என் மலர்
திருநெல்வேலி
- கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
நெல்லை:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று வீசத்தொடங்கி உள்ளது.
இதனால் கடுமையான வெயில் அடித்த போதிலும் காற்றின் வேகம் அதிகரிப்பால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகத்தால் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் மின் தேவை நாள் ஒன்றிற்கு 18 ஆயிரம் மெகாவாட்டிற்கும் அதிகமாக தேவை என்ற நிலையில் சீசன் காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி ஓரளவிற்கு கை கொடுக்கிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரை காற்று சீசன் என்பதால் இந்த காலகட்டத்தில் 5 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தென் மாவட்டங்களான நெல்லை , கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 7,000-க்கும் அதிகமான காற்றலைகள் நிறுவப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதம் காற்றாலை சீசன் தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு 2 ஆயிரம் மெகாவாட்டிற்கும் குறைவாகவே மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 4,208 மெகாவாட்டை எட்டியுள்ளது.
- 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
- தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களி லும் மாறி வரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வாறு மாற்றிட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டது.
முதற்கட்டமாக தற்போது தமிழகத்தில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் அமையப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில் நுட்ப மையமும் இதில் அடங்கும். அங்கு நடந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் ராஜூ, மண்டல துணை இயக்குனர் செல்வ குமார், உதவி இயக்குனர் ஜார்ஜ் பிராங்கிளின், பேட்டை ஐ.டி.ஐ. முதல்வர் லட்சுமணன், பொறியாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினர். பின்னர் ஐ.டி.ஐ வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் மாணவ- மாணவிகள், ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-
இக்கல்வியாண்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள இந்த தொழில் 4.0 தொழில் நுட்ப மையத்தின் மூலம் புதிதாக மேலும் 4 தொழிற்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சி.என்.சி எந்திர தொழில் நுட்ப பணியாளர், அடிப் படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர், உற்பத்தி கட்டுப்பாடு மற்றும் தன்னியக்குமயம், தொழில்துறை எந்திரனியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்ப பணியாளர் ஆகியவை இந்த 4 புதிய தொழில் பிரிவுகள் ஆகும்.
இத்தொழிற்பிரிவுகளின் மூலம் வருடத்திற்கு கூடுதலாக 128 பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பயிற்சியாளர்கள் திறன் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறுவதின் மூலம் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும் நாட்டின் உற்பத்தி திறன் அதிகரித்து வளமான இந்தியாவை உருவாக்கவும் இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படையினர் இன்று மூணாறு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த். தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி உதவியாளர்கள் 2 பேருடன் தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு புறப்பட்டு சென்றார்.
ரூ.1½ கோடி கொள்ளை
கார் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு அருகே சென்றபோது இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து மிளகாய் பொடி தூவி தாக்கி விட்டு அவர்களிடம் இருந்த ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக மூன்றடைப்பு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு ) செல்வி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
2 பேர் சிக்கினர்
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை தனிப்படையினர் இன்று மூணாறு பகுதியில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? கொள்ளையடிக்கப்பட்ட பணம் யாரிடம் உள்ளது? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2003 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் 110 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
- அந்த பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக தெரிகிறது.
நெல்லை:
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மானூர் லெட்சுமியாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு ஒரு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மானூர் லெட்சுமியாபுரத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலமாக கடந்த 2003 மற்றும் 2012-ம் ஆண்டு களில் எட்டான் குளம், மானூர் வடக்குத் தெரு கரையிருப்பை சேர்ந்த 110 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் சிலர் வீடு கட்டி மின் இணைப்பு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் மாற்றம் செய்து குடியிருந்து வருகின்றனர். ஒரு சிலர் வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தாசில்தார் மற்றும் சில அதிகாரிகள் எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு பட்டா இடத்தை அகற்றி வருகிறார்கள்.
மேலும் இந்த பகுதியில் மாற்று மதத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் நாங்கள் வீடு கட்டி குடியிருக்க அரசும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட 302 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
- மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 2 நாட்களில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கு டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமை தாங்கினார். வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு நியமிக்கப்பட்டு மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட 302 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 10 பேருக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான உடனடி ஆணைகள் வழங்கப் பட்டன. மீதமுள்ள கோரி க்கை மனுக்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர்கள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு 2 நாட்களில் தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பறக்கும் படை தாசில்தார் சுப்பு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லட்சுமி, சிவில் சப்ளை தாசில்தார் மோகனா, துணை தாசில்தார் நாரா யணன், உமா மகேஸ்வரி, கூடுதல் துணைதாசில்தார் வேல் முருகன், கிராம உதவி யாளர்கள் சண்முக வேலு, முண்டசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 3-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
- சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் கோவில் பிரகாரங்களில் சுற்றி வந்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவிலின் உள்பகுதியில் மகேந்திரகிரிநாதர் என்ற திருநாமத்துடன் சிவன் சன்னதி அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 1-ந்தேதி திடீரென சிவன் சன்னதி இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 10.5.2022-ல் திருக்குறுங்குடி கோவிலில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் சிவன் சன்னதி அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனைதொடர்ந்து தருமபுரம் ஆதினம் 27-வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மாச்சாரிய சுவாமிகள் கடந்த ஆண்டு (2022) ஜூன் 24-ந்தேதி திருக்குறுங்குடி வந்து ராமனுஜ ஜீயரிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோவிலில் பைரவர் சன்னதியையொட்டி ஸ்ரீ மகேந்திரகிரி நாதர் சிவன் சன்னதி கட்டுமான பணிகள் தமிழக அரசு அனுமதியுடன் கடந்த ஆண்டு தொடங்கியது. விறுவிறுப்பாக நடந்து வந்த கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 3-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்படும் வைபவம் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய குடங்களுடன் கோவில் பிரகாரங்களில் சுற்றி வந்தனர். அதன்பின்னர் ராமானுஜ ஜீயர் ஆசியுடன் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜீயர் மடம் பவர் ஏஜெண்ட் பரமசிவன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது.
- உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.
திசையன்விளை:
ராதாபுரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் உவரியில் நடந்தது. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜாவிடம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனி வாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல ராஜா, திசையன் விளை பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று பெருமாள் அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் அவரை அரிவாளால் வெட்டினார்.
- இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
களக்காடு:
நாங்குநேரி சந்திகிணறு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது37). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 1 வாரத்திற்கு முன்பு நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பெருமாளிடம் லோடு ஏற்றி செல்ல ஆட்டோவை கொண்டு வருமாறு கூறினார். அதற்கு பெருமாள் சவாரி உள்ளதால் வர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று பெருமாள் அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் அவரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவனை கைது செய்தனர்.
- ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
களக்காடு:
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்து நேற்று முன்தினம் பிற்பகலில் நெல்லை மாவட்டத்துக்கு லாரியில் கொண்டு வந்தனர்.
பின்னர் அந்த யானையை மணிமுத்தாறு வன சோதனைச்சாவடி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு வழியாக மேல் கோதையாறு அணை பகுதியில் கொண்டு விட்டனர். அங்கிருந்து வன ஊழியர்கள் மேற்பார்வையில் அடர்ந்த வனப்பகுதியான முத்துக்குழி வயல் பகுதியில் யானை விடப்பட்டது. அந்த யானையின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் அதன் காதில் ரேடார் கருவியை பொருத்தியிருந்தனர். அதன்மூலம் யானையின் இருப்பிடம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. மயக்க மருந்து செலுத்தியதில் இருந்து மீளாத அந்த யானை முத்துக்குழி வயல் பகுதியில் தனக்கான வாழ்விடத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் மயக்கத்தில் இருந்து முழுமையாக மீண்ட அரிசிக்கொம்பன் இன்று அதிகாலை கோதையாற்றில் இருந்து சற்று தொலைவில் உள்ள குட்டியாறு வனப்பகுதியில் நடமாடியது. ஆனால் அதன்பின்னர் அந்த யானை மேற்கு திசையில் அதாவது குமரி மாவட்டம் பேச்சியாறு அணை வனப்பகுதியை நோக்கி வேகமாக சென்றது. இதனை ஜி.பி.எஸ். கருவி மூலம் அறிந்த வனத்துறையினர் உடனடியாக களக்காடு சரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து களக்காடு, திருக்குறுங்குடி வனத்துறை ஊழியர்கள் யானை சென்று கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் யானையை மீண்டும் குட்டியாறு வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். தொடர்ந்து அவர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
- குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குபட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப்பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குள் உள்ளன. இதில் குறிப்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டப் பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோவிலுக்கு சிலர் வழிபட சென்றபோது கோவிலின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ஆசுவாசமாக படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்த பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோயில் முகப்பில் படுத்து இளைப்பாறும் குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
- வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
- தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி மகாராணி(வயது 65). முன்னாள் கவுன்சிலரான இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் மகாராணி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தூங்கி கொண்டிருந்த மகாராணி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும் இந்த சிலிண்டர் வெடிப்பால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இதுதொடர்பாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த திசையன்விளை போலீசார், மகாராணி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்த மகாராணிக்கு கணவர், 4 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் நந்தகோபாலுடன் ஒரு மகன் மற்றும் மகள் சுப்பிரமணியபுரத்தில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.
- இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு நடுக்கல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
- ஒருவர் எதிர்பாராத விதமாகரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பாலருவி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு பேட்டையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், பலியானவர் பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் பலியானவர் நடுக்கல்லூர் ரெயில்வேபீடர் ரோட்டை சேர்ந்த பகவதி (வயது 40) என்பது தெரியவந்தது. கூலி வேலை செய்து வந்த இவருக்கு சொர்ணம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பகவதி இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அங்கு சென்றிருக்கலாம் என்றும், அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் மோதி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






