என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நகர்ப்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
    • சபை கூட்டங்கள் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும்.

    நெல்லை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநில மாநாடு 2-வது நாளாக இன்று பாளை தியாகராஜ நகரில் நடைபெற்றது.

    இதில் தலைமைகுழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் வரி வருவாயில் இருந்து 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்வது போதுமானதாக இல்லை. கேரளாவில் மாநில அரசின் வரி வருவாயில் 38 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்வதை போல தமிழகத்திலும் 30 சதவீதமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    அரசியல் சட்டத்திருத்தம் 74-ன் படி மாவட்ட அளவில் திட்டக்குழு அமைக்க வேண்டும். மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதாகும். ஆனால் அந்த குழு தமிழகத்தில் இல்லை. அதனை உடனடியாக அமைக்க வேண்டும். கிராமப்புற 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயர்மட்ட குழு அமைத்ததை போல நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் வழங்க வல்லுனர்கள் குழு அமைக்க வேண்டும்.

    நகர்ப்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த சிறப்பான முறையில் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த சபை கூட்டங்கள் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும். போராட்டங்கள் நடத்தக்கூடிய அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாநில அரசு பயிற்சி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாழை நார் உற்பத்தி மையங்கள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக 30 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    முக்கூடலில் உள்ள பீடி தொழிலாளர்களுக்கான மத்திய அரசு மருத்துவமனையில் இன்று பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கான 3 மாத கால பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மகளிர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு சுயமாக தொழில் செய்து மகளிர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மகளிர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் ஏற்கனவே வாழை நார் உற்பத்தி மையங்கள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஹேர் விக் எனப்படும் தலை முடியினாலான சாதனங்களை தயாரிப்பதற்கான 3 மாத கால பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை சென்னை புற்றுநோய் மருத்துவமனையின் வழிகாட்டுதலின் படி எக்ஸோடஸ் என்னும் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது. உற்பத்தி செய்யும் ஹேர் விக்குகளை அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிறுவனமே விலைக்கு வாங்கிக்கொள்ளும்படி பயிற்சி நிறுவனத்தால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உறுதியான வாழ்வாதாரமும் பயிற்சியாளர்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது. இப்பயிற்சி பெற்றவர்கள் இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்தோ அல்லது சுயமாகவோ ஹேர் விக் செய்யும் தொழிலை செய்து அதிக வருமானம் ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளலாம்.

    முதற்கட்டமாக 30 பீடி சுற்றும் பெண்களுக்கு இந்த மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, ஹேர் விக் செய்வதில் திறமையான வர்களாக தயார் செய்யப்பட்ட பின் மேலும் 30 பெண்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு குழுவாக பயிற்சி வழங்க ப்பட்டு இப்பெண்களின் மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் வருவாயை பெருக்கி பெண்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவதற்கான இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் கோகுல், மருத்துவர் பெர்னட், பயிற்றுநர் ஷிபா, உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு பயிற்சி பிராங்களின், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லெட்சுமணன், அடையாறு புற்றுநோய் மருத்துவர் ஆலோசகர் பிரபாகரன், திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலர் மணி, ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் மற்றும் பயிற்சியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர்.
    • திருட்டு குறித்து மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

    நெல்லை:

    பாளை மகாராஜநகரில் ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை அங்குள்ள 8 மாணவர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவர்கள் இது குறித்து ஐகிரவுண்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குலசேகர பாண்டியன் வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் குறிச்சி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார்.
    • வேகமாக வந்த வாகனம் செல்லத்துரை மீது மோதியது.

    நெல்லை:

    மேலப்பாளையம் குறிச்சி சாந்தமூர்த்தி தெருவை சேர்ந்தவர் குலசேகர பாண்டியன் (வயது 40). டிரைவர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    நேருக்கு நேர் மோதல்

    நேற்று குலசேகர பாண்டியன் வண்ணார் பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் குறிச்சி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், குலசேகர பாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குலசேகர பாண்டியன் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (75). இவர் சம்பவத்தன்று அங்குள்ள மெயின் ரோட்டில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வாகனம் ஒன்று செல்லத்துரை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிலாளி பலி

    மூன்றடப்பு தெக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று அங்குள்ள வாகைகுளம் ரோட்டில் கணேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து மூன்ற டைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.
    • 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுப்பணித்துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு நெல்லை மாவட்ட கிளை சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சண்முக சுந்தரராஜ் நோக்கங்கள் குறித்து விளக்கி கூறினார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தி.மு.க. அரசு பதவியேற்ற பின் வழங்கிய 4 தவணை அகவிலைப்படியை மத்திய அரசுபோல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி 70 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் நல்லபெருமாள் நன்றி கூறினார்.

