என் மலர்
திருவண்ணாமலை
திருச்செங்கோடு அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி தண்ணீர்பந்தல் முனியப்பன் கோவிலில் கடந்த 29-ம் தேதி இரவு சிலர் உண்டியலை உடைத்து திருடியதாக கூறப்படுகிறது. அந்த கோவில் கண்காணிப்பு கேமராவில் 2 வாலிபர்கள் உண்டியலை உடைத்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வாலிபர்களின் அடையாளங்களை வைத்து அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் பன்னீர் குத்திபாளையம் பகுதியை சேர்ந்த பாபு (வயது 22), வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (21) ஆகியோரை பிடித்து போலீிசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் உண்டியலை உடைத்து ரூ.2,500 திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ராசிபுரம் சிறையில் அடைத்தனர்.
பெரணமல்லூர் அருகே டிராக்டர் மோதி சவர தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டு:
பெரணமல்லூரை அடுத்த மோட்சவாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 40). இவருக்கு திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். சவரத்தொழிலாளியான இவர், கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி சலூன்கடையை திறக்க காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
கன்னிகோவில் பகுதி அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த ஒரு டிராக்டர் திடீரென அவரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த அவர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக சிவா உயிரிழந்தார் விபத்து குறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசியில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:
வந்தவாசி கோட்டை புதிய காலனியை சேர்ந்தவர் ரபேல். இவர் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். காலை எழுந்து வெளியே வந்தபோது அதனை யாரோ திருடிச்சென்றிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வந்தவாசி கே.எஸ்.கே.நகர் மாபாஷா என்பவர் மகன் அப்துல் அமீது (வயது 24) சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
போலீசாரை பார்த்ததும் அந்த நபர் தப்பிச் செல்ல முயற்சி செய்தார் போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தபோது ரபேல் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை திருடியதை ஒத்துக்கொண்டார். இவர் ஏற்கெனவே வேறொரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியில்வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்துல்அமீதுவை போலீசார் கைது செய்தனர்.
வேட்டவலம் அருகே நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த கோணலூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பவருடைய மனைவி சந்திரா (வயது 70), அண்ணாமலை 22 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தை இல்லாததால் சந்திரா தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி சந்திரா வீட்டில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகை திருட்டு போயிருந்தது.
உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணைபோலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து சந்திராவின் அண்ணன் மகன் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சந்திராவின் கணவர் அண்ணாமலையின், அண்ணன் பாண்டுரங்கன் என்பவரின் மகன் மோகன் (61), சந்திராவை கொலைசெய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சந்திரா தனது உறவினர் மனோகர் குடும்பத்துக்கு மட்டும் பணம் கொடுத்து உதவி செய்து வந்ததாகவும், தனது குடும்பத்துக்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை என்பதால் சந்திராவின் வீட்டுக்கு சென்று தகதராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மோகன், சந்திராவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை எடுத்து சென்றதாக கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சந்திராவின் 3 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மங்கலத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் மாதங்களான சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் கிரகங்களின் சஞ்சாரங்களை கொண்டு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் உத்ராயண புண்ணிய கால கொடியேற்ற விழாவும் ஒன்று. 12 மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலமாகவும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமாகவும் ஆகம நூல்கள் கூறுகின்றன.
தெற்கு நோக்கி நகரும் காலத்தை தட்சணாயின புண்ணிய காலம் என்றும், வடக்கு நோக்கி நகரும் காலத்தை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பார்கள். வடக்கு நோக்கி நகரும் காலத்தை வேதநூல்கள் சிறப்பான காலம் என்று கூறுகிறது.
உத்ராயண புண்ணிய காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான உற்சவம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொடிமரம் முன்பு விநாயகர் மற்றும் அம்பாளுடன், சந்திரசேகரர் எழுந்தருளினார்.
இதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்று விழா காலை 7.05 மணிக்கு தொடங்கி 9 மணி வரை நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பல மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர். விழாவை முன்னிட்டு இன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு சாமி, அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10-வது திருநாளான தை மாத முதல் நாள் ஜனவரி 14-ந்தேதி (வியாழக்கிழமை) தாமரைகுளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
பழையனூரில் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருக்கும் கர்ப்பிணிகள் தங்கும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்:
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையனூர் கிராமம். இப்பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அவசர சிகிச்சை மற்றும் பிரசவத்திற்காக பழையனூரில் உள்ள சுகாதார நிலையத்துக்கு வருகிறார்கள். சுகாதார நிலையம் அருகில் ரூ.24 லட்சம் மதிப்பில் புதிதாக கர்ப்பிணிகள் தங்கும் அறை கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் கர்ப்பிணிகள் தங்கும் அறை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. தினமும் 20-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக இங்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் அவசர சிகிச்சை மற்றும் பிரசவத்திற்கு 16 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவண்ணாமலைக்கு சென்று வந்தோம். இதனால் இப்பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கர்ப்பிணிகள் தங்கும் அறை கட்டப்பட்டது.
கட்டிமுடிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளின் நலன் கருதி கர்ப்பிணிகள் தங்கும் அறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
போளூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் போளூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாசிலை அருகில் லாட்டரி சீட்டுகள் விற்ற போளூரை சேர்ந்த சுந்தரம் (வயது 58), போளூர் பஸ் நிலையத்தில் லாட்டரி சீட்டுகளை விற்ற வெண்மணி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (51), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (43) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.16,500 ரொக்கம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 29-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட்டு, தொடர்ந்து காட்சி அளித்தது.
இந்த மகா தீபத்திற்கு ஏராளமான பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்தி இருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது.
மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு தீப ‘மை’ அணிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10-க்கு தீப ‘மை’ பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் தங்களிடம் உள்ள டோக்கனை வழங்கியும் ‘மை’ பிரசாதத்தை பெற்று கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கோவிலில் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும் தீப ‘மை’ பிரசாதம் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேட்டவலம் அருகே மூதாட்டி வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்:
வேட்டவலத்தை அடுத்த கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. ராணுவ வீரரான அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி சந்திரா (வயது 70). இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் சந்திரா தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையும் காணவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
2020-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 238 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 238 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 58 குழந்தைகளுக்கு திருமணம் நடந்து முடிந்த பிறகு தடுக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் உதவி மையம், மாவட்ட சமூக நலத்துறை மூலமாக குழந்தை திருமணம் தடுப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமின்றி ஏராளமான குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது. 238 குழந்தை திருமணங்கள் என்பது அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது தான். ஆனால் கணக்கில் வராமல் எத்தனை குழந்தை திருமணங்கள் நடந்ததோ என்று தெரியவில்லை.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு குறைவால் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறதா என்றும் தெரியவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஆண்டிலாவது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை குறைக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 238 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 58 குழந்தைகளுக்கு திருமணம் நடந்து முடிந்த பிறகு தடுக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் உதவி மையம், மாவட்ட சமூக நலத்துறை மூலமாக குழந்தை திருமணம் தடுப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமின்றி ஏராளமான குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது. 238 குழந்தை திருமணங்கள் என்பது அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது தான். ஆனால் கணக்கில் வராமல் எத்தனை குழந்தை திருமணங்கள் நடந்ததோ என்று தெரியவில்லை.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு குறைவால் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறதா என்றும் தெரியவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஆண்டிலாவது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை குறைக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வழக்கத்தை விட ரூ.1 கோடி அதிகமாக மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் 218 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த கடைகள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.3¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோலாகலமாக கொண்டாடினர்.
புத்தாண்டை நேற்று முன்தினம் மதுபிரியர்களும் சிறப்பாக கொண்டாடினர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கத்தை விட ரூ.1 கோடி அதிகமாக மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளது. அதாவது நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.4 கோடிேய 26 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






