என் மலர்
தஞ்சாவூர்
- ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.
தஞ்சாவூா்:
கல்லணையில் இருந்து இன்று டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
டெல்டா மாவட்ட பாசனத்திற்கு இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஒரு வாரத்திற்குள் கடைமடை வரை சென்றுவிடும். 7 லட்சத்து 95 ஆயிரத்து 453 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்கள், விதை நெல்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர் கடன் வழங்கப்படும். காவிரித் தண்ணீரை பயன்படுத்தி ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நாங்களும் ஒருபோதும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின.
- கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்தது. போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் மாவட்டங்களில் பம்பு செட் ஆழ்துளைக்கிணறு பயன்படுத்தி மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. நாளுக்கு நாள் அதிக கன அடியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இதையடுத்து கடந்த 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அந்த தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 1500 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.
தொடர்ந்து விவசாயிகள் காவிரி நீரை பயன்படுத்தி நல்ல முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்று ஆற்றில் பூக்கள் தூவி வழிப்பட்டனர். கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.
- மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.
- போலீசார் ராகேசை கைது செய்தனர்.
பரேலி:
உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே உள்ள ஹபீஸ்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது35). அதே பகுதியில் கணவர், மகனை இழந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் உறவினர்கள் பக்கத்து வீடுகளில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று மதியம் ராகேஷ் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மூதாட்டியின் உறவுக்கார பெண் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் இதைப்பார்த்ததும் சத்தம் போட்டார். உடனே ராகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் இந்த சம்பவத்தில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ராகேசை கைது செய்தனர்.
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
- 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தஞ்சாவூா்:
தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, மேல்நிலை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை , சைக்கிள்கள் ஆகியவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், சீருடைகள், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
டிக்டோ ஜாக் அமைப்பினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் முதன்மைச் செயலரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்களைக் கூறி ஏன் நிறுத்தப்பட்டது என்றும், ஏறத்தாழ 60 லட்சம் மாணவர்களை மனதில் வைத்து, உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி கூறுமாறும், அதற்கான முயற்சி எடுப்பதாகவும் மத்திய மந்திரி கூறினாலும், முறைப்படி பதில் எதுவும் வரவில்லை.
மத்திய மந்திரியிடம் என்ன பதில் வருகிறது என்பதைப் பார்த்து, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
- ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.
தஞ்சாவூா்:
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு 2 மாநிலங்களுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த பட்ஜெட் நகலை நாடு முழுவதும் எரிக்கும் போராட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில் 2 ஆயிரம் கிராமங்களில் 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தை வருகிற 31-ந்தேதி நடத்து வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9-ந்தேதி வெள்ளையனே வெளியேறு நாளை கடைப்பிடிக்கும் விதமாக காா்பரேட்டுகளே இந்தியாவை விட்டு வெளியேறு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, இயற்கையை பாதுகாப்போம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 17-ந்தேதி தூத்துக்குடி, சேலம், திருவாரூா், செங்கல்பட்டு ஆகிய 4 இடங்களில் கருத்தரங்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த போராட்டங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சியினா் ஆதரவு அளிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
- கர்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்படும் என சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், கர்நாடகத்திடமிருந்து காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்று டெல்டா மாவட்டங்களில் வருகிற 26-ந்தேதி நடத்தப்பட இருந்த முழு அடைப்பு, ரெயில் மறியல் போராட்டத்தை ஒத்தி வைப்பது என முடிவு செய்துள்ளோம்.

டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாமல் கோவை மாவட்டத்திலும் தேங்காய் விலை ரூ.4-க்கு சரிந்து விட்டதால், தென்னை விவசாயம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ல எண்ணெய்யை பொது வினியோக திட்டத்தில் விற்க அனுமதித்தால் விவசாயிகள் லாபம் பெற முடியும்.
கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களை போன்று தமிழகத்திலும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந்தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
- விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வல்லம்:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிபட்டியை சேர்ந்த 6 பக்தர்கள் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி, கண்ணுக்குடிபட்டியில் இருந்து சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். பாதயாத்திரையாக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்து கொண்டிருந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி எதிர்பாராதவிதமாக பாதயாத்திரை பக்தர்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
இந்த கோர விபத்தில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி (வயது 60), முருகன் மனைவி ராணி (37), ரமேஷ் மனைவி மோகனா, கார்த்திக் மனைவி மீனா (26) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், செல்வராஜ் மனைவி தனலட்சுமி (30), சங்கீதா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனா உள்ளிட்ட 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த சங்கீதா, தனலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. சங்கீதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
- டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
தஞ்சாவூா்:
காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் மற்றும் காவிரி ஒழுங்காற்றுகுழு உத்தரவுபடி தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு உரிய நீரை திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சை, திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து அறிவித்தன.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரெயில் நிலையத்திற்கு வந்த மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், தம்புசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்.
இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் சி.பி.ஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஆர்.வீரமணி, துரை அருள்ராஜன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.சதாசிவம், வி.எம்.கலியபெருமாள், ஏ.ராஜேந்திரன், எம்.ஆர்.முருகேசன், பி.பரந்தாமன் உட்பட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் கர்டாக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டனர். இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதே போல் திருவாரூரில் இருந்து பட்டுகோட்டை நோக்கி சென்ற பயணிகள் ரெயிலை திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் விவசாயிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமை தாங்கினார். போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்ட எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் பயணிகள் ரெயில் ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதைப்போல் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் துணைச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருவாரூர் மாவட்ட பொருளாளர் ராவணன் ஆகியோர் தலைமையில் காரைக்கால் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், வலங்கைமான் (சிபிஎம்) ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதைத் தொடர்ந்து ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதைப்போல் திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம், நாகை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் டெல்டா மாவட்டங்களில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
- தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
- இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது.
