என் மலர்
திருவள்ளூர்
- வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் முருகன் (44). தொழிலாளி. இவரது மனைவி குடும்ப தகராறில் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் தனியா இருந்த முருகன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- எண்ணூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை 3 ரெயில் பாதை மட்டுமே இருக்கிறது.
- எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் வரும்போது மின்சார ரெயிலை நிறுத்தி இயக்குகிறார்கள்.
பொன்னேரி:
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில் சேவையை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணியாற்று பவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என கும்மிடிப்பூண்டி, கவரப் பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சென்னை-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்க மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை 8 மணி முதல் 9 மணி வரை கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில் காலையில் தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர், பள்ளி- கல்லூரி மாணவர்கள், மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நேற்று பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு காலை 8.15 மணிக்கு வரவேண்டிய மின்சார ரெயில் 8.35 மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ரெயில் வரும் நடைமேடை குறித்தும் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடாததால் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இதேபோல் இன்று 4-வது நாளாகவும் மின்சார ரெயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர், கொருக்குப் பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தவித்தனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக சரக்கு ரெயில்கள் வரும் போது அதனை புறநகர் ரெயில் பாதையில் மாற்றி மாற்றி நிறுத்துகின்றனர். இதனால் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் காலையில் வட மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் புறநகர் ரெயிலை நிறுத்தி விடுகின்றனர். சென்னை சென்டரலில் இருந்து எண்ணூர் வரை 4 ரெயில் பாதை உள்ளது. எண்ணூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை 3 ரெயில் பாதை மட்டுமே இருக்கிறது. இதனால் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் வரும்போது மின்சார ரெயிலை நிறுத்தி இயக்குகிறார்கள்.
மின்சார ரெயில்களில் வருபவர்கள் விரைந்து செல்வதற்காக ஏராளமானோர் விம்கோ நகரில் மெட்ரோ ரெயில்களுக்கு மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே எண்ணூர்- கும்மிடிப்பூண்டி இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பித்ரகுண்டா ரெயில் கவரப்பட்டை அருகே என்ஜின் கோளாறால் நிறுத்தப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில் சேவை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு சிவன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
- அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் சரிவர பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சமபள பாக்கியை கண்டித்தும், அதனை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் இன்று காலை சுமார் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சிவன் கோவில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாட்ஷா மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பளப் பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் தூய்மை பணியாளர்களின் சுமார் 2 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது. அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.
- கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
திருநின்றவூர்:
ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை என பல்வேறு பிரிவுகளில் 4623 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.
போலீசார் அனைவருக்கும் தினமும் ரூ.300 வீதம் 26 நாட்களுக்கு ரூ.7,800 உணவுப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
சென்னை காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு உணவுபடி தொடர்ந்து வழங்கப்படும் நிலையில் அருகில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு நிறுத்தப்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் வேதனை அடைய செய்து உள்ளது.
எனவே கடந்த 5 மாதமாக நிறுத்தப்பட்ட உள்ள உணவுப்படி நிலுவைத்ததொகைய முழுவதுமாக உடனடியாக வழங்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரெயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் வெட்டுப்பட்டு கிடந்த இளம்பெண் அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர்.
- வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரது உடல் முழுவதும் சுமார் 50 இடங்களில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. முகம், கை, கால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த காயம் காணப்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் ரெயில் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் வெட்டுப்பட்டு கிடந்த இளம்பெண் அண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்து உள்ளது. அவர் அம்பத்தூரை சேர்ந்த ஒருவருடன் திருவள்ளூர் வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இளம்பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு பிளேடால் சரமாரியாக உடல் முழுவதும் கிழிக்கப்பட்டு கிடந்து உள்ளார். அவருடன் வந்த வாலிபர் தலைமறைவாகி விட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட காரணம் என்ன? என்று தெரியவில்லை. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன
- கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்கள், ஒட்டல்கள், 10 திருமண மண்டபங்கள்,3 திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் 5 டன்னிற்கு மேல் குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் தரம்பிரித்து சேகரித்து வருகிறது.
இந்தநிலையில், நகராட்சிக்கு உட்பட்ட, கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள், திருமண மண்டப உரிமையாளர்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அதிகாரிகள் கூறும்போது, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள் திரையரங்குகள், திருமண மண்டபங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்றவற்றில் தினந்தோறும் 100 கிலோவுக்கு அதிகமான கழிவுகளை வழங்குபவர்கள் மற்றும் 5 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாகம் கொண்டவர்கள் என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பை கழிவுகளை வழங்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நகராட்சி நிர்வாகத்திற்கு மாதம் ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும். மேலும் கழிவுகளை பொது வெளியில் கொட்டினாலோ தீ வைத்து எரித்தாலோ ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.
- செங்குன்றம் நாரவாரி குப்பத்தில் நகராட்சி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
- பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதனை கைது செய்தனர்.
பொன்னேரி தாயுமான் செட்டி தெருவை சேர்ந்தவர் பலராமன். செங்குன்றம் நாரவாரி குப்பத்தில் நகராட்சி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர், பொன்னேரியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தபோது பொன்னேரி ஜீவா தெருவை சேர்ந்த சுதன்(26) என்பவர் அவரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம்அடைந்த பலராமனுக்கு 3 தையல் போடப்பட்டது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதனை கைது செய்தனர்.
- தடபெரும்பாக்கம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து.
- தலையில் பலத்த காயம் அடைந்த முத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இறந்தார்.
பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் லட்சுமி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 62). ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.
இவர் வீட்டில் இருந்த போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- பம்பை, உடுக்கை, தாரை-தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கரகம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
- விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த ராள்ளப்பாடி கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு ஜாத்திரை திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஏழு ஊரு எல்லையை மிதிக்கும் நிகழ்ச்சியும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பிரகாரப் புறப்பாடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், பம்பை, உடுக்கை, தாரை-தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் மேம்பாலம் வழியாக கரகம் ராள்ளப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் கும்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.
- ஏற்பட்ட மோதலில் அவர்கள், அண்ணன் ஹரிஷ் குமாரை செங்கலால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று உள்ளனர்.
- அண்ணனை அடித்து கொன்றதாக கிறிஸ்டோபர், எண்ட்ரீஸ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூர்:
எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகர் 3-வது தெருவில் வசித்து வந்தவர் ஹரிஷ் குமார் (வயது52). சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததாரான இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹரிஷ் குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் குமார் இறந்து போனார்.
இது தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை செய்த போது நேற்று முன்தினம் இரவு ஹரிஷ் குமார் குடிபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்டதை அவரது தம்பிகள் கிறிஸ்டோபர், எண்டரீஸ் குமார் ஆகியோர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் அவர்கள், அண்ணன் ஹரிஷ் குமாரை செங்கலால் சரமாரியாக தாக்கி விட்டு சென்று உள்ளனர். இதில் காயம்அடைந்த ஹரிஷ் குமார் இறந்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து அண்ணனை அடித்து கொன்றதாக கிறிஸ்டோபர், எண்ட்ரீஸ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது
- ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர்.
பொன்னேரி:
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது.காலை 7.40 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பயணிகள் ரெயில் கவரப்பேட்டை அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர். பின்னர் காலை 8.45 மணியளவில் அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வந்த ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
- அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
- போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகரில் உள்ள சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றிவரும் வாகனங்கள் அதிகளவு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பள்ளி, மருத்துவமனைக்கு மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதில், "திருவள்ளூர் நகர பகுதிக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.






