என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சர்வதேச கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.
    • சிறப்பு விருந்தினராக ம.தி.தா. கல்லூரி உதவிபேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை சாரதா மகளிர்கல்லூரியில் கணினி பயன்பாட்டுத்துறையில் வயர்லெஸ் மற்றும் மொபைல் நெட்வொர்க் பாதுகாப்பு என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரிச்செயலர் யதீஸ்வரி சரவணபவப்ரியாஅம்பா ஏற்பாட்டில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார். கணிணி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் பார்வதி தேவி தலைமை உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ம.தி.தா. இந்துக்கல்லூரி கணினி அறிவியல் துறை உதவிபேராசிரியர் வேல்மணி கலந்து கொண்டு 'சுற்றுப்புற நுண்ணறிவு, தொழில்நுட்பங்கள் மற்றும் பயன் பாடுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    2-வது அமர்வில் ஆசிய பசிபிக்தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஸ்கூல் ஆப்டெக்னாலஜி இணைப்பேராசிரியர் டாக்டர்செல்வகுமார் சாமுவேல் 'டிஜிட்டல் சிந்தனை திறனுடனான பெருந்தரவு பகுப்பாய்வு' பற்றி உரையாற்றினார்.

    3-வது அமர்வில் சீனா அறிவியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி 'கம்பி

    யில்லா தொலைத்தொடர்பில் நிகழ் ஆராய்ச்சிகள்' பற்றி உரையாற்றினார். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 55 மாணவிகள், ஆராய்ச்சி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி னார்கள். முடிவில் கணினி பயன்பட்டுத்துறை உதவி பேராசிரியர் சுடர்வேணி என்ற சுபா நன்றி கூறினார். 

    • கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு ரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

    நெல்லை:

    மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் முனைஞ்சிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஒத்துழைப்புடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி ரத்ததானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ரவிசங்கர் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் வழி நடத்தினர்.

    மேலும் மாணவர்களுக்கு ரத்ததானம் அவசியம் பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் உதவி பேராசிரியர் முஜீப் முகம்மது முஸ்தபா மற்றும் கல்லூரி அலுவலர்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • காட்டு பன்றிகள் கூட்டம் 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.
    • களக்காடு பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு மிஷின் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் கென்னி டேவிஸ் (வயது36). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு பகுதியில் உள்ளது.

    காட்டுபன்றிகள் அட்டகாசம்

    நேற்று முன் தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது தோட்டத்துக்குள் சென்று 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெல் பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அரசின் விதை பண்ணையில் இருந்து விதை வாங்கி பயிர் செய்யப்பட்டதாகும்.

    அறுவடை செய்த பின்னர் நெல்லை அரசின் விதை பண்ணைக்கு வழங்க வேண்டும். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் நாசம் செய்து விட்டன. களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    விவசாயிகள் புகார்

    வனப்பகுதிக்குள் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல், மலையடிவார புதர்களில் பதுங்கியுள்ளன. இவைகள் இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

    காட்டுபன்றிகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தூண்டில் வளைவு அமைக்க கோரி கிராம மக்கள் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • 5-ம் நாளான நேற்று அவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் கூடுதாழையில் கடலரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி அக்கிராம மக்கள் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தினந்தோறும் அவர்கள் ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, படகுகள் மீது கறுப்புக்கொடி ஏற்றுவது என ஒவ்வொரு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 5-ம் நாளான நேற்று அவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் 6-வது நாளான இன்று மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி குடும்பத்தினருடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அப்போது அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கண்களில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மீனவர்கள் கூறும்போது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றனர். 

    • மீனவர் நலனிற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • மீனவர்களுக்கு எந்த இடையூறும் வராமல் சுவர் அமைத்து கொடுக்கும்படி செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே விஜயா புரம் ஊராட்சி இடிந்தகரை அருவிக்கரையில் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

    ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீனவர் நலனிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இடிந்தகரை அருவிக் கரை பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களின் நலனிற்காக இடிந்தகரை அருவிக்கரை பகுதியில் மீன் இறங்குதளம் அமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியை கொண்டு கடற்கரையில் இருந்து கடலை நோக்கி 100 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்ட நேர் சுவர் அமைக்கும் பணிக்கும், அதே போன்று 10 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளத்திற்கு மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் தொடர்பாக பங்கு தந்தை தலைமையில், மீனவர் நலத்துறையினரிடமும், மற்றும் இக்கிராமத்தில் உள்ள மக்களிடமும் கலந்து ஆலோசித்து மீன் இறங்குதளம் எந்த இடத்தில் அமைத்தால் மீனவர்களுக்கு பாதுகாப்பாகவும், பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்து அமைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த இரண்டு சுவர்கள் அமைப்பதால் மீனவர்க ளுக்கு எந்த பாதிப்புகளும், இடையூறும் வராமல் அமைத்து கொடுக்கும்படி செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது. இப்பகுதியில் 12,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சரவணக்குமார் , உதவி செயற்பொறியாளர் குருபாக்கியம் , இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து நிதியின் மூலம். ரூ 4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்யக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை யூனியன் பகுதியில் 35 பள்ளிகளிலும், களக்காடு யூனியனில் 21 பள்ளிகளிலும், மானூர் ஒன்றியத்தில் 59 பள்ளிகளிலும், நாங்குநேரி யூனியனில் 60 பள்ளிகளிலும், பாப்பாக்குடி யூனியனில் 24 பள்ளிகளிலும் சேரன்மகாதேவி யூனியனில் 9 பள்ளிகளிலும் என மொத்தம் 208 பள்ளிகளில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து நிதியின் மூலம். ரூ 4.16 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நாங்குநேரியில் நேற்று நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார்.

    அதனைதொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காணொலி காட்சி மூலம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்து பேசுகையில்,

    'தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதி படைத்த வர்களது குழந்தைகளுக்கு மட்டும் தான் இந்த அறிவுதிறன் வகுப்பறை கிடைத்து வந்தது.

    ஆனால் இந்த திட்டத்தை கிராமங்களிலும், குக்கிராமங்க ளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கும், நடுநிலைப் பள்ளிகளுக்கும் நம்முடைய பிள்ளைகள், பேரன், பேத்திகள், ஏழை, எளிய வீட்டு பிள்ளைகளுக்கும் ஒரு பைசா கூட செலவில்லாமல் வழங்க முடியும் என்பதை இன்றைக்கு நெல்லைச் சீமை தொடங்கி வைத்திருக்கிறது.

    சட்டப்பேரவை தலை வரும், மாவட்ட பஞ்சாயத்து தலைவரும் சிறப்பாக பணியாற்றிக் இந்த திட்டத்தை குக்கிராமங்களுக்கும் கொண்டு சென்றுள்ளனர். அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைப்பதை செய்யக்கூடிய மாவட்டம் நெல்லை மாவட்டம் தான் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

    தமிழகத்திற்கே ஒரு முன்னோடி மாவட்டமாக கல்வியில் சிறந்து விளக்குகின்ற மாவட்டமாக நெல்லை மாவட்டம் திகழ்கிறது. அறிவு திறன் வகுப்பறை திட்டம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.

    கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவரது வழியில் பள்ளிகளில் காலையில் நல்ல தரமான உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தி யுள்ளார்.

    கிராமபுறங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் நல்ல காற்றோட்டத்துடன் கல்வி பயில, புதிய தொழில் நுட்பத்துடன் விசாலமான வகுப்பறைகளை கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.800 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் கல்வி துறைக்கு ஒரே நேரத்தில் ரூ. 800 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் என்று முத்திரை பதித்துள்ளார்" என்றார்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் செல்வலெட்சுமி, கனகராஜ், சாலமோன் டேவிட், பாஸ்கர், மகேஷ்குமார், அருள் தவசு, ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி, தனிதங்கம், நகர திமுக செயலாளர் வானமாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாணவ-மாணவி களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. முன்னதாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்தில் அமைச்சர் பெரியசாமி ஆய்வு நடத்தினார். அதன் பின் செண்பகராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள அறிவு திறன் வகுப்பறையையும் அவர் பார்வையிட்டார்.

    • கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
    • சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் இரவோடு இரவாக வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை தெற்கு புற வழிச்சாலை மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பு பகுதியில் 20 சென்ட் இடம் உள்ளது. இதனை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக தகவல் வந்தது.

    ஆக்கிரமிப்பு

    இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என கூறி இருந்த னர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    சாலை மறியல்

    இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் வேலி அமைத்ததாக கூறப்படு கிறது. இதை அறிந்த அப்பகுதியினர் தெற்கு புறவழிச்சாலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொடர்ந்து சம்பந்தப் பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அது கோவிலுக்கு சொந்த மான இடம் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலி அமைத்த வர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கமிஷனர் சீனி வாசன் உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    கண்ணாடி உடைப்பு

    இதற்கிடையே மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்களின் கண்ணாடி கள் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடைத் தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.  

