என் மலர்
திருநெல்வேலி
- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று விஜயதசமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- புதிய மாணவ- மாணவிகளுக்கு அட்சராப்பியாசம் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று விஜயதசமி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பள்ளியில் புதிய மாணவ- மாணவிகளுக்கு அட்சராப்பியாசம் வழங்கப்பட்டது. பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலட்சுமி, முதல்வர் முருகவேள், பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி மற்றும் ஆசிரியர்கள் விழாவில் கலந்து கொண்டனர். புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- முத்துகிருஷ்ணன் கடந்த 2½ மாதமாக விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
- கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முப்பிடாதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
நெல்லை:
வள்ளியூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது 42). இவர் கடந்த 2015-ம் ஆண்டு பணகுடி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நெல்லை நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் முத்துகிருஷ்ணனை பணகுடி போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.களக்காடு அக்ரஹார தெருவை சேர்ந்த முப்பிடாதி (23) என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 4½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், எதிரிக்கு நெல்லை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து முப்பிடாதியை சிவந்திபட்டி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- மாசானம் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு, தற்போது ஊரில் கூலி தொழில் செய்து வருகிறார்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மாசானம் அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் மாசானம் (வயது 23). இவர் வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு, தற்போது ஊரில் கூலி தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் வள்ளியூரில் உள்ள ஒரு பள்ளி யில் படித்த போது, அதே பள்ளியில் படித்த பட்டர்புரத்தை சேர்ந்த மாணவியிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த அந்த மாணவி யின் தந்தை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மாசானம் அந்த பெண்ணுடன் பேசியதாக தெரிகிறது. இதையடுத்து பெண்ணின் தந்தை, அவரது சகோதரர்கள் என 4 பேர் சேர்ந்து, மாசானத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 பேரை தேடி வருகின்றனர்.
- கேசவன் வீட்டில் இருந்த காரை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார்.
- காரை கழுவிக்கொண்டு இருந்த கேசவன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது.
நெல்லை:
பாளை பெருமாள்புரம் என்.ஜி.ஓ. ஏ காலனி, கனரா பேங்க் காலனியை சேர்ந்தவர் கேசவன் (வயது 58). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கேசவன் வீட்டில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதையடுத்து வீட்டில் இருந்த காரை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மோட்டாரில் மின் கசிவு ஏற்பட்டு, காரை கழுவிக்கொண்டு இருந்த கேசவன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கேசவனை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜயதசமியை முன்னிட்டு வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
- வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்கள் சிறப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாணவர் சேர்க்கையின் போது குழந்தைகளை நெல்மணி யில் 'அ'கரம் எழுத வைத்து குழந்தைகள் தங்கள் கற்றல் திறனில் முதல் படியை வி.எஸ்.ஆர். பள்ளியில் எடுத்து வைத்தனர். இதனை புகைப்படம் எடுத்து பெற்றோரிடம் கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும், அதிக மாணவர் சேர்க்கையை கருத்தில் கொண்டு 2023-24 - ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் பிரி.கே.ஜி.யில் மற்றொரு பிரிவு தொடங்கப் பட்டுள்ளது என்றும் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.
சரஸ்வதி பூஜை விஜயதசமி விழா
வி.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் முன்னிலை வகித்தார். இயக்குனர் சவுமியா ஜெகதீஸ் குத்து விளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். விழாவில் பள்ளியின் முதல்வர் அன்னத்தங்கம் மற்றும் ஆசிரிய -ஆசிரியை கள் கலந்து கொண்டனர்.
சரஸ்வதி பூஜை அன்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட மாண வர்களின் விரலை பிடித்து நெல்மணியில் எழுத ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர்.
மாணவர்கள் ஆர்வமு டன் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு கொடுக்கப்பட்டது. இன்றும் சிறப்பு மாணவர் சேர்க்கை பிரி.கே.ஜி. முதல் 9-ம் வகுப்பு வரை நடை பெறுகிறது.
- 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் இன்று காலை காலமானார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் வேல்துரை. இவர் 1996-ம் ஆண்டு முதல் 2001 வரையில் த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் இன்று காலை காலமானார்.