    • ஆண்டனி பிலிப் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • கடையில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் ஆண்டனி பிலிப் (வயது 36). இவர் வடக்கன்குளம்-காவல்கிணறு சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீடு திரும்பிய அவர் நேற்று கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்க ப்பட்டு இருந்த செல்போன்கள், புளூடூத் உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொரு ட்கள் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக ஆண்டனி பிலிப் அளித்த புகாரின்பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான் குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 137 கே திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
    • கலுங்குவிளையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாத்தான்குளம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

    நெல்லை:

    சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாக்குடி, நெடுங் குளம், கொம்பன் குளம், கலுங்குவிளை வழியாக செல்லும் வழித்தடம் கிராம புற பகுதி என்பதால் ஒரு சில பஸ்கள் மட்டுமே உரிய நேரத்தில் இயக்கப்படுகின்றன.

    அதில் நெல்லையில் இருந்து பேய்க்குளம், பழனியப்பபுரம், விராக்குளம், கோமானேரி, கலுங்கு விளை, நெடுங் குளம் வழியாக இயக்கப் பட்ட அரசு பஸ் தடம் எண் 137 ஏ, நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, காரியாண்டி, கலுங்குவிளை வழியாக சாத்தான் குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் தடம் எண் 137 கே திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

    இதனால் கலுங்கு விளையை சுற்றியுள்ள கிராம மக்கள் சாத்தான் குளம் வந்து செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆதலால் அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் இதனை கவனித்து நெல்லையில் இருந்து கலுங்குவிளை வழியாக இயக்கப்பட்ட 137ஏ, 137 கே அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனி பாஸ் கூறுகையில், கலுங்கு விளை வழித்தடத்தில் இயக்கப்பட்டு நிறுத்தம் செய்யப்பட்ட பஸ்களை இயக்கிட கோரி கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டதன் பேரில் கடந்த வாரம் தடம் எண் 137ஏ இயக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் தரப்பில் முறையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டநிலையில் தற்போது இயக்கப்பட வில்லை. ஆதலால் அதிகாரிகள் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை முறையாக இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
    • சர்ச்சைக்குள்ளான போலீஸ் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களின் பற்களை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பிடுங்கியதாக எழுந்த புகாரையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. தமிழக அரசும் இதுதொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக நியமித்து விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் உள்பட சில போலீசார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

    இந்நிலையில் சர்ச்சைக்குள்ளான இந்த போலீஸ் நிலையங்களில் புதிய இன்ஸ்பெக்டர்களை நியமனம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்பாசமுத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக மகேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சுஜித் ஆனந்த் வி.கே.புரத்திற்கும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • எதிர் தரப்பில் இருந்த காங்கிரசார் வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தி என கோஷம் எழுப்பினர்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    நெல்லை:

    நாகர்கோவிலில் கடந்த 3-ந் தேதி பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட சென்ற காங்கிரசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நெல்லை மாவட்ட முன்னாள் பா.ஜனதா தலைவர் மகாராஜன், கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா தலைவர் தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து பாளை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பாளை ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர்களை வரவேற்க குமரி, நெல்லை மாவட்ட பா.ஜ.கவினர் மற்றும் காங்கிரசார் மத்திய சிறைச்சாலை முன் குவிந்தனர்.

    முதலில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர்களை சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது எதிர் தரப்பில் இருந்த காங்கிரசார் வருங்கால பிரதம மந்திரி ராகுல் காந்தி என கோஷம் எழுப்பினர். பா.ஜ.க.வினரும், காங்கிரசாரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கிழக்கு) சீனிவாசன் தலைமையில் போலீசார் இரு கட்சி நிர்வாகிகளையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து 2 கட்சி தொண்டர்களும் கலைந்து சென்றனர்.