    • சேகரின் மகன் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
    • சேகரின் மகனை இம்சனும், வினோத்தும் வழிமறித்து தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள செட்டிமேடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் சேகர். பெயிண்டர். இவரது மகன் களக்காட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் புதூர் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது புதூரை சேர்ந்த நாராயணன் மகன் இம்சன் (19), அவரது அண்ணன் வினோத் (22) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர்., இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சேகரின் மகன் புதூர் பிள்ளையார்கோவில் அருகே வந்த போது இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் வழிமறித்து அவரை அவதூறாக பேசி, தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இதுதொடர்பாக இம்சனை கைது செய்தனர். அவரது அண்ணன் வினோத்தை தேடி வருகின்றனர்.

    • மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • போலீசார் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேலசெவல் சனிக்கிழமை வாரச்சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள், பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வாரச்சந்தை

    மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க நெல்லை டவுன், பாளை பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே மேலசெவலில் சனிக்கிழமை வாரச்சந்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சந்தை அமைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் வாய்மொழி யாக உத்தரவை பெற்று சந்தை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தோம்.

    இதற்காக கடைகளுக்கு முன் தொகை, மாத வாடகை பேசி சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளின் அவசர தேவைகளுக்காக கழிவறை, குடிநீர் வசதிகள், மின் விளக்குகள் பொருத்தி உள்ளோம். 50 கடைகள் அமைப்பதற்காக அனைத்து பணிகளும் நடை பெற்று உள்ளது.

    மேலும் அந்த கடைகளில் விற்பனை செய்வதற்காக பழங்கள், மீன், கருவாடு, மளிகை சாமான்கள் உள் ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.

    இந்நிலையில் முன்னீர் பள்ளம் போலீசார் மேல செவலில் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். சந்தை அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதால் மேலசெவலில் சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை கள் செயல்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்தின் 5-வது நாளான இன்று மீனவர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து மீனவர்கள் 5-வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூடுதாழை கிராமத்தில் கடலரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி என வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    4-வது நாளான நேற்று கடற்கரையில் மீனவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தின் 5-வது நாளான இன்று மீனவர்கள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள போராட்ட பந்தலில் அமர்ந்து கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மீனவர்கள் 5-வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது.
    • தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேர் எழுதினர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் இன்று பிளஸ்-1 தேர்வையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.

    நேற்று பிளஸ்-2 தேர்வுக்காக அமைக்கப்பட்டு இருந்த அதே 73 மையங்களில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி நடைபெற்றது. சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 12 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 29 மையங்களிலும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 28 மையங்களிலும் இன்று தேர்வு நடைபெற்றது. இதுதவிர 4 மையங்கள் சிறைக்கைதிகள் உள்பட தனிதேர்வர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

    இன்று தொடக்கம்

    இந்த தேர்வை மொத்தம் 184 பள்ளிகளை சேர்ந்த 8,609 மாணவர்கள், 11 ஆயிரத்து 172 மாணவிகள் என மொத்தம் 19, 781 பேர் எழுதினர். இன்று தொடங்கும் இந்த தேர்வு வருகிற 5-ந்தேதி வரை நடக்கிறது.

    தேர்வையொட்டி இன்று காலை 7 மணி முதல் 16 வாகனங்கள் மூலம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ள 69 மையங்களுக்கும் வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து சில மையங்களில் தேர்வினை கலெக்டர் கார்த்திகேயன், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் தேர்வு பணிக்காக மொத்தம் 1, 968 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதில் அறை கண்காணிப்பாளர்களாக 1,507 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 64 மையங்களில் இன்று தொடங்கிய பிளஸ்-1 தேர்வை 16,499 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்காக 1,322 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனித்தேர்வு மையங்களில் சிறை கைதிகள் உள்பட பலர் தேர்வு எழுத உள்ளனர்.

    தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையான சோதனைகளுக்கு பின்னரே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரத்தில் கண்காணிப்பு ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

    • மக்கள் குறைதீர்க்கும் முகாம் தியாகராஜ நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு பொது தேர்வு நடப்பதால் சீரான மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் தியாகராஜ நகரில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    அதிகாரிகளுக்கு உத்தரவு

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கிராமப்புறம் ( பொறுப்பு) வெங்கடேஷ்மணிக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது கிராமப்புற கோட்ட பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு அரசு பொது தேர்வு நடப்பதால் சீரான மின்விநியோகம் வழங்குவதற்கும், இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏதேனும் மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழியில் மின் விநியோகம் வழங்குவதற்கும், தவிர்க்க இயலாத சூழலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிட்டார். 

    ×