என் மலர்tooltip icon

    தென்காசி

    • அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
    • கடுமையான வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சிற்றாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நேற்றும் இன்றும் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பிரதான சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    நேற்று இரவிலும் வனப்பகுதிக்குள் தொடர்ந்து மழை பெய்ததால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. கடுமையான வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சிற்றாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் 2-வது நாளாக இன்றும் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீர்நிலைகளை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும் நீர்நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளை வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு குளிக்க தடை விதிப்பது தொடர்பாக உத்தரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    • பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி. பொய்கை, துரைச்சாமிபுரம்

    செங்கோட்டை:

    தென்காசி மின் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி. பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.
    • நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் எதிரொலியாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வருகை புரிந்தனர்.

    மேலும் இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நேற்று இரவு வரை குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து லேசான வெயில் அடித்து வருகிறது.

    தொடர்ந்து பெய்த மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. 

    • மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
    • குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த கால நிலை நீடிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் இருந்து நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    குறிப்பாக முக்கிய சுற்றுலா தலமாக காணப்படும் குற்றால அருவிகளுக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று காலையில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தடை தொடர்ந்து நீடிக்கிறது. அதேநேரம் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    அதேபோன்று புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

    குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் முற்றிலும் குறைந்து குளிர்ந்த கால நிலை நீடிக்கிறது.

    வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைய தொடங்கியுள்ளது. இதனால் பிற்பகலில் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

    • தென்காசியில் தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ராம்நாத் கோவிந்த் தங்கினார்.
    • கோவிந்தபேரியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் கடையம், மத்தளம்பாறை வழியாக தென்காசிக்கு சென்றடைந்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

    அங்கிருந்து தென்காசியில் தனியார் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள குடியிருப்பில் ராம்நாத் கோவிந்த் தங்கினார். அவர் இன்று காலை தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதற்காக காலை கோவிந்தபேரியில் இருந்து காரில் புறப்பட்ட அவர் கடையம், மத்தளம்பாறை வழியாக தென்காசிக்கு சென்றடைந்தார். கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் காசி விஸ்வநாதர் சன்னதியில் தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, ஷோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உடனிருந்தனர். 

    • குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
    • பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குளத்திற்குள் குடியிருக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பொய்கை ஊராட்சியில் கள்ளம்புளி குளம் உள்ளது. இந்த குளத்திற்கு கருப்பாநதி அணையில் இருந்து பாப்பான் கால்வாயில் 13-ம் எண் மடை வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அந்த குளம் நிரம்பிய பின்னர் அருகில் உள்ள குலையனேரி குளத்திற்கு தண்ணீர் செல்வது வழக்கமாக உள்ளது.

    இந்த கள்ளம்புளி குளத்தை நம்பி சுமார் 48 ஏக்கர் நஞ்சை, 500 ஏக்கர் புஞ்சை நிலங்கள் பலனடைந்து வருகிறது. மேலும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமும் இந்த குளத்தில் வரும் தண்ணீரால் பெறப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்த குளத்திற்கு 1 பங்கு தண்ணீரும், அதன் கீழ் உள்ள குலையநேரி குளத்திற்கு 2 பங்கு நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளம்புளி குளம் நிரம்புவதற்குள்ளாகவே மழை நின்று விடுவதால் குலையநேரி குளத்திற்கு தண்ணீரே வருவதில்லை என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து அவர்களது 10 ஆண்டு போராட்டத்திற்கு பலனாக சமீபத்தில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பாப்பான்கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் கள்ளம்புளி குளத்திற்கு நுழைவு பகுதியில் வரும்போது அதில் 2 பங்கு தண்ணீரை பைப் மூலமாக குலையநேரி குளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த வாரம் கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குளத்திற்குள் குடியிருக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். உடனே போலீஸ் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

    அப்போது பைப் லைன் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் எனவும், குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஆனாலும் இந்த திட்டம் பணிகள் நடைபெற்று இன்று அமலுக்கு வர இருந்ததை அறிந்த பொய்கை கிராம மக்கள் இன்று காலை குளத்திற்குள் குடியேறி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். தங்கள் குளத்தில் நீர் நிரம்பிய பின்னரே குலையநேரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்றும் கூறி சமையல் செய்வதற்கும் உபகரணங்களோடு வந்து குளத்தில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் இது போன்று ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது.
    • கல்லூரி நேரங்களில் இந்த பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாம்பவர்வடகரை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் 6 பேர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு சுரண்டை புதுமார்கெட் பகுதியில் இருந்து கல்லூரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பஸ்சில் இருக்கைகள் இருந்தாலும் பஸ்சின் படியிலே தொங்கியபடியும் மோட்டார் சைக்கிளில் இது போன்று ஆபத்தான முறையில் கல்லூரிக்கு தினமும் செல்வது தொடர்கதையாக உள்ளது எனவும். இதனால் கல்லூரி நேரங்களில் இந்த பகுதியில் போலீசாரை அமர்த்தி கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது.
    • போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

