என் மலர்
திருநெல்வேலி
- நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர்.
- செல்வக்கனி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார்கள் மீது மோதியது.
திசையன்விளை:
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து உவரிக்கு ஒரு குடும்பத்தினர் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த கார் திசையன்விளை அருகே பெட்டைகுளம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, ரட்சகர் நகரில் இருந்து ஒரு கார் மெயின்ரோட்டில் ஏறியது.
அப்போது அந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிய நிலையில், அந்த வழியாக உவரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முதல்நிலை பெண் ஏட்டு செல்வக்கனி(வயது 33) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கார்கள் மீது மோதியது. இதில் செல்வக்கனி காயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- பெண்களுக்கான போட்டியில் வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தக்ஷன் சகோதயா குழுமத்தினர் ஒருங்கிணைந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான இறகு பந்து போட்டிகள் நடத்தியது. 14, 17, 19 வயதிற்கு உட்பட்டவர் பிரிவுகளின் கீழ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் அதிக புள்ளிகளை பெற்ற நாகர்கோவில் லிட்டில் சேம்பியன் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. நாகர்கோவில் ஆர்.பி.ஏ. சென்ட்ரல் பள்ளி 2-ம் இடத்தை பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி அதிக புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், இயக்குனர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் பாராட்டி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
- மணிமுத்தாறு கால்வாயில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
- மணிமுத்தாறு கால்வாய் குறுக்காக பாலம் அமைக்க ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நெல்லை:
நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் மணிமுத்தாறு அணை நீர் மூலமாக பாசனம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள மணிமுத்தாறு கால்வாயில் பாலம் கட்டவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதன் தொடர்ச்சியாக காடன்குளம், திருமலாபுரம் பஞ்சாயத்து கழுவூர் கிராமம் அருகே மணிமுத்தாறு கால்வாய் குறுக்காக பாலம் அமைக்க ரூ.3 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் கவுன்சிலருமான ஆரோக்கிய எட்வின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்கவும் அறிவுறுத்தினார். அப்போது அவருடன் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் வின்சென்ட், ஒன்றிய அவைத்தலைவர் செல்லத்துரை, செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை, காடங்குளம் கூட்டுறவு சங்க செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இசக்கியம்மாளுக்கு திருமணம் ஆகாததால் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
- மாட்டை விரட்ட இசக்கியம்மாள் சென்றபோது மின் கம்பத்தில் உள்ள ஸ்டே கம்பியை பிடித்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் சுடலை மாடன்.
மின்சாரம் தாக்கியது
இவரது மகள் இசக்கியம்மாள் (வயது 53). இவருக்கு திருமணம் ஆகாததால் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அங்குள்ள காட்டுப் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றிருந்தார். அப்போது மாடு ஒன்று மின்மாற்றி அருகே ஓடிச் சென்றுள்ளது. அதனை விரட்டுவதற்காக இசக்கியம்மாள் சென்றபோது எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் உள்ள ஸ்டே கம்பியை பிடித்துள்ளார். இதனால் அது மின் வயரில் உரசியதில் இசக்கியம்மாள் மீது மின்சாரம் தாக்கியது.
பரிதாப சாவு
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். இதை பார்த்தவர்கள் உடனடி யாக சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இசக்கியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் கூட்ட அரங்கில் சுமார் 40 நிமிடம் வரை காத்திருந்த கமிஷனர் பின்பு வெளியேறினார்.
- நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள், மேயர், அதிகாரிகள் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு கூட்டத்திற்கான பொருள் குறித்த தகவல் 55 கவுன்சிலர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மாநகராட்சி ராஜாஜி மண்டபத்தில் உள்ள கூட்டரங்கிற்கு மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் வந்தார். மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் கூட்டரங்கின் அருகே உள்ள அறையில் காத்திருந்தனர்.
அரை மணிநேரத்திற்கு பின்பு தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், சீதா பாலன், பிரபா சங்கரி, அ.தி.மு.க கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர் அனுராதா ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.
தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மற்ற 48 கவுன்சிலர்கள் மாநகராட்சிக்கு வந்த நிலையில் கூட்டரங்கிற்கு செல்லாமல் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் கூட்ட அரங்கில் சுமார் 40 நிமிடம் வரை காத்திருந்த கமிஷனர் பின்பு வெளியேறினார். அவர் தனது அறைக்கு சென்று விட்டார்.
