என் மலர்
திருவள்ளூர்
- ரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளுரை அடுத்த காக்களூரில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 11 பேர் காரில் வந்தனர்.
மீண்டும் இரவு 10 மணி அளவில் அங்கு திரும்பிச் சென்றனர். திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலை ராமாபுரம் அருகே சென்ற போது காரின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. எதிரே உள்ள மின் கம்பத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் இந்த விபத்தில் திவாகர், ஏஞ்சலின், ரம்யா, இவாஞ்சலின், மோனிகா, தஸ்வின்குமார் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர்.
- புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் விபூஷ்னியா டாக்டர். இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டரான லோகேஸ்வரனுக்கும் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகளான டாக்டர் ஜோடி தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவுக்கு சென்றனர். அங்குள்ள ஓட்டலில் தங்கி புதுமண ஜோடி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலித்தீவில் உள்ள கடலில் மோட்டார் படகில் சென்றபோது தவறி விழுந்ததில் தம்பதிகள் விபூஷ்னியா-லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சென்னையில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர். இதற்கிடையே புதுமண ஜோடி போட்டோ ஷூட் எடுத்தபோது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவத்தன்று தம்பதியினர் விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகிய இருவரும் உற்சாகத்துடன் போட்டோ ஷூட்டுக்காக கடலில் மோட்டார் படகில் சென்று உள்ளனர். அப்போது வேகமாக திரும்பியபோது படகு கடலில் கவிழ்ந்து உள்ளது. இதில் சிக்கிய புதுமண தம்பதி விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகியோர் கடலில் மூழ்கி இறந்து போய் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலில் மூழ்கிய லோகேஸ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையும், விபூஷ்னியாவின் உடல் நேற்றும் கடலில் மீட்கப்பட்டது.
புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பலியான விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஜோடியின் உடலை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து நேரடி விமானம் இல்லை. எனவே உடல்கள் மலேசியா வழியாக சென்னை கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். எனவே உடல்களை கொண்டு வர 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகலாம் என்று உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தேனிலவு கொண்டாட சென்ற புதுமண தம்பதி திரும்பி வந்ததும் வரவேற்க தயாராக இருந்த உறவினர்கள் அவர்கள் பலியானது அறிந்ததும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
- தேவகி திருவிழாவிற்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார்.
- தேவராஜ் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கனகம்மாசத்திரம்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் தேவராஜ் (வயது 38). இவர் திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த வாரம் தேவராஜின் மனைவி தேவகி திருவிழாவிற்காக அரக்கோணம் அருகே உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றார். வீட்டில் தேவராஜ் மற்றும் அவரது தாயார் சுசிலா மட்டும் இருந்து வந்தனர். இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த புதன்கிழமை தேவராஜ் வேலைக்கு சென்றார். அவரது தாயார் தேவகி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டில் மறைவான இடத்தில் வைத்து வெளியே சென்றார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் சாவியை எடுத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். அந்த நேரத்தில் திருவிழாவிற்கு சென்ற தேவகி வீடு திரும்பினார். அப்போது வீட்டினில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து தேவகி தனது கணவர் தேவராஜுக்கு தகவல் தெரிவித்தார்.
தேவராஜ் கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டை திறந்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
- பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அனல்மின் நிலைய 2-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் கசிவை மின் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நரசமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவரது மகள் ஹேமாவதி (15). இவர் கடந்த மே மாதம் 14-ந் தேதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது கோவில் அகல் விளக்கில் இருந்து ஹேமாவதியின் சுடிதாரில் தீப்பற்றியது. இதனால் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுமி ஹேமாவதியை தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் சிறுமி ஹேமாவதி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி சிறுமி ஹேமாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
- பொதுமக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் புகார் மனு அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த புதுவாயல், வில்லியர் காலனியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வில்லியர் காலனி அருகே உள்ள நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்கள் கூறுகையில், 'செல்போன் டவர் அமைப்பதால், வில்லியர் காலனியில் இருந்து வெளியேறும் மழை நீர் கால்வாய் அடைபட்டு விட்டது. மேலும் இந்த செல்போன் டவர் விதிமுறைகளை பின்பற்றாமல், அதை சுற்றி போதுமான இடைவெளிவிடாமல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனை விளைவிக்கும் வகையில் நிறுவப்படுகிறது.
இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருவதால் செல்போனால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு ஆளாகி உடல் உபாதைகள் ஏற்படுகிறது' என்று குற்றம்சாட்டினார்கள்.
இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் புகார் மனு அளித்தனர்.
- குடும்ப தகராறு காரணமாக நந்தியம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் இருளர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவர் குடும்ப தகராறு காரணமாக நந்தியம்பாக்கம் அரசுப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
- விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
- தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போனில் பேசி சமாதானப்படுத்தினார்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த கல்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவரது மனைவி ஐஸ்வர்யா (22). இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஐஸ்வர்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரி சாலையில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது பின்னால் சாம்பல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அஜித், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் லாரியில் சிக்கி நசுங்கினர். சம்பவ இடத்திலேயே ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் அஜித்தின் கால் உடைந்தது.
விபத்து நடந்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த அஜித்துக்கு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு இறந்த ஐஸ்வர்யாவின் உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் நரிக்குறவர்கள் காலனி அருகே மீஞ்சூர்- காட்டூர் சாலையில் உடலை வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்ததும் பொன்னேரி எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போனில் பேசி சமாதானப்படுத்தினார்.
உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் 3 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
- கைரேகையால் அவர்களை போலீசார் திருட்டு நடந்த ஒரே நாளில் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்:
செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். விவசாயி. இவர் கடந்த 7-ந் தேதி வெளியே சென்றார். இரவு வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கினார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அகிலனின் வீட்டின் பூட்டை உடைத்து பீராவில் இருந்த 40 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பதிந்து இருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்ட ஆவடி பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்கிற சஞ்சய் (18), பட்டாளம் பகுதியைச் சேர்ந்த லாசர், வில்லிவாக்கத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைரேகையால் அவர்களை போலீசார் திருட்டு நடந்த ஒரே நாளில் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான 3 பேரும் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது21).இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு வந்து இருந்தார். இந்த நிலையல் திடீரென அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
- பணிக்கு கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்று மூலப்பொருட்களை சப்ளை செய்து வந்தது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதன் 4-வது நிலை மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு பகுதியில் அமைக்கும் பணி ரூ.9800 கோடி மதிப்பில் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த 4-வது நிலையின் மூலமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி இரண்டு அலகுகளில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த பணிக்கு கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்று மூலப்பொருட்களை சப்ளை செய்து வந்தது.
அந்த நிறுவனத்திற்கு மணல், ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்களை சப்-காண்டிராக்டர்கள் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு அந்த நிறுவனம் தங்களால் மூலப் பொருட்களை வழங்க இயலாது என்று கூறி வெளியேறியது. ஆனால் 50-க்கும் மேற்பட்ட சப்-காண்டிராக்டர்களுக்கு நிலுவைத்தொகையை அவர்கள் வழங்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ரூ.10 கோடி வரை நிலுவைத்தொகை இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அனல்மின் நிலைய பணிக்கு மூலப்பொருட்களை சப்ளை செய்த சப்-காண்டிராக்டர்கள் 4-வது நிலை அனல் மின் நிலைய வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவ்வழியே வேறு வாகனங்களையும் உள்ளே விடாமல் தடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து காண்டிராக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- காயமடைந்த வியாபாரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
- குற்றவாளிகளை கைது செய்து தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கண்ணூர் கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் உதயகுமார்(வயது29) ஆவார். இவர் தண்டலச்சேரி பகுதியில் பால் டெப்போ ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் ஆரணி பஜார் வீதியில் உள்ள அம்மன் கோவில் அருகே கொரியர் சர்வீஸ் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.அப்பொழுது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் உதயகுமாரை வழிமறித்தனர்.
பின்னர்,அவரது கழுத்தில் இருந்த 12 கிராம் தங்கச் செயினை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த உதயகுமாரை கத்தி முனையில் மிரட்டி சரமாரியாக தாக்கினர். பின்னர்,அவரது கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர்,இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து பால் வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி தங்கச்செயினை பறித்துச் சென்ற ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர்களான தமிழ் (எ) தமிழரசன்(வயது25), கார்த்திக்(வயது23) ஆகியோரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த தகவலின்படி தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் தமிழ் (எ) தமிழரசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர்,போலீசார் குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பால் வியாபாரியிடம் வாலிபர்கள் இரண்டு பேர் கத்தி முனையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






