களக்காடு அருகே தோட்டத்துக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்

காட்டு பன்றிகள் கூட்டம் 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது.களக்காடு பகுதிகளில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
சேதமான நெற்பயிர்களை படத்தில் காணலாம்.
சேதமான நெற்பயிர்களை படத்தில் காணலாம்.
Published on

களக்காடு:

களக்காடு மிஷின் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் கென்னி டேவிஸ் (வயது36). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் களக்காடு தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு பகுதியில் உள்ளது.

காட்டுபன்றிகள் அட்டகாசம்

நேற்று முன் தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது தோட்டத்துக்குள் சென்று 5 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்களை சேதப்படுத்தியது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெல் பயிர்களை பன்றிகள் நாசம் செய்ததால் அவருக்கு ரூ. 2 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெற்பயிர் அரசின் விதை பண்ணையில் இருந்து விதை வாங்கி பயிர் செய்யப்பட்டதாகும்.

அறுவடை செய்த பின்னர் நெல்லை அரசின் விதை பண்ணைக்கு வழங்க வேண்டும். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் நாசம் செய்து விட்டன. களக்காடு சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் புகார்

வனப்பகுதிக்குள் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் காட்டுக்குள் செல்லாமல், மலையடிவார புதர்களில் பதுங்கியுள்ளன. இவைகள் இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் நுழைந்து நெல், வாழை, உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

காட்டுபன்றிகள் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே காட்டு பன்றிகளால் நாசமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com