search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போட்டோ ஷூட்டில் படகு கவிழ்ந்து பலியான புதுமண தம்பதி உடல்களை சென்னை கொண்டுவர ஏற்பாடு
    X

    போட்டோ ஷூட்டில் படகு கவிழ்ந்து பலியான புதுமண தம்பதி உடல்களை சென்னை கொண்டுவர ஏற்பாடு

    • பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர்.
    • புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்தவர் விபூஷ்னியா டாக்டர். இவருக்கும் சென்னையை சேர்ந்த டாக்டரான லோகேஸ்வரனுக்கும் கடந்த 1-ந் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது.

    திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகளான டாக்டர் ஜோடி தேனிலவுக்காக இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவுக்கு சென்றனர். அங்குள்ள ஓட்டலில் தங்கி புதுமண ஜோடி பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலித்தீவில் உள்ள கடலில் மோட்டார் படகில் சென்றபோது தவறி விழுந்ததில் தம்பதிகள் விபூஷ்னியா-லோகேஸ்வரன் ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து சென்னையில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பாலி கடலில் மூழ்கிய 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வர உறவினர்கள் இந்தோனேசியா சென்று உள்ளனர். இதற்கிடையே புதுமண ஜோடி போட்டோ ஷூட் எடுத்தபோது கடலில் தவறி விழுந்து இறந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவத்தன்று தம்பதியினர் விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகிய இருவரும் உற்சாகத்துடன் போட்டோ ஷூட்டுக்காக கடலில் மோட்டார் படகில் சென்று உள்ளனர். அப்போது வேகமாக திரும்பியபோது படகு கடலில் கவிழ்ந்து உள்ளது. இதில் சிக்கிய புதுமண தம்பதி விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஆகியோர் கடலில் மூழ்கி இறந்து போய் இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலில் மூழ்கிய லோகேஸ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையும், விபூஷ்னியாவின் உடல் நேற்றும் கடலில் மீட்கப்பட்டது.

    புதுமண ஜோடியின் உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அங்குள்ள போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பலியான விபூஷ்னியா- லோகேஸ்வரன் ஜோடியின் உடலை சென்னை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்தோனேசியாவில் இருந்து நேரடி விமானம் இல்லை. எனவே உடல்கள் மலேசியா வழியாக சென்னை கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். எனவே உடல்களை கொண்டு வர 4 அல்லது 5 நாட்கள் வரை ஆகலாம் என்று உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேனிலவு கொண்டாட சென்ற புதுமண தம்பதி திரும்பி வந்ததும் வரவேற்க தயாராக இருந்த உறவினர்கள் அவர்கள் பலியானது அறிந்ததும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    Next Story
    ×