    பாமக-வின் திலகபாமா தென்காசியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு விரோதமாக இருக்கின்ற.., அன்று வெள்ளைக்காரன் விரோதமாக இருந்தான். இன்று திமுக விரோதமாக இருக்கிறது. இதற்கு எதிராக இன்று ஒருங்கிணைக்கும் பணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மூலம் செய்து கொண்டிக்கிறார். அந்த வகையில் அனைத்து தமிழ்மக்களும் ஒன்றிணையும் கட்டாயத்தில் இருகிக்கிறோம்.

    மக்கள் விரோதம் என எந்த அர்த்தத்தில் சொல்கிறோம் என்றால், இன்று பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே சட்ட ஒழுங்கு படுபாதாளத்தில் போய் கொண்டு இருக்கிறது. குழந்தைகளை பத்திரப்படுத்த (பாதுகாக்க) முடியவில்லை. பெண்களை பத்திரப்படுத்த முடியவில்லை. போதைப் பொருட்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் காவல்துறை நிர்வாகம் எவ்வளவு முக்கியமானது?. அவர்களுக்கு சாதகமாக யார் இருப்பார்களோ? அவரை சட்டத்தை வளைத்து கொண்டு வந்துள்ளார்கள். இது மிகவும் மோசமான முன்னுதாரணம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகமிக முக்கியம். இந்த நேரத்தில் முதலமைச்சர் இதை உடனடியாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் டிஜிபி உத்தரவு குறித்து சொல்லியிருக்கிறது. அதையும் மீறி சட்டத்தை வளைத்து நியமனம் செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

    இவ்வாறு திலகபாமா கூறினார்.

    • அண்ணாமலை போன்ற என் மண் என் மக்கள் என்ற மாநில முழுவதுமான சுற்றுப் பயணத்திற்கான காலம் இதுவல்ல.
    • ஒரு கட்சியின் கட்டமைப்பு பூத் கமிட்டிதான். அதை வழிப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சங்கரன்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாஜக-வை பொறுத்த வரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அமித் ஷாவுடன் பேசி கூட்டணி தலைவராக அறிவித்திருக்கிறோம். திமுக-வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

    நீங்கள் ஓ. பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா? என கேட்கிறீர்கள். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து பாஜக கூட்டணியில் இருந்து வருகிறார். ஆளுங்கட்சி என்றால் anti incumbency (ஆட்சிக்கு எதிர்ப்பு) 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் இருக்கும். ஆனால் 100 சதவீதம் anti incumbency இருக்கும் ஒரே கட்சி திமுக.

    அண்ணாமலை போன்ற என் மண் என் மக்கள் என்ற மாநில முழுவதுமான சுற்றுப் பயணத்திற்கான காலம் இதுவல்ல. ஒரு கட்சியின் கட்டமைப்பு பூத் கமிட்டிதான். அதை வழிப்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதற்கே நேரம் சரியாக இருக்கும். அண்ணாமலையின் நடைபயணம் வெற்றியாக அமைந்தது. அதேபோல் பூத் கமிட்டி மாநாடு வெற்றி பாதைக்கு நகர்த்தும். தேசிய ஜனநாயக கூட்டணில் தேமுதிக என்பது குறித்து இனிமேல்தான் பேச்சுவார்த்தை நடக்கும். பாஜகவின் கொள்கை அறிநிலைத்துறை வேண்டாம் என்பதுதான். கோவில் நகையை எடுத்து உருக்குவதாக சொல்கிறார்கள். எவ்வளவு உருக்கினார்கள். எவ்வளவு பெருக்கினார்கள் என்பது இல்லை.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

    மேலும், திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளே என்ற கேள்விக்கு, காசு கொடுத்து எழுதச் சொன்னால் எது வேண்டுமென்றாலும் எழுதலாம். நாங்களும் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்துள்ளோம். அதில் 234 தொகுதிகளையும் என்.டி.ஏ. கூட்டணி ஜெயிக்கும் என வந்துள்ளது. அதை உங்களுக்கு காட்டட்டுமா?.

    • அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன்.
    • வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

    தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன்.

    * பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன்.

    * வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

    * சட்டசபை தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அவர் கூறினார்.

    • அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.
    • பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில், மழை குறைந்ததால் இன்று காலை குற்றால அருவிகளில் நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் 2 நாட்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி இன்று வழங்கப்பட்டது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பங்களுடன் குவிந்தனர்.

    குறிப்பாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பாதுகாப்பு பணிகளிலும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    ×