என் மலர்
தூத்துக்குடி
- விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரெயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.
- அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் இ.பி. காலனியை சேர்ந்தவர் வீர பிரசாத் (வயது 28). இவர் திருவாரூரில் உள்ள கூட்டுறவு சொசைட்டியில் கிளர்க்காக பணியாற்றி வருகிறார். நேற்று வீர பிரசாத் தனது மனைவி பிருந்தா மற்றும் 1½ வயது ஆண் குழந்தையுடன் திருவாரூர் செல்வதற்காக கோவில்பட்டி ரெயில்வே நிலையத்துக்கு வந்துள்ளார். சென்னை தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரெயில் மூலமாக விருதுநகருக்கு சென்று, அங்கிருந்து சென்னை செங்கோட்டை செல்லும் ரெயில் திருவாரூருக்கு வீர பிரசாத் செல்ல இருந்துள்ளார்.
வழக்கமாக வரும் நேரத்தை விட 15 நிமிடம் தாமதமாக அந்தியோதயா ரெயில் கோவில்பட்டி ரெயில் நிலையம் 2-வது நடைமேடையில் வந்து கொண்டு இருக்கும்போது நிற்பதற்குள். ரெயிலில் வீர பிரசாத் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கு இடையில் சிக்கி கொண்டார். நல்வாய்ப்பாக ரெயில் நின்றதால் பெரும் விபத்து ஏற்படவில்லை. சிக்கி கொண்ட அவரால் வெளியே வர முடியாமல் பரிதவித்து கொண்டிருந்தார்.
இதையடுத்து நடைமேடையை எந்திரம் மூலமாக உடைத்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வீர பிரசாத் மீட்கப்பட்டார். இதில் அவருக்கு கால் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதனால் அந்தியோதயா ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. இந்த சம்பவம் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
இதையொட்டி அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50க்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை குண்டங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது.
அதற்கு முன்பாக பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெகா திட்ட வளாக பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் முன்பு சண்முக விலாசத்தில் இருந்து ஏற்றம் காணும் இடங்களில் தரையில் கல் பதிக்கும் வேலை நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. அதே போல் கடற்கரையில் மேடு, பள்ளங்கள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று கலெக்டர் இளம்பகவத் பல்வேறு மார்க்கங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவல்துறை உயர் அதிகாரிகள், பக்தர்கள் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கோவில் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.
- பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதுமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று அமாவாசை என்பதால் இயற்கை சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடல் இன்று காலையில் இருந்தே சுமார் 100அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அய்யா வைகுண்டர் அவதாரபதி அருகே கடற்கரையில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. பாறைகள் மீது பக்தர்கள் ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கமாக நீராடும் பகுதியில் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் கடந்த சில நாட்களாக இவ்வாறு நடப்பதால் இது வழக்கமான ஒன்று என பக்தர்கள் கருதி அச்சமின்றி புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
- மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15). இவர் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் முத்துகிருஷ்ணன் நேற்று இரவு வீட்டில் பின்புறம் உள்ள ஆஸ்பெடாஸ் சீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், எனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என 4 ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
- உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த அயன்ராசாபட்டி தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
- காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடத்த நிபுணர் குழு முடிவு.
- மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு.
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
அதேவேளையில் அன்றைய தினம் மதியம் 12.05 மணி முதல் 12.47 மணி வரை குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில், திருச்செந்தூரை சேர்ந்த சிவராம சுப்பிரமணியன் என்பவர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட கோவில் நிபுணர்குழு முடிவு செய்த நேரத்தில் குடமுழுக்கு நடத்தலாம். வரும் காலங்களில் திருச்செந்தூர் கோவில் நிகழ்வு நடைபெறும்போது கோவில் விதாயகரிட் எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெற உத்தரவிட்டுள்ளனர்.
- வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடியில் வீட்டில் திடீரென ஏ.சி. வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் பனைவிளையில் வீட்டின் அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.சி.யை ஆஃப் செய்த சிறிதுநேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அறையில் ஏ.சி. வெடித்து தீப்பற்றியதும் உடனடியாக நீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நல்ல வேளையாக அறையில் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை உயிர் தப்பியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+2
- முதியவர்கள் எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
- இன்று கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூர் சிறந்த ஆன்மீக தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் மற்றும் பஸ்களில் குடும்பத்துடன் வந்து தங்கி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது கோவிலில் பக்தர்கள் திருப்பதிக்கு இணையாக சாமி தரிசனம் செய்யும் வகையில் பொதுத் தரிசனம் வரிசையில் பக்தர்கள் அமர்ந்து ஓய்வு எடுத்து சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கு அகன்ற டி.வி.களில் படம் பார்த்தவாறு, குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளுடன் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள் எளிதாக தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி, சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதலாக பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமானவர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று கோவில் நடை வழக்கம்போல் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
- திருச்செந்தூர் கோவிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.
கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் கீழ்ப்பகுதியில் பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. 8,000 சதுர அடியில் யாக சாலையும், 2,000 சதுர அடியில் பக்தர்கள் அமர்ந்து யாகசாலை பூஜையை காணும் வகையில் கேலரியும் அமைக்கப்படுகிறது. யாகசாலையில் 76 யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. ஜூலை 1-ம் தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது.
இதற்கிடையே, திருச்செந்தூர் கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை தமிழில் நடத்தவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தினர். யாக பூஜையில் தமிழில் மந்திரம் சொல்லாவிட்டால் கும்பாபிஷேகத் தினத்தன்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர்.
