என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை:
உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் பரவலுக்கு முடிவு கட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தமிழகம் முழுவதும் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த மருத்துவ நிபுணர்களை பாராட்டும் வகையிலும் நன்றி செலுத்தும் வகையிலும் திருவண்ணாமலையில் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு இசை நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இதுகுறித்து நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் கூறியதாவது:-
கொரோனா அனைத்து தரப்பு மக்களின் வாழ்வையும் சீர் குலைத்து விட்டது. அதற்கு தீர்வு காணும் வகையில் மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.
இது மனித குலத்திற்கு செய்யும் பேருதவி ஆகும். இப்பணியில் ஈடுபட்ட மருத்துவ நிபுணர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினோம் என்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் வருகிற 17-ந் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:-
5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முன்னரே போலியோ சொட்டு மருந்து அளித்தாலும், 17-ந் தேதி இலவசமாக சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. கொரோனா காலம் என்பதால் போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வரும்போது முகக்கவசம் அணிந்து வருவதுடன் சமூக இடைவெளியும் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 952 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 7814 பணியாளர்களுடன், 2031 பகுதிகளில் முகாம்கள் செயல்பட உள்ளது. இதற்கான பணியாளர்கள் முகாம் நடைபெறும் நாளன்று அந்தந்த முகாம்களிலேயே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பார்கள். மறுநாள் முதல் பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிப்பார்கள்.
இதில் கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், ரெயில் நிலையம், பஸ் நிலையம், திரையரங்குகள், தங்கும் விடுதிகள் போன்ற இடங்களிலும் நடமாடும் முகாம் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒரு குழந்தை கூட விடுபடாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயினை ஒழிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, இணை இயக்குனர் (நலப் பணிகள்) கண்ணகி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) அஜிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். அணையின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதேபோல் ஏரிகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன. இந்த அணையின் நீரை கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
செங்கம் பகுதிகளில் நேற்று முன்தினம் 11.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் சாத்தனூர் அணையின் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 3,541 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது
நீர்வரத்து காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. 4 ஆயிரத்து 355 மில்லியன் கன அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே அளவு நீர் வரத்து இருந்தால் சாத்தனூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் 60 அடி உயரம் கொண்ட குப்பநத்தம் அணையில் 45.90 அடியும், 22.97 அடி உயரமுள்ள மிருகண்டா அணையில் 4.59 அடியும், 62.32 அடி உயரமுள்ள செண்பகத்தோப்பு அணையில் 58.02 அடியும் தண்ணீர் உள்ளது.
செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். இவர்களில் இளைய மகள் சுதா (19) கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் வந்தார். பெற்றோருடன் வந்த இளைய மகள் சுதா குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்த சுதா, நீரில் மூழ்கி இறந்து விட்டார்.
மகள் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் மகளின் கண் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கொடுக்கலாமே என கருதிய அவர் அது குறித்து செய்யாறு தன்னார்வ அமைப்புக்கு தெரிவித்தார். அவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துமனையினர் சுதாவின் கண்களை தானமாக பெற்றனர். இந்த நிகழ்வு கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் செல்வாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30), லாரி டிரைவர். இவருடன் அவருடைய தாய் மற்றும் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். சிலம்பரசன் நேற்று முன்தினம் வேலை தொடர்பாக வெளியே சென்று விட்டார்.
அவரது தாய் மணலூர்பேட்டையில் தனது மகள் வீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் சிலம்பரசனின் மனைவி வீட்டை பூட்டி விட்டு அதேபகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சிலம்பரசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்துள்ளது.
இதை பார்த்த பக்கத்து வீட்டினர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே சிலம்பரசனும், அவரது மனைவியும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சிதறி கிடந்து உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துசென்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சிலம்பரசன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்தகொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.