சுவாமிமலை:
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான 20-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் தமிழகமே மிகுந்த சோகத்தில் மூழ்கியது. இதனையடுத்து ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) 20-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதற்காக தீ விபத்து நடந்த பள்ளியின் முன்பு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பலியான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இறந்த 94 குழந்தைகளின் உருவப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்த பேனருக்கு மலர்களால் அலங்கரித்து பெற்றோர்கள், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாலையில் மகாமக குளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.
- காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது.
- கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு வழக்கமாக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் திறக்கப்படவில்லை.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில் தலா 5 லட்சம் ஏக்கரை விஞ்சிய நிலையில் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 1.30 லட்சம் ஏக்கருக்கும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 500 ஏக்கருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 94 ஆயிரத்து 850 ஏக்கருக்கும், நாகை மாவட்டத்தில் 3250 ஏக்கருக்கு என மொத்தம் 3.20 லட்சம் ஏக்கருக்கு மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஆழ்துளை மோட்டார் பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கினர். இதுவரை 4 மாவட்டங்களிலும் சேர்த்து சுமார் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி எட்டப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்து விட்டிருந்தால் குறுவை சாகுபடியில் மந்த நிலை ஏற்பட்டு இருக்காது. கடந்த 2 ஆண்டுகளை போல இம்முறையும் இலக்கை விஞ்சி சாகுபடி செய்திருக்கலாம் என விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது காவிரி நீர் இல்லாததால் பம்புசெட் மூலம் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் ஆற்று நீரை மட்டும் நம்பியிருந்த விவசாயிகளால் சாகுபடி செய்ய முடியாததால் வேதனையில் உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. இந்த அறிவிப்பால் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சற்று நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் வழக்கம்போல் கர்நாடகா அரசு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட முடியாது. அதற்கு பதிலாக வினாடிக்கு 8000 கனஅடி தண்ணீரை திறந்து விடுவோம் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் வெறும் 43.22 அடி மட்டுமே உள்ளது. அப்படி இருக்கையில் 8000 அடி கனஅடி தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடும்போது மேட்டூர் அணை நிரம்பவே 20 முதல் 30 நாட்களுக்கும் மேல் ஆகும்.
அதுவும் தினமும் தண்ணீர் திறந்து விட்டால் தான். மற்றப்படி எங்கள் மாநிலத்தில் போதிய மழை பெய்யவில்லை என கூறி மிக குறைவான கனஅடி தண்ணீரை திறந்து விட்டால் அணை நிரம்ப அதைவிட கூடுதல் நாட்கள் பிடிக்கும். இது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை குறைப்போம் என்றும், அத்துடன் காவிரிநீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை எதிர்த்து காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. தற்போது திறந்து விட்டது உபரிநீர் தான்.
இதனால் கர்நாடகா அரசை நம்பி காவிரி டெல்டா விவசாயிகள் சாகுபடி செய்ய தயங்குகின்றனர். மேட்டூர் அணையில் குறிப்பிட்ட அடி வரை தண்ணீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்காக திறந்து விடப்படும். அதற்கு 40 நாட்களுக்கு மேலேயே ஆகும். அந்த தண்ணீர் அடுத்து சம்பா சாகுபடிக்கு பயன்படுத்த தான் உதவியாக இருக்கும். அதுவும் கர்நாடகா அரசு கூறியப்படி தினமும் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே சாத்தியம். எனவே தற்போது குறுவை சாகுபடிக்கு எந்த பயனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும். கோர்ட், காவிரிநீர் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை கர்நாடகா அரசு மீறுவது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் நமக்குரிய நீரை தான் கேட்கிறோம். அதுவும் தரவில்லை என்றால் எப்படி. தொடர்ந்து உத்தரவுகளை மீறி விதிமுறைகளை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்படுவது கண்டித்தக்கது. நமக்குரிய நீரை பெற்று தர தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு காவிரி நீர் தான் உயிர்நாடி. எனவே உரியநீரை பெற்று தந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றனர்.
- கர்நாடகா, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும். கர்நாடகா தற்போது தேக்கி வைத்துள்ள தண்ணீரை உடனடியாக டெல்டா மாவட்ட பாசனத்துக்கு திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் பானைகளை தலையில் ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பானை மற்றும் செடிகளை தலையில் தூக்கியப்படி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நுழைய முற்பட்டனர். ஆனால் வாயில் கதவை மூடி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அலுவலகம் வெளியே சாலையில் படுத்து கிடந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடகா, மத்திய அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் ஆண்டலாம்பேட்டை மற்றும் இளந்துறையில் பிளவர் மில் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி நீலாவுடன் (65) கடைவீதிக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.
திருவிடைமருதூர் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபைட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜ், நீலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.
மேல் சிகிச்சைக்காக நீலாவை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நீலாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவிடைமருதூர் மனவெளி தெருவை சேர்ந்த பாலாஜி (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