    • விழிப்புணர்வு பேரணி நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் நடைபெற்றது.
    • கூடுதல் சார்பு நீதிபதி இசக்கியப்பன் வரவேற்புரையாற்றினார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் சமரச மையம் ஆரம்பிக்கப்பட்டு 18 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டி பொது மக்கள் சமரச மையத்தின் மூலம் வழக்குகளை விரைவாக சமரசமாக முடிப்பது பற்றிய சமரச தின விழிப்புணர்வு துண்டு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் நடைபெற்றது.

    விழாவில் சமரசம் குறித்த சமரச தின விழிப்புணர்வு துண்டு பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் மற்றும் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அப்போது முதன்மை மாவட்ட நீதிபதி சீனிவாசன் பேசுகையில், சமரசம் என்பது வழக்கு தரப்பினர்கள் தங்களது முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு காணக்கூடியது எளிய வழி. சமரசத்தின் போது வழக்கு தரப்பினர்கள் தங்கள் உள் மனம் திறந்து பேசி தங்கள் வழக்கினை விரைவாக நீதிமன்றங்கள் முடித்து வைக்க வழிவகை செய்கிறது. எனவே பொது மக்கள் தங்கள் வழக்குகளை சமரச மையத்தில் உள்ள பயிற்சிப்பெற்ற சமரச கர்கள் முன்னிலையில் பேசி நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளை விரைவாக முடிக்க சமரச மையத்தை நாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    முன்னதாக சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். விழாவில் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மநாபன், 3-வது கூடுதல் நீதிபதி பன்னீர் செல்வம், 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி திருமகள், மகிளா நீதிமன்ற மாவட்ட நீதிபதி விஜயகுமார், சிறப்பு போக்சோ வழக்குகள் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, நெல்லை தலைமை நீதித்துறை நடுவர் மனோஜ்குமார், முதன்மை சார்பு நீதிபதி அமிர்தவேலு, சிறப்பு ஊழல் தடுப்பு வழக்கு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம் மற்றும் உரிமையியல் நீதிபதிகள் சுப்பையா, வக்கீல் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார் நன்றி கூறினார். இந்த விழா விற்கான ஏற்பாடுகளை சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கி யப்பன் செய்தி ருந்தார்.

    • சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது.
    • கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் கே.ஆர். ராஜூ, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தச்சநல்லூர் ஆனந்தபுரத்தை சேர்ந்த நயினார்குளம் நீர்ப்பாசன உதவி செயலாளர் முருகன் தலைமையில் கொடுத்த மனுவில், நயினார் குளத்திற்கு தண்ணீர் வரக்கூடிய டவுன் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அருகில் குடியிருப்போர் அங்கு குப்பைகளை கொட்டி செல்கின்றனர். அதனை தடுக்கும் விதமாக அங்கு டைமண்ட் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், சப்பாணிமாடன் கோவில் பகுதியில் ஒருவாரமாக குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையிருப்பு பகுதியில் புதிய வாறுகால் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர். கொக்கிரகுளம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் இளங்கோவடிகள் தெரு, 14 வார்டு அனவரத சுந்தர விநாயகர் கோவில் தெருவில் வாறுகால்களை தூர்வார வேண்டும் என கூறியிருந்தனர்.

    • விசாரணை நடத்தி தப்பி ஓடிய சிறுவர்களை போலீசார் தேடி வந்தனர்.
    • தப்பியோடிய 5 சிறுவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓடினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய சிறுவர்களை தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று தாழையூத்து பகுதியில் ஒரு சிறுவன், ஸ்ரீவைகுண்டத்தில் 2 சிறுவர்கள், தூத்துக்குடியில் 3 சிறுவர்கள் என 6 பேர் பிடிபட்டனர். தொடர்ந்து மற்றவர்களை தேடும் பணி நடந்தது. இதில் தென்காசியை சேர்ந்த ஒரு சிறுவன் போலீசாரிடம் பிடிபட்டான். தப்பியோடிய மேலும் 5 சிறுவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களை பிடிப்பதற்காக போலீசார் குமரி மாவட்டம் சென்றுள்ளனர்.

    ×