என் மலர்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). இவரும், திருவண்ணாமலை புதுத்தெருவை சேர்ந்த அப்பு என்ற வெங்கடேசன் (21) என்பவரும் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளனர். நேற்று காலை வரை அவர்கள் வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்களது குடும்பத்தினர் பிரபாகரனையும், வெங்கடேசனையும் பல இடத்தில் தேடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவலூர்பேட்டை சாலை பச்சையப்பன் நகரில் உள்ள விவசாய கிணற்றின் அருகில் பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் நின்று உள்ளது. இதனால் அவர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது பிரபாகரன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
2 பேரின் உடல்களும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், வெங்கடேசனுக்கு நீச்சல் தெரியும் என்றும், குடிபோதையில் பிரபாகரன் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம். அவரை காப்பற்ற வெங்கடேசன் கிணற்றில் இறங்கியதில் 2 பேரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் 145 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் நேற்று வரை 48 ஆயிரத்து 874 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனா். இதில் 47 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.
தற்போது ஆயிரத்து 80 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 591 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வெங்கடேசன் (வயது 31). அவர் பணியில் இருந்த போது அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் பள்ளி நிர்வாகம் அவரை திடீரென வேலையில் இருந்து நீக்கியது. இருந்தபோதிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்த மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற ஆசிரியர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று எச்சரித்து விட்டு சென்றுவிட்டார். தகாத உறவினால் தற்போது 6 மாத கர்ப்பிணியான மாணவி மன உளைச்சலில் தவித்து வந்தார்.
பின்னர் தனது பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் நேற்று திருவண்ணாமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பரசி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை அழைத்து வந்து விசாரணை நடத்தினார்.
அதில் குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து அவர்மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆசிரியர் வெங்கடேசனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணமாகி உள்ளது. அதனை அவர் மறைத்து மாணவியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவரை பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பென்னாத்தூரில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 72). இங்குள்ள வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கடைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராமச்சந்திரன் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கழிக்குளம் கொல்லை கொட்டாயில் வசிப்பவர் தசரதன். இவரது மகன் பாலாஜி (வயது 22), பண்ருட்டியில் உள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பாலாஜி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சத்தியாநந்தன் மற்றும் தனிப்படை போலீசார் போளூர் மாட்டுப்பட்டி தெருவில் சீனுவாசன் (வயது 47) என்பவரின் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.
அங்கு, 2¼ கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து விற்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சீனுவாசனை கைது செய்து போளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்.
மேலும் தனிப்படை போலீசார் போளூரை அடுத்த வசூர் கிராமத்துக்கு அருகில் உள்ள கல்குவாரி அருகே சோதனைச் செய்தனர். அங்கு, போளூர் அல்லிநகரை சேர்ந்த செல்வி (34) என்பவர் சாராயம், கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரின் வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சா, 30 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவரை திருவண்ணாமலை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, 15 நாள் காவலில் வைத்தனர்.
ஆனி மாதத்திற்கான பவுர்ணமி காலம் இன்று காலை 3.32 மணிக்கு தொடங்கி இரவு 12.09 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று ஏற்கனவே கலெக்டர் அறிவித்தார்.
அதன்படி கிரிவலப் பாதையில் போலீசார் தடுப்புகள் வைத்து இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்வதை தடுத்து வருகின்றனர். அந்த வழியாக செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிரிவலம் செல்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள் கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்கின்றனர். இவ்வாறு ஒரு சில பக்தர்கள் மட்டுமே செல்வதால் அவர்களை போலீசாரால் முழுமையாக தடுக்க முடியவில்லை.
அஷ்ட லிங்க சன்னதிகள் மற்றும் ஆசிரமங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் பக்தர்கள் அண்ணாமலையை சுற்றி வந்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
பக்தர்கள் வருகை இல்லாததால் கிரிவலப் பாதையில் தங்கியிருக்கும் சாதுக்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
கிரிவலப்பாதையில் பவுர்ணமி காலங்களில் வியாபாரம் செய்து பிழைத்து வந்த சிறு வியாபாரிகளும் ஊரை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
மேலும் கிரிவல பாதையில் பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வந்த கிராம பெண்களும் அந்த தொழிலை செய்ய முடியாமல் வருமானமின்றி வாடுகின்றனர். பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் பயணிகள் யாரும் வரவில்லை.
திருவண்ணாமலையில் தினமும் கிரிவலம்செல்லும் பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
சிலர் நடந்தும் சிலர் சைக்கிளிலும் சென்று வருவார்கள். அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில்கிரிவலம் சென்று வருவது வழக்கம்.
ஊரடங்கால் அவர்களும் கிரிவலம் செல்ல முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர்.
கொரோனா ஊரடங்கு நீடிப்பதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும் கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாதத்திற்கான பவுர்ணமிஇன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.10 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.55 மணிக்கு நிறைவடைகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த மாத பவுர்ணமிக்கும்திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் பவுர்ணமிகிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்






