என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • மழைக்காலங்களில் மின் நுகர்வோர் மின உபயோகத்தை மிகவும் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தற்போது வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.

    இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியும், நீர்நிலைகளின் குட்டைகளில் தண்ணீர் வழிந்தோடியும் சென்ற வண்ணம் உள்ளது. மேலும் இந்த மழையினால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மழை காலத்தில் வீடுகள், தனியார் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கம் இப்படி அனைத்து கட்டிடங்களிலும் மழைநீரின் ஈரத்தன்மை காணப்படுகிறது.

    மேலும் வெயில் இல்லாததால் இந்த ஈரத்தன்மை மாற சில நாட்கள் ஆகிவிடும். இப்படிப்பட்ட நிலையில் வீட்டில் உள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் மின்சாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் வழக்கம்போல் வீட்டில் உள்ள சுவிட்சு போடுகளை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது அந்த சுவிட்சு பாக்ஸ் அருகில் ஈரப்பதம் உள்ளதா? மேலும் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற இடங்களில் மின் கசிவு உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே சுவிட்சுகளை ஆன் செய்ய வேண்டும். ங

    தற்போது உள்ள நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சப்பல் அணிந்து மின்சாரத்தை பயன்படுத்துவது நல்லது. இதேபால் வீட்டில் மழைநீர் வடியும் இடத்தில் மின் கசிவு உள்ளதா? என்றும் கவனிக்க வேண்டும். அப்படி மின் கசிவு இருந்தால் மெயின்பாக்ஸ் சுவிட்சை ஆப் செய்து விட்டு மின் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்து அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி பல பேர் உயிரிழந்து வருகிறார்கள். ஆகவே மேலும் உயிர்பலியும் எதுவும் நடக்காமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து மின்சார அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் மின்சாரத்தை மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் மின் கம்பத்தில் ஏதாவது மின் வயர் அறுந்து கிடந்தால் உடனே மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் செயல்பட வேண்டும். இதேபோல் வீட்டில் உள்ள மின் விநியோகத்தில் டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் மோட்டார்கள் இவைகளின் செயல்பாடுகளை நன்கு கவனிக்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்புகளில் ஏதாவது கசிவு உள்ளதா? அல்லது மின் பாக்ஸில் ஈரத்தன்மை உள்ளதா? என்று ஆய்வு செய்த பிறகே மின் சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டும்.

    இதுகுறித்து வீட்டில் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே மழைக்காலங்களில் மின் நுகர்வோர் மின உபயோகத்தை மிகவும் விழிப்புணர்வுடன் கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 14- ந்தேதி தொடங்கியது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கடந்த 18-ந்தேதி இரவு நடைபெற்றது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த 14- ந்தேதி தொடங்கியது. அன்று சாமி திருமலையில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளினார்.

    அதுசமயம் தினசரி காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் ஆகியன நடைபெற்று வந்தது. இதையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கடந்த 18-ந்தேதி இரவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

    விழா நிறைவு நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு நடந்தது. பின்னர் சாமி சப்பரத்தில் திருமலையில் எழுந்தருளினார். சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றதையடுத்து படிக்கட்டு வழியாக சுவாமி திருமலையை அடைந்தார்.

    விழாவில் திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் முருக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது.
    • சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம், பங்களாபுதூர் சாலையில் கழிவுநீர் செல்ல புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, குளம் போல் காட்சியளித்தது.

    மேலும் கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கழிவுநீர் ஆடைகளின் மேல் பட்டு அசுத்தத்தை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசி வருகிறது. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதியில் சாலை அரிப்புகள் ஏற்பட்டு, சாலை சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பல மாதங்களாக சரி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • 'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் 'முத்தமிழ்த்தேர்' அலங்கார ஊர்தி பயணம் கடந்த 4-ம்தேதி முதல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதி பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், "எழுத்தாளர் கலைஞர் குழுவின்" மூலம் தயார் செய்யப்பட்ட, அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி", நேற்று காங்கயம் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தது.

