என் மலர்
உள்ளூர் செய்திகள்

செவ்வாப்பேட்டையில் 40 பவுன் நகை-ரூ.5 லட்சம் கொள்ளையில் வாலிபர்கள் 3 பேர் கைது
- செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
- கைரேகையால் அவர்களை போலீசார் திருட்டு நடந்த ஒரே நாளில் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்:
செவ்வாப்பேட்டை அடுத்த தொழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன். விவசாயி. இவர் கடந்த 7-ந் தேதி வெளியே சென்றார். இரவு வீட்டில் தனியாக இருந்த அவரது தாய் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டில் தூங்கினார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அகிலனின் வீட்டின் பூட்டை உடைத்து பீராவில் இருந்த 40 பவுன் தங்கம், 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.5 லட்சத்து 61 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பதிந்து இருந்த ரேகைகளை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது ஏற்கனவே குற்றச்செயலில் ஈடுபட்ட ஆவடி பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்கிற சஞ்சய் (18), பட்டாளம் பகுதியைச் சேர்ந்த லாசர், வில்லிவாக்கத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைரேகையால் அவர்களை போலீசார் திருட்டு நடந்த ஒரே நாளில் கைது செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான 3 பேரும் வேறு எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






