என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
- சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.
- புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தென்காசி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக கோவில்பட்டி வந்தார். அங்கு முதலமைச்சருக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் பட்டியில் நகர தி.மு.க. சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் நெல்லை மாவட்டம் அரிய நாயகிபுரம் சென்று தங்கினார்.
இன்று காலை நெல்லையில் இருந்து கார் மூலம் தென்காசி மாவட்டம் வந்த அவருக்கு ஆலங்குளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.
அதன் பிறகு ஆய்க்குடி செல்லும் வழியில் அனந்தபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளான தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் ரூ.291 கோடியே 19 லட்சம் மதிப்பிலான 83 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு ரூ.587 கோடியே 39 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மொத்தத்தில் ரூ.1,020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ரூ.22,912 கோடியில் 6 லட்சத்து 3 ஆயிரத்து 246 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,074 கோடியில் 37 ஆயிரத்து 221 வளர்ச்சி திட்டபணிகள் நடைபெற்றுள்ளது.
மொத்தத்தில் ரூ.24,986 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






