என் மலர்
செய்திகள்

விபத்து
திருவண்ணாமலை அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- விவசாயி உள்பட 2 பேர் பலி
வேன் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையை அடுத்த கானலாபாடியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 42), விவசாயி. இவர் நிலத்தில் உள்ள பயிர்களை குருவிகள் சாப்பிடுவதை தடுக்க பட்டாசு வெடித்து உள்ளார். அப்போது அவரது கையில் காயம் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்காக அதேபகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (22), வெங்கடேசன் (22) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை பிரவீன்குமார் ஓட்டியதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை தீபம் நகர் அருகில் வந்த போது எதிரே வந்த லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ஏழுமலை படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பிரவீன்குமார், வெங்கடேசன், லோடுவேனை ஓட்டி வந்த திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்த விஜய் (22), கிளினர் காளி ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெங்கடேசன் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