இந்நிலையில், யாகசாலையில் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், கந்தர் அனுபூதி ஆகியவை தமிழில் முற்றோதுதல் நடக்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7-ம் தேதி காலை 6:15 மணிமுதல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்க உள்ளது. இதற்காக 8,000 சதுரடியில் 76 யாக குண்டங்களுடன் பிரமாண்ட வேள்வி சாலை அமைக்கப்படுகிறது.
வேள்வி சாலை வழிபாடு நாட்களில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், நாதஸ்வர இன்னிசை நடக்கும்.
காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போராட்டத்திற்கு அமலி நகர் ஆலந்தலை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- ஆலந்தலைப் பகுதியில் 100 படகுகளும், அமளி நகர் பகுதியில் 80 படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டதாக கூறி பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று வியாபாரிகள் தங்களின் கடைகளை அடைத்து பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்தனர்.
அதன்படி திருச்செந்தூர் காந்தி மார்க்கெட் வியாபாரி கள் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், இந்து வியாபாரிகள் சங்கம், சைவ வேளாளர் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட 29 அமைப்புகள் ஆதரவு தெரிவித்து நான்கு ரத வீதி, டி.பி. ரோடு, காந்தி மார்க்கெட், கோவில் வாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருச்செந்தூர் நகர் பகுதியில் சுமார் 1000 கடைகள் அடைக்கப்பட்டு கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போராட்டத்திற்கு அமலி நகர் ஆலந்தலை மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் 50 சதவீத மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆலந்தலைப் பகுதியில் 100 படகுகளும், அமளி நகர் பகுதியில் 80 படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் கட்சி தொண்டர்கள், பனையேறும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்து வருகிறது.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தமிழனின் தேசிய பானம் கள். அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அங்குள்ள ஒரு பனை மரத்தில் சீமான் ஏறுவதற்கு வசதியாக கட்டைகளை ஏணி போல் கட்டி வைத்திருந்தனர்.
பின்னர் கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் ஏறிய சீமான், கள் இறக்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் ஏராளமான பனை ஏறும் தொழிலாளர்களும் ஈடுபட்டனர்.
சீமான் மரம் ஏறியபோது அங்கு திரண்டிருந்த அவரது கட்சியினர் கரகோஷம் எழுப்பினர். அவர்கள் கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என கோஷம் எழுப்பினர். பின்னர் பனை மரத்தின் உச்சிக்கு சென்ற சீமான் கள் இறக்கி கீழே வந்தார். பிறகு இறக்கிய கள்ளை பருகி ருசித்தார்.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை.
- கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ் கடவுள், தமிழ் என்றாலே முருகன். கோவில் கட்டியது நாங்கள். இறைவன் எங்கள் இறைவன். எங்கள் தாய் மொழியில் குடமுழுக்கு இருக்காது (திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு) என்பது எவ்வளவு பெரிய கொடுமை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வெறும் வெற்று முழக்கம்.
தாய் மொழியை இழந்த எந்த இனம் தமிழக வரலாற்றில் வாழ்ந்துள்ளது? ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்து தான் உரிமையை பெற்றுள்ளோம். தாய்மொழி வழிபாடு என்பது அடிப்படை உரிமை. அதை கேட்டு போராட வேண்டிய நிலையில் இருக்கிறது.
திராவிட ஆட்சியாளர்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரக்கணக்கான கோவிலில் குடமுழுக்கு நடத்துகிறோம் என்கிறார்கள்.
தி.மு.க.வின் 4 ஆண்டு ஆட்சியில் மின்கட்டணம் குறையவில்லை. சொத்து வரி குறையவில்லை. கேளிக்கை வரி நான்கு சதவீதம் குறைகிறது. இது யாருக்கும் பயன் தரும்?
நாட்டில் பாதுகாப்புக்கு உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன? கள்ளச்சாராயத்தில் உயிரிழந்தவர்களுக்கு இவர்கள் கொடுத்த நிதி என்ன?
அமலாக்கத்துறை சோதனை வந்த பிறகு முதலமைச்சர், பிரதமர் மோடியின் கையைப் பிடித்து கொண்டு பேசுகிறார். இங்கு வந்த பிறகு பிரதமர் மோடியை எதிரி என்கிறார்.
நாளை திருச்செந்தூர் அருகே நடக்கும் பனையேறும் போராட்டத்திற்கு காவல்துறை தடை என்றால் அதை உடை. அஞ்சுவதும் அடிபணிவதும் எங்களிடம் கிடையாது. பனையேறும்போது வெறும் கையோடு இருக்க மாட்டேன். அரிவாளுடன் இருப்பேன்.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கள் இறக்கும்போது எங்கள் மாநிலத்தில் மட்டும் இறக்க அனுமதி இல்லையே ஏன்? கள் என்பது இயற்கையின் அருட்கொடை. கள் உணவில் ஒரு பகுதி. அது மது அல்ல.
நாட்டின் மொத்த அரசியலையும் மாற்றுவதுதான் என்னுடைய கடமை. நாம் தமிழர் கட்சி வரும் 2026-ம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். கூட்டணி கிடையாது.
பா.ஜ.க. முருகன் மாநாடு நடத்துவது ஒரு மார்க்கெட்டிங்.
யார் அந்த சார்? என்பது இருக்கட்டும். கொடநாட்டில் கொலை செய்த அந்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி கொடுத்த அந்த சார் யார்? என்பதற்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






