என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் நிகழ்ச்சி.
    • நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறியாளர் பாரதிதாசன் தலைமையில் புவி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தி ஆக்சிஜனை அதிகப்படுத்தவும் பொன்னேரி பழவேற்காடு ஏலியம்பேடு சாலை ஓரங்களில் 500 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் புருஷோத்தமன், குமார், மோகன்தாஸ் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று முன்தினம் வெட்டுகாலனி பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மெதிப்பாளையத்தை சேர்ந்த சந்துரு (வயது 23), கம்மார்பாளையத்தை சேர்ந்த கலைமணி (30), மங்காவரத்தை சேர்ந்த அஜீத் (26) மற்றும் வெங்கடாதிரிபாளையத்தைச்சேர்ந்த லோகேஷ் (23) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர்.மேலும் இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர்.

    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

    எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, இங்குள்ள தொழிற்சாலை நிறுவளங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தொழிற்சாலைக்குச் செல்லும் மின்மாற்றி பழுதடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கி உள்ளன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது காக்களூர் மற்றும் ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்பை துண்டித்து அதனை காக்களூர் தொழிற்பேட்டைக்கு பகல் நேரத்தில் மட்டும் வழங்க இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அடுத்த நசரத் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று இரவும் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ரோட்டில் மரங்களை வெட்டிபோட்டு 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இரு மார்க்கத்திலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் வெங்கல் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிரா மமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கிராமமக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.
    • கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    இதனிடையே கோடை வெயில் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறந்திருக்கும் தண்ணீரை தொடர்ந்து அக்டோபர் மாதம் வரை திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். எனவே கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

    இதற்கிடையே ஆந்திராவில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளனர்.

    இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகமாகியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு இன்று காலை பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 250 கன அடி வீதம் இணைப்பு கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 27.71 அடியாக பதிவானது. 1.271 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது.
    • ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளிய சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது. அவர்கள் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர், அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த உப்பளம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. திருமணமான சில மாதத்திலேயே சாந்தி கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் பாலாஜி தனியாக பொன்னேரி பகுதியில் வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் மனவேதனையில் இருந்த அவர் பொன்னேரி ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர்.
    • காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவாலங்காடு அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளனர். பிளஸ்-1 படிக்க இருந்தனர்.

    இவர்கள் இருவரும் உறவினரான அதே பகுதியில் வசித்து வரும் மகேஷ் (22) என்பவரை காதலித்தனர். அவரும் இரட்டை சகோதரிகளை காதலிப்பதாக கூறி இருவரிடமும் நெருங்கி பழகினார். மகேஷ் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இரட்டை சகோதரிகளும் தங்களது விபரீத காதலை ஒரே வாலிபருடன் வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரிந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகேசையும், இரட்டை சகோதரி மாணவிகளையும் பெற்றோர் கண்டித்து அறிவுரை கூறினர். எனினும் அவர்களது காதல் தொடர்ந்து நீடித்து வந்தது.

    இந்நிலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த இரட்டைசகோதரிகள் மற்றும் மகேஷ் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று மாலை அவர்கள் அப்பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் இரட்டை சகோதரி மாணவிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு மாணவி மற்றும் மகேஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது நிலைமையும் மோசமாக உள்ளது. இச்சம்பவம் திருவாலங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி,2-வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் குப்பைகளை தரம்பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நடைபெறும் இடம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள், குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அண்ணாநகரில் பிரபல தனியார் நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு சேத்துப்பட்டை சேர்ந்த பரத் என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவடி, அம்பத்தூர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பணத்தை வசூல் செய்தனர். அப்போது வசூல் செய்த பணத்தை காரில் வைத்து இருந்தனர். காரில் டிரைவராக கொடுங்கையூரை சேர்ந்த அமீர் பாஷா என்பவர் இருந்தார்.

    அம்பத்தூரில் உள்ள ஒருநிறுவனத்தில் ஊழியர்கள் வசூல் செய்ய சென்றபோது பணம் இருந்த காரை திடீரென டிரைவர் அமீர் பாஷா ஓட்டி தப்பி சென்று விட்டார். அந்த காரில் ரூ.35½ லட்சம் ரொக்கம் இருந்தது. இதனால் வசூலில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அந்த காரில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு இருந்தது. அதனை வைத்து பார்த்த போது பணத்துடன் கார், மாதவரம் நோக்கி செல்வது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து காரில் பணத்துடன் தப்பி செல்லும் டிரைவர் குறித்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் விரைந்து சென்று மாதவரம் மண்டல அலுவலகம் முன்பு காரை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த ரூ.35½ லட்சத்தையும் மீட்டனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் உதவி மேலாளர் பரத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் பணத்துடன் தப்ப முயன்ற டிரைவர் அமீர்பாஷாவை கைது செய்தனர். காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் அவர் உடனடியாக சிக்கிக்கொண்டார். அவருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.
    • பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவில் தற்போது 39 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் தமிழகத்திற்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    அதன்படி கடந்த மாதம் 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்தத் தண்ணீர் இன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வினாடிக்கு 328 கன அடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து இன்று காலை வரை ஒரு மாதத்தில் பூண்டி ஏரிக்கு 500 மில்லியன் கன அடி கிருஷ்ணா தண்ணீர் வந்து சேர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர்மட்டம் 27.70 அடியாக பதிவானது. 1.270 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவில் தற்போது 39 சதவீதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் என்று தெரிகிறது.

    • ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சத்யாவை சந்திக்க மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த நண்பர்களான லோகேஷ், திருவள்ளூர் ஐ.ஆர்.என். பின்புறம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கோழிப் பண்ணை அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த லோகேஷ் மற்றும் ரவி ஆகியோர் சத்யாவை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். மேலும் வலது கை கட்டை விரல், நடு விரலையும் கத்தியால் துண்டித்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம்கேட்டு வந்த சத்யாவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் சத்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.
    • சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 28 வார்டுகளில் பொது மக்களுக்கு இடையூறாக பஸ் நிலையம், முக்கிய வீதி, பஜார், தெருக்களில், சாலை ஓரங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனை சார்ஆட்சியர் ஐஸ்வர்யா ஆய்வு செய்து பொது இடங்களில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

    அதன்படி பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர். மேலும் அனுமதியின்றி பேனர் வைத்தால் அபராதம் விதித்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

    ×