இதற்கிடையே கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி கமிஷனர் அறையின் அருகே உள்ள மற்றொரு சிறு கூட்டரங்கில் அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து மேயர் மற்றும் துணை மேயர், கவுன்சிலர்கள் திரண்டு இருந்த கூட்ட அரங்கிற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள், மேயர், அதிகாரிகள் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நெல்லை வந்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் சமாதானம் செய்து வைத்துவிட்டு சென்றனர்.
அதன்பின்னர் இன்று முதல் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே கூட்டத்திற்கு வராமல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாமன்ற அலுவலகத்தில் உள்ள மற்றொரு கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- அன்னபாண்டி தப்பி ஓடி விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய அன்னபாண்டியை தேடி வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள இறைப்புவாரி பஞ்சாயத்துக்குட்பட்ட மாவடியில் சிவனைந்த பெருமாள் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று இரவில் இந்த கோவில் வளாகத்தில் மர்ம நபர் சுற்றி திரிந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் ஆக்சா பிளேடு, கத்தி ஆகியவைகள் இருந்தன. இதுபற்றி அவரிடம் பொதுமக்கள் கேட்ட போது அவர் தான் வள்ளியூர், பொய்காட்டான் குடியிருப்பை சேர்ந்த அன்னபாண்டி(வயது 45) என்றும், கோவிலில் திருட வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பொதுமக்கள் நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கோவிலுக்கு சென்றனர். பொதுமக்கள் அன்னபாண்டியை, போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை அழைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது அவரது உடலில் காயங்கள் இருந்ததை கண்டனர். இதுபற்றி போலீசார் விசாரித்த போது, அவரை 15-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மழை பெய்ததால் அங்குள்ள பெட்ரோல் பங்க்கில் நின்றுள்ளனர்.
அப்போது திடீர் என அன்னபாண்டி தப்பி ஓடி விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய அன்னபாண்டியை தேடி வருகின்றனர்.
- நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார்.
- கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், மேல்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவரது மனைவி சந்திரலேகா. கனகராஜின் தம்பி முத்துக்குமார் கோவையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் முத்துக்குமார் அதே பகுதியை சேர்ந்த நாராயணபெருமாள் (53) என்பவரது மகள் அனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். காதல் திருமணம் என்பதால் நாராயணபெருமாள் திருமணத்தின் போது, தனது மகளுக்கு நகைகள் அணிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் கனகராஜ், நாராயணபெருமாளிடம் உனது மகளுக்கு நகைகள் போட வேண்டும் என்று கூறி வந்துள்ளார். மேலும் அடிக்கடி கனகராஜ், நாரயணபெருமாளிடம் உனது மகளுக்கு எப்போது நகை போடுவாய்? என்றும் கேட்டு வந்துள்ளார். நேற்று மாலை இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நாராயண பெருமாள், கனகராஜை கம்பால் தாக்கினார்.
இதுபோல கனகராஜ், நாராயணபெருமாள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதுடன், அவரது மொபட்டையும் அடித்து நொறுக்கினார்.
இதுகுறித்து இருவரும் களக்காடு போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே கனகராஜூக்கும், நாராயண பெருமாளுக்கும் இரவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது கனகராஜ், உனது மகளுக்கு இன்னும் நகை போடாமல் உள்ளாயே என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணபெருமாள், கனகராஜை மண்வெட்டியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நாராயணபெருமாளை தேடி வருகின்றனர்.
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 104.10 அடியாக உள்ளது.
இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 626 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது.
மாநகரில் பாளையில் 5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று இரவில் ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் கன்னடியனில் 1.2 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 0.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் பாதியளவுக்கு மேல் நிரம்பியுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பிசான பருவ சாகுபடியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனா நதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 70 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 72 அடியானது. மொத்தம் 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்ப இன்னும் 12 அடி நீரே தேவை. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் நேற்று 58 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 61 அடியை எட்டியுள்ளது.
மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை 111 அடியில் நீடிக்கிறது. குண்டாறு அணை நீர்மட்டம் 31 அடியை நெருங்கி உள்ளது. தொடர்மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், பின்னர் தணிவதுமாக இருந்து வருகிறது. அருவிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று விட்டுவிட்டு கனமழை பெய்தது. அங்கு 29 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. காடல்குடி, வைப்பார் ஆகிய பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய இடங்களிலும் சாரல் மழை பெய்தது.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
நெல்லை:
நெல்லை மணி மூர்த்திஸ்வரம் தாமிர பரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இன வாலிபர்கள் மாரியப்பன், மனோஜ்குமார் ஆகியோரை கடந்த 30-ந்தேதி அங்கு நின்ற கும்பல் தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
இதுதொடர்பாக போலீசார் துரித விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இருவரும் நெல்லை பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் இன்று நெல்லைக்கு, வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். முதலாவதாக சம்பவம் நடந்த மணி மூர்திஸ்வரம் ஆற்றுப்பகுதியை பார்வையிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை சந்தித்து நடந்த சம்பவங்களை கேட்டறிந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மணி மூர்த்தீஸ்வரம் சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டத்தின் பேரில் இன்று நெல்லையில் ஆய்வு செய்துள்ளேன். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டோம். அவர்களின் குடும்பச்சூழல் குறித்தும் விசாரிக்கப்பட்டது.
தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களையும் சந்தித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதா? தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இருந்த போதும் நாங்களும் சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளோம். இந்த விசாரணை குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவரிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆர்.டி.ஓ. ஷேக் அயூப் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
- தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது.
- சாலையில் நடுவே உள்ள 2 மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜு முன்னிலை வகித்தார்.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் தச்சை மண்டல தலைவர் கெங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தச்சநல்லூர் தளவாய்புரம் கெங்கையம்மன் கோவில் தெற்கு தெருவின் முகப்பில் இருந்து வாய்க்கால் பாலம் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும். அந்த பகுதியில் குறுகிய தெருவாக இருப்பதால் கட்டுமான பணிகள் நடைபெறும் போது வாகனங்கள் உள்ளே வருவதற்கு வசதி இல்லாமல் இருக்கிறது.
மேலும் இந்த தெருவில் 2 மின்கம்பம் சாலையில் நடுவே உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும். இது தொடர்பாக கவுன்சிலரிடம் தெரிவி க்கும்போது அவர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார். பொதுப்பாதை அமைந்துள்ள இடத்தில் அரசு கட்டிடத்தை கொண்டு வர கவுன்சிலர் முயற்சி செய்கிறார். எனவே அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
- காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
- எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்கள் அதிகாலையிலேயே ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் காவல்துறை யில் காலியாக உள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணி யிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
உடல் தகுதி தேர்வு
அதில் வெற்றி பெற்ற பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு பாளையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 302 பெண் தேர்வர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்.
இந்த தேர்வில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், கயிறு ஏறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்ட மாக மருத்துவ பரிசோதனை க்கும், நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படு வார்கள்.
பணி ஆணை
பின்னர் அவர்களுக்கான பணி ஆணை வழங்கப்படும். இந்நிலையில் இன்று உடற்தகுதி தேர்வு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மேற்பார்வையில், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதற்கான பணிகள் துணை கமிஷனர்கள் அனிதா, சரவணகுமார் உள்ளிட்டோர் கண்காணிப் பில் நடை பெற்றது.
இந்த உடல் தகுதி தேர்வு 2-வது நாளாக நாளையும் நடக்கிறது. இதற்காக எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பெண்கள் இன்று அதிகாலை யிலேயே ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். தொடர்ந்து தேர்வில் ஆர்வமாக பங்கேற்று ஓடினர்.
- சாலமனுக்கும், பால்ராஜிக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
- பால்ராஜிடம், மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து கிருஷ்ணகுமாரி தட்டி கேட்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள நெடுவிளையை சேர்ந்தவர் சாலமன். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ்க்கும் (44) இடப்பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இட்த்தில் பால்ராஜ் மது பாட்டிலை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சாலமன், அவரது மனைவி கிருஷ்ணகுமாரியிடம் (40) கூறி உள்ளார்.
சம்பவத்தன்று கிருஷ்ணகுமாரி வீட்டின் பின்புறம் பூக்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பால்ராஜிடம், கிருஷ்ணகுமாரி மது பாட்டிலை மறைத்து வைத்தது குறித்து தட்டி கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பால்ராஜ், கிருஷ்ணகுமாரியை தாக்கினார். இதில் காயமடைந்த கிருஷ்ண குமாரி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்து வமனை யில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றி களக்காடு போலீ சில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பால்ராஜை தேடி வருகிறார்.






