என் மலர்
திருநெல்வேலி
- காளியப்பன் ரெட்டியாபுரம் விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார்.
- மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு காளியப்பன் அனுப்பி வைக்கப்பட்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது58). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள ரெட்டியாபுரம் விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை படுத்திருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் வாயில் நுரை தள்ளியவாறு காளியப்பன் மயங்கி கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேரன் மகா தேவி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி இன்று அதிகாலை காளியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாவல் பழங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
- கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் நெல்லைக்கு அதிக அளவில் நாவல் பழங்கள் வந்துள்ளது.
நெல்லை:
சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அரிய மருந்தாக மருத்துவ குணம் கொண்டது நாவல் பழம். தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வண்ணார்பேட்டை, டவுன், பாளை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நாவல் பழங்கள் விற்பனை தொடங்கி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல்லை மாவட்டத்திற்கு நாவல் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்தும் நெல்லைக்கு அதிக அளவில் நாவல் பழங்கள் வந்துள்ளது. இவை கிலோ சுமார் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
- ஜனார்த்தனன் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார்.
- இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
களக்காடு:
தெற்கு வள்ளியூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது18). இவர் பெயிண்டிங் வேலைக்காக ஏர்வாடி மீனாட்சிபுரத்திற்கு நண்பர்களுடன் வந்திருந்தார். வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட்ட போது, சேசையாபுரத்தை சேர்ந்த கண்ணன் (26), மணிகண்டன் (26), பிரவின்குமார் (19), மற்றொரு மணிகண்டன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து ஜனார்த்தனை வழிமறித்து தகராறு செய்தனர்.
இதுபற்றி ஜனார்த்தனன் தெற்கு வள்ளியூரில் உள்ள தனது உறவினர் இளங்கோவிடம் (19) தகவல் கூறினார்.
இதையடுத்து இளங்கோ சம்பவ இடத்திற்கு வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பிரவின்குமார் , மற்றொரு மணிகண்டன் ஆகிய 4 பேரும் சேர்ந்து இளங்கோ மற்றும் ஜனார்த்தனை அவதூறாக பேசி பாட்டிலால் தாக்கினர். மேலும் அவரது மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனர்.
இதுபோல இளங்கோ, முகேஷ்குமார் (18), ஜனார்த்தனன் (18), அஸ்வின்பாபு (20), முரளிகாந்த் (19), மாதவன் (22) ஆகிய 6 பேரும் சேர்ந்து பிரவின்குமாரை பாட்டிலால் தாக்கினர். இதுபற்றி இரு தரப்பினரும் ஏர்வாடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கண்ணன், மணிகண்டன் பிரவின்குமார், மற்றொரு மணிகண்டன், இளங்கோ, முகேஷ்குமார் ஜனார்த்தனன் அஸ்வின்பாபு ,முரளிகாந்த் ஆகிய 9 பேரை கைது செய்தனர். மாதவனை தேடி வருகின்றனர்.
- ராஜாக்கனி கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- அக்கம்பக்கத்தினர் ராஜாக்கனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
நெல்லை:
பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜக்கனி (வயது36). இவரது கணவர் டானி ரூபன் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த ராஜாக்கனி கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பானுபிரியாவிற்கும்,தங்கராஜ்க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
- தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக பானுபிரியா வசித்து வந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுபிரியாவிற்கும் (வயது 23), ஏமன்குளத்தை சேர்ந்த தங்கராஜ்க்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து பானுபிரியா கணவர் தங்கராஜை விட்டு பிரிந்து தனது பெண் குழந்தையுடன் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வந்தார். கடந்த 31-ந்தேதி பானுபிரியா தனது குழந்தை மற்றும் தாயார் சமுத்திரகனியுடன் களக்காட்டிற்கு வந்தார். பின்னர் தாயாரிடம் பேன்சி பொருட்கள் வாங்கி வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் சென்றார். ஆனால் அதன் பின் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சமுத்திரகனி பல்வேறு இடங்களில் தேடியும் பானுபிரியா மற்றும் அவரது குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகின்றனர்.
- கடந்த 24-ந்தேதி முகம்மது இம்ரான் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
- இதைப்பார்த்த முகம்மது இம்ரானின் தாயார் மீராள் அவரை கண்டித்தார்.
களக்காடு:
ஏர்வாடி வணிகர் மேல முடுக்கு தெருவை சேர்ந்த அகமது பாட்ஷா மகன் முகம்மது இம்ரான் (வயது29). இவர் குவைத் நாட்டில் கேட்டரிங் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந்தேதி விடுமுறையில் ஊருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 24-ந்தேதி முகம்மது இம்ரான் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த முகம்மது இம்ரானின் தாயார் மீராள், அவரை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த முகம்மது இம்ரான் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இது பற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
- கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.
நெல்லை:
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.
இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
- கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு அருகே உள்ள கட்டிடத்தில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர் அனிதா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தது கே.டி.சி. நகர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2022-ம் ஆண்டு பாளை ராஜகோபாலசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துஹரி (வயது 22) என்பவரை அவரது நண்பர் பிரீதம் என்பவர், சாந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்து மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், அந்த வழக்கில் ஜோஸ் செல்வராஜ், ப்ரீத்தம், செல்வகுமார், சுகுமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று ஜோஸ் செல்வராஜ் ஆஜராகி விட்டு வரும்போது முத்து ஹரியின் அண்ணன் சந்தோஷ் என்பவர் ஜோஸ் செல்வராஜின் நண்பர்கள் ஆன ப்ரீத்தம் செல்வகுமார், சுகுமார் ஆகியோரிடம் மது வாங்கிக் கொடுத்து ஜோஸ் செல்வராஜை ஜெபக்கூடத்திற்கு பின்புறம் உள்ள அந்த கட்டிடத்திற்கு அழைத்து வந்து மதுவை குடிக்க வைத்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பழிக்குப் பழியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ப்ரீத்தம் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் போலி மதுபான கடைகளையும் அடைத்து கள்ளுக்கடைகளை திறக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் தென்மண்டல தலைவர் கார்த்திசன், மாநில துணைத்தலைவர் உடையார் மற்றும் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் பாட்டில்களில் கள் கொண்டு வந்து குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அவர்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி, கள்ளச்சாராயத்தை தடுத்து நிறுத்தி கள் விற்பனைக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.
விநாயகர் திருவிழா
48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.
தேரோட்டம்
பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.
இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- புதிய கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
நெல்லை:
மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வள்ளியூரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று நேரில் சென்று மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி, மூலைக்கரைப்பட்டி காங்கிரஸ் நகர தலைவர் முத்துகிருஷ்ணன், வட்டார தலைவர்கள் நளன், ராமஜெயம், மூலைக்கரைப்பட்டி தி.மு.க. நகர தலைவர் முருகையா பாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வாரிசு தாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா, பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கி திறப்பு விழா நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணி மனையில் இன்று நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., மேயர் சரவணன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனை யாக்கியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அந்த வகையில் 297 பேருக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
பின்னர், பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணப்பலன்களை வழங்கினார். ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்ப லன்கள் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
14-வது ஊதிய உயர்வு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிந்திருக்க வேண்டும். அதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலைமைகளை முதல்-அமைச்சர் சரி செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு பேசும்போது, அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சென்றால் பஸ்சில் கட்டணம் வாங்க கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாடு சென்று முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளார். சாமானியர்களுக்கு வேலை கிடைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது சாமானியர்களுக்கான ஆட்சி என்றார்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பஸ்சில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்படுகிறது. எனவே இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.
48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் இருக்கும் நிலையில் ரூ.111 கோடியே 95 லட்சம் போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை நிதி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.