    அப்போது காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் நகர துணைச் செயலாளர் சுப்பிரமணி, நகராட்சி துணைத் தலைவர் கமலவேணி ரத்தினகுமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று இரவு காங்கயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஈரோடு செல்கிறது.

    • வாடகையை முடித்து கொண்டு வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் எதிர்புறம் வேனை நிறுத்துவது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஈச்சர் வேனை தேடி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள சிவநாதபுரத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் மூர்த்தி (வயது 54). இவர் ஈச்சர் வேன் சொந்தமாக வைத்து, அதனை வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

    மூர்த்தி வாடகையை முடித்து கொண்டு வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் எதிர்புறம் வேனை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் வேனை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அடுத்த நாள் காலையில் வந்து பார்க்கும்போது வேனை காணவில்லை. இதனால் பதறிபோன மூர்த்தி, இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன ஈச்சர் வேனை தேடி வருகிறார்கள்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்தபோதிலும் மாலை வரை மழை பெய்யவில்லை. இந்த நிலையில் இரவு 10 மணி அளவில் லேசாக பெய்ய துவங்கிய மழை, பின்னர் தொடர்ந்து விட்டு விட்டு பெய்தது.

    நேரம் செல்ல செல்ல பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பயங்கர இடி மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை நோக்கி மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது.

    மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பச்சாபாளையம் காலனி, அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதி மக்கள் கடும் துயரத்திற்கு ஆளானார்கள். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மழை அளவு 15 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

    • சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மாணிக்காபுரம் ரோடு, சிவசக்தி நகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 30). இவருக்கும் பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வீரக்குமார் (வயது 27) ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மாணிக்காபுரம் ரோடு இறைச்சி கடை அருகே ஜெகதீஸ்வரன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீரக்குமார், ஜெகதீஸ்வரனை திட்டியதாக கூறப்படுகிறது.

    உடனே இதனை எதிர்த்து கேட்ட ஜெகதீஸ்வரனை மதுபான பாட்டிலால் பின் மண்டையில் வீரக்குமார் தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
    • திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது .

    திருப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது.

    12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் வரி விதிக்கப்பட்டது. அதனால் வங்கதேச துணிகள் வரவில்லை. ஆனால் பா.ஜ.க. வரி விதிக்காததால் வங்கதேச துணிகள் வருகின்றன. மத்திய அரசு இதனை சரி செய்ய வேண்டும். சீனாவில் இருந்து வருகிற பாலிஸ்டராலும் பிரச்சனை. பாலிஸ்டர் இங்கு அதிகளவில் கிடைப்பதில்லை. அதனை உற்பத்தி செய்பவர்கள் அதானி அம்பானி, வேறு யாருக்கும் உற்பத்தி செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் பாலிஸ்டரால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனையும் சரி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நெசவு தொழிலை அதிகமானோர் சார்ந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கையால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு கையில் தான் உள்ளது. மன்னர் காலத்திலும் மன்னர் கையில் தான் கோவில்கள் இருந்தன.

    கோவில்கள் அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறந்தது. சேகர்பாபு சைவ பழம் போல் தெரிகிறார். 5000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை திரும்ப பெற்றுள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமன் பாராட்ட வேண்டாமா?

    தமிழக கவர்னருக்கு மாலைக்கண் நோய். அதனால்தான் தமிழகத்தில் தீண்டாமை என தெரிவிக்கிறார்.

    சட்டமன்றத்தின் மூலம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா உச்சநீதிமன்றம் சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா என்பதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.

    தமிழக முதல்வர் சில நடவடிக்கைகள் தவறாக நடந்தால் திரும்ப பெறுகிறார். திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது .

    காவிரியை வைத்து கர்நாடகா பா.ஜ.க., தமிழக பா.ஜ.க. அரசியல் செய்கிறார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் பேசி சரி செய்வோம். பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காரணமே தவிர வேறு இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் இடங்கள் கேட்போம்.