அவரது உடலுக்கு காங்கிரஸ் கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரையின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாகுளத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
+2
- ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபடுவார்கள்.
- ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது.
நெல்லை:
நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி திருவிழாவின் 9-வது நாளான நாளை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும், 10-வது நாள் விஜயதசமியும் கொண்டா டப்படுகிறது.
இதில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையான நாளைய தினம் தொழிலாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொரி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபடுவார்கள். ஆயுத பூஜையில் பொரி, பழங்கள், சர்க்கரை, பழங்கள், இனிப்புகள் வைத்தும், வாழை மரக்கன்று கள் கட்டியும் பூ மாலை அணிவித்தும் பூசணிக்காய் உடைத்தும் வழிபடுவார்கள். கல்வியாளர்கள் தங்களது படிப்பறை, புத்தகங்களில் பூஜை செய்வார்கள்.
நெல்லை மாவட்டத்தில் சரஸ்வதி பூஜைக்கு தேவை யான பொருட்கள் வாங்குவதற்காக இன்று சந்தைகளில் மக்கள் கூட்டம் களை கட்டியது. டவுன் போஸ் மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட்டுகளில் அவல், பொரி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை முதலே வர தொடங்கினர்.
நேற்று தொடங்கி 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலா னோர் தங்களது குடும்பத்து டன் இன்று மார்க்கெட்டு களில் குவிந்தனர். இதனால் மார்க்கெட்டுகள் களைகட்டி காணப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தக்காளி, கத்தரிக்காய், அவரைக்காய், பீன்ஸ், கேரட், கொத்தமல்லி இலை உள்ளிட்ட அனைத்து வகையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர்.
பண்டிகை தினம் என்பதால் அவற்றின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. காய்கறிகள் மட்டுமல்லாது பழங்களின் விலையும் உயர்ந்திருந்தது. கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்கப்பட்ட ஆப்பிள், இன்று ரூ.140 முதல் ரூ.200 வரை விற்பனையானது. கொய்யாப்பழம், மாதுளை, அன்னாசி பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்து காணப்பட்டது.
இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் முக்கிய பொருளான பொரி ஒருபடி ரூ.45-க்கு விற்பனையானது. உடைத்த கடலை கிலோ ரூ.70-க்கும், சிறிய ரக அவல் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய் கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. வாழைத் தார்கள் ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், சிறிய ரக வாழைகள் ரூ.40 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
பாளை காந்தி மார்க்கெட்டில் மல்லிகை, பிச்சிப்பூக்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.300 வரை அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.1,800 வரை விற்கப்பட்டது. பிச்சிப்பூ விலை நேற்று ரூ.1,200 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1,500 ஆக அதிகரித்தது.
மேலும் சம்பங்கி ரூ.500, ரோஜா ரூ.300, கேந்தி ரூ.100-க்கு விற்பனை யானது. இதேபோல் அரளி பூ ரூ.500-க்கும், கோழி பூ ரூ.60-க்கும், நந்தியா விட்டம் ரூ.500-க்கும் விற்பனை யானது. பூக்கள், காய்கறிகள், பூஜை பொருட்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பொதுமக்கள் அதனை கருத்தில் கொள்ளாமல் வாங்கி சென்றனர்.
இன்று மாலை மார்க்கெட்டுகளில் பொருட் கள் வாங்க வரும் பொது மக்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று வரு கின்றனர். மாவட்டத்தில் திசையன் விளை, வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பகுதி களிலும் பஜார் பகுதிகளில் களை கட்டி காணப்பட்டது.
இதேபோல் தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களி லும் சரஸ்வதி பூஜையை யொட்டி பொதுமக்கள் அதிகளவில் மார்க்கெட்டு களில் குவிந்தனர்.
சங்கரன் கோவில், தென்காசி பூ மார்க்கெட்டு களிலும் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. தூத்துக்குடி யில் பஜார் பகுதிகளில் காலை முதலே அவல், பொரி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.

