என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    கலசபாக்கம் அருகே புனிதவெள்ளியையொட்டி தேவாலயத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மனைவி கண் முன்பே லாரி மோதி தொழிலாளி மகனுடன் பரிதாபமாக இறந்தார்.
    கலசபாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியை அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாஸ் (வயது 32), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அல்போன்ஸ் (28) என்ற மனைவியும், சேவன் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு போளூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதற்காக தாஸ் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தையுடன் போளூர் நோக்கி செங்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மேல்வன்னியனூர் அருகில் 3 புளியமரம் என்ற இடத்தில் போளூரில் செங்கல் சூளைக்கு மண் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தாஸ் மற்றும் சேவன் ஆகிய இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி மனைவி கண் முன்பாகவே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
    எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி தான் உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆரணியில் நேற்று மாலை அண்ணா சிலை அருகே திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஒரு விவசாயி. நம்மில் ஒருவர் விவசாயியாக இருப்பது பெருமை. ஆனால் தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பவர் ஒரு அரசியல் வியாபாரி. ஆனால் நம் கூட்டணியில் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருப்பவர் ஒரு சாமானியர், நெற்றியில் வேர்வை சிந்தும் அவர்தான் விவசாயி.

    எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஸ்டாலினுக்கு கருணாநிதி மகன் என்ற ஒரே தகுதி தான் உள்ளது. சமூகநீதி அடிப்படையில் 40 ஆண்டு காலமாக நாம் கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஸ்டாலின் சட்டமன்றத்தில் என்றைக்காவது மக்கள் பிரச்சினை குறித்து பேசியுள்ளாரா? ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் வெளிநடப்பு செய்வது தான் வாடிக்கையாக வைத்திருந்தார்.
    ஸ்டாலின்

    தி.மு.க. கட்சியானது தற்போது ஒரு கம்பெனியாக தான் செயல்படுகிறது. பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் என்பவரை தான் நம்பியுள்ளது. கட்சியில் உள்ளவர்களை நம்பவில்லை. மு.க.ஸ்டாலினிடம் கொள்கையில்லை. பிரசாந்த் கிஷோர் சொல்பவர் தான் நகர, ஒன்றிய செயலாளர்கள், ஏன் வேட்பாளர்கள் கூட அவர் சொல்பவர் தான். மேலும் ஒருபடி மேலேசொல்லவேண்டும் என்றால் வாக்குச்சாவடி மையத்தில் யார் அமரவேண்டும் என்று கூட அவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

    இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். நமது கூட்டணி கட்சியின் வேட்பாளரான அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நன்கு அறிமுகமானவர், அவரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மந்திரியான ராசா முதல்-அமைச்சரை விமர்சனம் செய்கிறார். அவரது தாயார் உயிருடன் இல்லை, அவரை தவறாக பேசி வருகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் அவர்களின் நிலை. நம்கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற அனைவரும் பாடுபடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஆ.வேலாயுதம், மாவட்ட துணை செயலாளர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, நிர்வாகிகள் வெங்கடேசன், ராஜசேகர், சதீஷ்குமார், சேவூர் சிவா, பேராசிரியர் சிவா, சேவூர் குமார், பிச்சாண்டி, மெய்யழகன், ஏ.கே.ராஜேந்திரன், கருணாகரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோவிந்தராசன், கஜேந்திரன், சேகர், திருமால், சங்கர், சீனுவாசன், எம்.வேலு, உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    வேன் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த கானலாபாடியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42), விவசாயி. இவர் நிலத்தில் உள்ள பயிர்களை குருவிகள் சாப்பிடுவதை தடுக்க பட்டாசு வெடித்து உள்ளார். அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்காக அதேபகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (22), வெங்கடேசன் (22) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டியதாக கூறப்படுகிறது.

    திருவண்ணாமலை தீபம் நகர் அருகில் வந்த போது எதிரே வந்த லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ஏழுமலை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பிரவீன்குமார், வெங்கடேசன், லோடுவேனை ஓட்டி வந்த திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்த விஜய் (22), கிளினர் காளி ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெங்கடேசன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணியில் விற்பனையாளரிடம் ரூ.2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    ஆரணி:

    ஆரணி கொசப்பாளையம் ரூப்சிங் தெருவைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது 45). இவர் ஆரணியில் உள்ள தனியார் மசாலா ஏஜென்டிடம் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் போளூர் பகுதியில் வேனில் பொருட்களை விற்பனை செய்து விட்டு மீண்டும் ஊர் திரும்பினார்.

    அப்போது ஆரணி - சைதாப்பேட்டை அருகே ஆரணி தேர்தல் பறக்கும் படையினர் தோட்டக்கலை உதவி அலுவலர் கோவிந்தன், சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு மற்றும் குழுவினர் சோதனை செய்தபோது தனசேகரிடம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 160 இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஆரணி தாசில்தார் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கருவூலத்தில் பணம் செலுத்தப்பட்டது.
    சேத்துப்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது 26), முனியாண்டி (53) உள்பட 3 பேர் தளவாடி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திக்கொண்டு வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் ஓடிவிட்டார். இதையடுத்து சரவணன், முனியாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர எளிமையானவன், உங்களில் ஒருவன், உங்களுக்காக உழைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என கே.வி.சேகரன் எம்எல்ஏ வாக்கு கேட்டார்.
    போளூர்:

    போளூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.வி.சேகரன் போளூர் ஒன்றியத்தில் நேற்று காலை முதல் சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம் நரசிங்கபுரம், பத்தியாவரம், ஓதலவாடி, தும்பூர், ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், மன்சுரபாத், ராந்தம், அரும்பலூர், முடையூர், ஊத்தூர் உள்பட பல்வேறு பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் கிராமம் கிராமமாக சென்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில்கூறப்பட்டுள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ,1,000, கொரோனா கால நிதி ரூ.4,000 வழங்குதல், கல்வி கடன் ரத்து, கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்ளிட்ட திட்டங்களை விளக்கி, பொதுமக்கள் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த மனுக்கள்மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என உறுதியளித்து வாக்கு சேகரித்தார்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர எளிமையானவன், உங்களில் ஒருவன், உங்களுக்காக உழைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என வாக்கு கேட்டார். அனைத்து பகுதிகளிலும் பெண்கள் திரளாக வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் ராணி அர்ஜூனன், ஒன்றிய செயலாளர் மனோகரன், எழில்மாறன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அம்பிகா குப்புசாமி, செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரேமலதா ராஜசிம்மன் உள்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.
    வந்தவாசியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த தென்னாங்கூர் தோப்பு காலனியை சேர்ந்தவர் விஜயன்(வயது 35) கூலித்தொழிலாளி. அவருடைய அண்ணன் மகன் தேவதாஸ் (9) கடந்த 26-ந் தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனான். அதனால் மனமுடைந்த விஜயன் சம்பவத்தன்று தனது மனைவி நாகவள்ளியிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பயங்கரஅலறல் சத்தம் கேட்டுள்ளது.

    வீட்டின் பின்னால் போய் பார்த்த போது, அங்குள்ள மரத்தில் விஜயன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 674 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் 19 ஆயிரத்து 317 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 72 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 285 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    வந்தவாசியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது 250 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வந்தவாசி சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது 250 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், வந்தவாசி திண்டிவனம் சாலை காளி கோவில் தெருவை சேர்ந்த உசைன் (வயது 27) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது டாஸ்மாக்கில் பணிபுரியும் எம்.ஆனந்தன், பி.முருகன், எம்.ராமலிங்கம் ஆகியோரிடம் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக உசைன் கூறினார்.

    இதையடுத்துடாஸ்மாக் ஊழியர்கள் மீது வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதை உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் உள்பட கிரிவலப்பாதை உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி இரவு முதல் 29-ந் தேதி காலை வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதை உள்ள அஷ்டலிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.71 லட்சத்து 6 ஆயிரத்து 437-ம், 171 கிராம் தங்கமும், 393 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைத்தது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 285 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 661 ஆக உயர்ந்துள்ளது. 

    இதில் 19 ஆயிரத்து 307 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 69 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 285 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
    செய்யாறு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 23 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறை அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செய்யாறு நகரில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சரக்கு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினர்.

    செய்யாறு அருகே காஞ்சீபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 10 சிறுவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக சென்ற கார்களின் மூலம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தீபக், முனுசாமி, கன்னியம்மாள், கண்மணிபாப்பா, ஜெயஸ்ரீ உள்பட 7 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×