    சமீபத்தில் நடந்த கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நடிகர், நடிகைகளை அழைத்தவர்கள் உலகக்கோப்பை வென்றவர்களை அழைக்கவில்லை.

    அந்த ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் பெயர் இருந்தது அதனை மோடி தன் பெயருக்கு மாற்றி கொண்டார்.

    நில அபகரிப்பு போல் ஸ்டேடியம் அபகரிப்பு இருக்கிறது. அமலாக்கத்துறை மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநிலத்திற்கு சென்று சோதனை செய்தது. தமிழகத்தில் மட்டும் அமலாக்கத்துறை முனைப்பு காட்டுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அமலாக்கத்துறை பண பரிமாற்றத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். மணல் பரிமாற்றத்தில் அல்ல. அமித்ஷா மகன் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் அந்த பக்கம் செல்வதில்லை. அமலாக்கத் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அவர் மீது தனிப்பட்ட வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்க வாய்ப்பு உண்டு. 5 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெறும்.

    கவர்னர் வேண்டாம் என்றோ அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக்கூடாது என்று தான் சொல்கிறோம்.

    இழுக்கு ஆர்.என்.ரவிக்கு அல்ல தமிழ்நாடு கவர்னருக்கு தான். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது இல்லை. கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தான் பிரதமர் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதாலும், சபரிமலை சீசன் காரணமாக கறிக்கோழி நுகர்வு குறைவினாலும் கறிக்கோழி கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கறிக்கோழி கொள்முதல் விலை 100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 72 ரூபாயாக விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ.90 வரை செலவாகும் நிலையில், இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
    • பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது.

    பல்லடம்: 

    தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகழை இளைய தலைமுறையினர் அறிய செய்யும் வகையில் அமைக்கப்பட்ட பேனா ஊர்தி நேற்று பல்லடம் நகருக்கு வந்தது.

    கடந்த நவம்பர் 11-ல் கன்னியாகுமரியில் இந்த வாகனம் புறப்பட்டது. 60 அடி நீளம் உள்ள பேனா வாகனத்தில் கருணாநிதி எழுதிய புத்தகங்களின் முகப்பு பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. வாகனத்தின் உள்ளே கருணாநிதியின் சிலை இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, மதுரை, சிவகங்கை, கோவை மாவட்டங்கள் வழியாக தற்போது பல்லடம் நகருக்கு வந்தது. அந்த வாகனத்திற்கு பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    பின்னர் பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு கருணாநிதியின் சிறப்புகளை விளக்கும் குறும்படம் திரையிடப்பட்டது. ஊர்தியின் உள்ளே கருணாநிதியின் கோபாலபுர இல்ல அமைப்பு, அஞ்சுகம் அம்மாளின் சிலை, அதன் அருகில் கருணாநிதி இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற சிலை, அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

    இந்த தேர் முன்பு மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் நேரில் வந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் அந்த வாகனம் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    உடுமலை:

    உடுமலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

    எனவே அதுசமயம் பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளைகளை வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் நல சட்டங்கள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள்ஆணைக்குழு வழிகாட்டுதலின் படியும், காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் நல சட்டங்கள் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு கல்லூரி முதல்வர் மல்லிகாதேவி தலைமை தாங்கினார். காங்கயம் வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் ஜெகதீசன், பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இந்த முகாமில் பெண்கள் நல சட்டங்களான வரதட்சணை தடை சட்டம், குழந்தைத் திருமண தடை சட்டம், சிறப்பு திருமண சட்டம், இந்திய விவாகரத்து சட்டம், மகப்பேறு நன்மை சட்டம், மருத்துவக் கருவுறுதல் சட்டம், வீட்டு வன்முறையிலிருந்து பெண்களுக்குப் பாதுகாப்பு சட்டம், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், தேசிய மகளிர் ஆணைய சட்டம், சம ஊதிய சட்டம் பற்றியும் மாணவ மாணவிகளிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ×