என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
- பீடி இலைகளை கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக பீடி இலைகள் படகுமூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து மற்றும் காவலர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் கடற்கரையோர பகுதிகளில் நேற்று இரவு முதல் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டை மலை காட்டுப் பகுதி கொம்புத் துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசார் வருவதை கண்டதும் அந்த வழியாக லாரியில் வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் இருந்து கீழே இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த லாரியில் போலீசார் சோதனை நடத்திய போது அதில் கொண்டு வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 68 மூட்டைகளில் பீடி இலைகள் மொத்தம் 2ஆயிரத்து 250 கிலோ இருப்பதும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பீடி இலைகளை கைப்பற்றி லாரியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வாகனம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.