என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 500 குளங்கள் பாதியளவு நிரம்பின
- மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
நெல்லையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 104.10 அடியாக உள்ளது.
இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 626 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து 72 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது.
மாநகரில் பாளையில் 5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று இரவில் ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் கன்னடியனில் 1.2 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 0.6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் பாதியளவுக்கு மேல் நிரம்பியுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பிசான பருவ சாகுபடியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடனா நதி, ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அவற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 70 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 2 அடி உயர்ந்து 72 அடியானது. மொத்தம் 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்ப இன்னும் 12 அடி நீரே தேவை. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் நேற்று 58 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 61 அடியை எட்டியுள்ளது.
மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை 111 அடியில் நீடிக்கிறது. குண்டாறு அணை நீர்மட்டம் 31 அடியை நெருங்கி உள்ளது. தொடர்மழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், பின்னர் தணிவதுமாக இருந்து வருகிறது. அருவிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று விட்டுவிட்டு கனமழை பெய்தது. அங்கு 29 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. காடல்குடி, வைப்பார் ஆகிய பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய இடங்களிலும் சாரல் மழை பெய்தது.






