில் உள்ள இவரது உறவினர் இறந்ததையொட்டி துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது ஒரு டிப்-டாப் ஆசாமி, காளியம்மாளிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, தாலுகா அலுவலகம் அருகில் கட்சி அலுவலகத்தில் இலவசமாக அரிசி, மளிகைப் பொருட்கள், ரூ.2 ஆயிரம் கொடுக்கிறார்கள், அதை வாங்கி கொண்டு போகலாம் வாருங்கள், எனக் கூறினார்.
அதை, உண்மை என்று நம்பிய மூதாட்டி டிப்-டாப் ஆசாமியுடன் சென்றுள்ளார். கட்சி அலுவலகம் அருகில் சென்றபோது மூதாட்டியிடம், போட்டோ எடுக்க வேண்டும் எனக்கூறி ஒரு ஸ்டூடியோ அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்றதும் போட்டோ எடுக்கும்போது, தங்க நகைகள் எதுவும் அணிந்திருக்கக் கூடாது, அதை கழற்றி என்னிடம் கொடுங்கள் எனக் கூறி, மூதாட்டி அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, தாலி சரடு என 2 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டார்.
நீங்கள் போட்டோ ஸ்டூடியோவுக்குள் சென்று போட்டோ பிடித்து வாருங்கள் எனக்கூறி உள்ளே அனுப்பி வைத்து விட்டு, மர்ம ஆசாமி நகைகளுடன் தப்பியோடி விட்டார்.
ஸ்டூடியோவுக்குள் சென்று வெளியே வந்த மூதாட்டி, அந்த நபர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை காணவில்லை. தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த மூதாட்டி அது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