சந்திப்பு மேல்பாலம் கீழ் பகுதியில் சிறிய வாழைகள் விற்பனை நடைபெற்ற காட்சி.

நெல்லை சந்திப்பில் அவல், பொரி, கடலை விற்பனை மும்முரமாக நடைபெற்ற காட்சி.
- கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
- கனகதுர்க்கை அம்பாளுக்கு 26 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
திருவிழா காலங்களில் தினமும் மாலை வேளையில் முழு மண்டபத்தில் மீனாட்சி அம்பாளுக்கு பல்வேறு விதமான அலங்காரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் 8-ம் நாளான இன்று துர்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி கோவிலில் பிரத்தியங்கரா சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது. இதற்காக கோவில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு அதில் மகா கும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், கல்வி, திருமணம், வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடைய வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.
தொடர்ந்து கிலோ கணக்கில் மிளகாய் வத்தல், உப்பு, வெண் கடுகு, மிளகு ஆகியவை கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவிலில் அமைந்துள்ள கனகதுர்க்கை அம்பாளுக்கு 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது.
- கையெழுத்து இயக்கத்தை மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் வள்ளியூரில் நடைபெற்றது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அவைத்தலைவர் கிரகாம்பெல், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் கார்த்திக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பிரசார குழு செயலாளர் சேலம் சுஜாதா கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அஞ்சல் அட்டையில் பெயர், செல்போன் எண், தங்களது முகவரியை எழுதி கையெழுத்திட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பி னர் இரா.ஆ.பிரபாகரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் செல்வ கருணாநிதி, ஜோசப் பெல்சி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருள்ராஜ் டார்வின், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மல்லிகா அருள், ராதாபுரம் இளைஞரணி விஜயாபதி ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அங்கன்வாடி கட்டிடங்களை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
- நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் காவல்கிணறு ஊராட்சியில் காவல்கிணறு மற்றும் தெற்கு பெருங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.31.66 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடங்கள் மற்றும் பொது விநியோக கடையினை யூனியன் சேர்மனும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான ராஜா ஞானதிரவியம் திறந்து வைத்தார்.
நிகழ்சியில் யூனியன் துணை சேர்மன் வெங்கடேஷ் தன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் கொசிஜின், தாய்செல்வி, காங்கிரஸ் வட்டார தலைவர் அருள்தாஸ், விடுதலை சிறுத்தைகள் தெற்கு ஒன்றிய செயலாளர் மதன், காவல்கிணறு ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா சம்பு, மாவட்ட பிரதிநிதி மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், தொண்டரணி மந்திரம், ஒன்றிய பிரதிநிதி சிவச்சந்திரன், மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி இளங்கோ, பாலகிருஷ்ணன், பழனி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
- மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.
நெல்லை:
நெல்லை டவுன் பாஸ்கர தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரதீப் (வயது 26). இவர் தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வருகிறார்.
குடும்ப தகராறு
இவருக்கு வீர லட்சுமி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவரது மனைவிக்கும், இவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வீரலட்சுமி டவுன் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் மகளிர் போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், பிரதீப்பை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளார்.
விஷம் குடித்தார்
அப்போது அவரை போலீசார் கண்டித்தனர். இதனால் மனமடைந்த பிரதீப் வயல் தெரு பகுதியில் விஷத்தை குடித்து மயங்கி விட்டார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீவிர சிகிச்சை
உடனடியாக போலீசார் அங்கு சென்று பிரதீப்பை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷம் குடித்த பிரதீப்பின் தாய் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.
- சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த நவீன்குமார் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- கொண்டாநகரத்தில் வாட்டர் டேங்க் பகுதியில் நவீன்குமார் மயங்கி கிடந்தார். போலீசார் விரைந்து வந்து நவீன்குமாரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நெல்லை:
நெல்லை சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகன் நவீன் குமார் (வயது 25). இவர் நெல்லையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீப காலமாக இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு நெல்லையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கொண்டாநகரத்தில் வாட்டர் டேங்க் பகுதியில் இவர் மயங்கி கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






