என் மலர்
சிவகங்கை
- பாரம்பரிய பயிர் ரகங்கள் கண்காட்சி-கருத்தரங்கு நடந்தது.
- ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கிற்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டு தேவைக்கு என இளைஞர்களுக்கான வேலை அளிக்கும் வகையில் வேளாண்மை தொழில் முனைேவார்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ள காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாய பயிர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் வனத்துறையின் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் இந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.84.30 லட்சம் மதிப்பீட்டில் 6101 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் கருவிகள், வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி , தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வழங்கினர்.
இதில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், வேளாண்மை இணை இயக்குநர் தனபாலன், வேளாண்மை தொழில்நுட்ப முகமை (அட்மா), வேளாண்மை துணை இயக்குநர்கள் சுருளிமலை, பன்னீர்செல்வம், செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாடிபில்டிங் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
- அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி தாப்பா கார்டனில் பாடிபில்டிங்கின் சிவகங்கை மாவட்ட பிஸிக் அலையன்ஸ் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார்.முன்னாள் மிஸ்டர் இந்தியா மற்றும் தமிழ்நாடு பிஸிக் அலை யன்ஸ் தலைவருமான பொன்னம்பலவாணன் முன்னிலை வகித்தார்.
நடிகரும் பாடிபில்டிங் பயிற்சியாளருமான பரத்ராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.
இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோரும் விளையாட்டு.மைதா னங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.
மாவட்ட தலைவர் டாக்டர்.பிரபு பேசும்போது, பாடிபில்டிங்கில் உச்ச போட்டியான ஒலிம்பி யாவில் கலந்து கொள்வதற்கு முதல்படி இந்த மாவட்ட பிஸிக் அலையன்ஸ் அமைப்பாகும்.இதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய, உலக போட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடந்த பாடிபில்டிங் போட்டிகளை நமது மாவட்டத்திலும் வரும் காலங்களில நடத்துவோம்.இதன்மூலம் பாடிபில்டி ங்கில் அதிகளவு இளைஞர் களை கவர முடியும்.மேலும் பாடிபில்டிங் வீரர்களுக்கு அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
தொழிலதிபர் பி.எல்.பி.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.
இதில் துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் காளிதாசன், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், தொழிலதிபர்கள் விசாலம் சிட்பண்ட்ஸ் உமாபதி, மகரிஷி கல்வி குழுமம் அஜய்யுக்தேஷ், ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், சூர்யா அரிசி ஆலை கணேஷ் கிருஷ்ணன், மூன்ஸ்டார் லெட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், மல்லீஸ் கிச்சன் திருப்பதி, கங்க அம்பரீஷ், உள்பட அலையன்ஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
- மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே இருந்து வந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பதவியேற்றவுடன் நகரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகராட்சி பகுதியில் உள்ள 93 மண் சாலைகளை ரூ. 653.95 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
23-வது வார்டில் நடந்து வரும் சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி, நல்லுப்பாண்டி ஆகியோர் பார்வையிட்டனர்.
- சித்திரை திருவிழாவையொட்டி மானாமதுரை வைகை ஆற்றில் சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
- இந்த தகவலை நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மன்றக்கூட்டம் தலைவர் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
10-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் முனியசாமி கடந்த ஒரு ஆண்டாக நகராட்சி நிர்வாகம் தனது வார்டில் வளர்ச்சி பணிகளை செய்யாமல் புறக்கணிப்பதாக புகார் கூறும் வாசகங்கள் கொண்ட பதாகையை ஏந்தி வாயில் கருப்புதுணி கட்டி வந்து கூட்டரங்கில் தரையில் அமர்ந்து மவுனமாக இருந்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சி லர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. பெரும்பா லான கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் குடிநீர், கழிவுநீர், வடிகால் சாலை, தெருவிளக்கு அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியு றுத்தினர். கவுன்சிலர் சண்முகப்பிரியா பேசுகையில், ஆனந்த வல்லி சோமநாதர் சுவாமி கோவிலை சுற்றி தேரோடும் வீதிகளில் அதிகரித்து வரும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் வீதிகளில் பழுதடையும் தெருவிளக்குகளை சரி செய்ய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தலைவர் மாரியப்பன் கென்னடி பேசியதாவது:-
மானாமதுரை நகராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான வளர்ச்சி திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வீதிகளை சுத்தம் செய்வதில் ஏற்பட்டிருந்த தொய்வு தற்போது படிப்படியாக குறைந்து துப்புரவு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
வரும் காலங்களில் துப்புரவுப்பணி இன்னும் சிறப்பாக நடைபெறும். அனைத்து வீதிகளிலும் புதிய தெருவிளக்குகள் அமைத்து பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மானாமதுரையில் விரைவில் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது. இதற்காக ரூ.5லட்சம் மதிப்பீட்டில் திருவிழாவிற்காக பொதுமக்கள் கூடும் நகர் பகுதி, வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வியாபாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகராட்சியில் தொழில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. எந்த வார்டும் புறக்கணிக்கவில்லை. தர்ணாவில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க. உறுப்பினரின் வார்டில் திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காசநோய் இல்லாத மாவட்டமாக உருவாக்க துரித பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
- கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் உலக காசநோய் தினவிழா கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:-
காசநோய் குறித்து பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் வெளியில் தெரிந்தால் அச்சம் என்ற அடிப்படையில், தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் உள்ளனர். தற்போதுள்ள நவீன காலக்கட்டத்தில் அனைத்துவிதமான நோய்களுக்கும் தரமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழக அரசால் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான போதிய மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சரிவர மருந்தை சாப்பிடாமல் இருப்பதால் தான் விளைவுகள் ஏற்படுகிறது. மேலும், மற்றவர்களுக்கு தொற்று நோயாக பரவாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ மனைகளை அணுகி முறை யாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுப்பதன் அடிப்படையில் தங்களைச் சார்ந்தோர்களுக்கும் பரவாமல் பாதுகாக்க முடியும். வருகிற 2025-க்குள் காசநோய் இல்லாத தமிழகமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருந்து தங்களை சார்ந்தவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காசநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் அதிக ஊட்டச்சத்து உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசால் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதுதவிர, தன்னார்வலர்களும் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் 52 காசநோய் கண்டறியும் நுண்ணோக்கி மையங்கள் உள்ளன. மேலும், 14 புதிய இருகண் நுண்ணோக்கிகள், மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு பொதுமக்களின் உபயோகத்திற்கென தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், அனைத்துத்துறையைச் சார்ந்த அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, காசநோய் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தை உருவாக்குவதற்கான பணிகளை சிறப்பாகவும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தயாபுரம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் தீ மிதித்தனர்.
- கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிவகங்கை ரோட்டில் தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீ சட்டி, பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கி வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.கோவில் டிரஸ்டிகள் பூசாரி சுப்பிரமணியன் தலைமையில் நாகராஜன், முருகன் ஆகியோர் விழா ஏற்பாட்டை செய்தனர்.
- ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் முத்துமாரியம்மன், முத்துவேல், பெரியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் நிர்வாகிகள் சிங்கராயர், ஸ்டீபன், ஜோசப் செல்வராஜ், வெங்கட்ராகவன், கருப்பையா, மீனாட்சி சுந்தரம், ஜெயகாந்தன், பெரியசாமி, ராஜா முகமது, நேரு, வேலாயுத ராஜா, மால் முருகன், சரவணன், மதுசூதனன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் நாகப்பன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி என்பவரும் கலந்து கொண்டார். இரவு வரை நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பானுமதிக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- முத்துக்குமாரின் மனைவி மீனாட்சி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல்-சாக்கோட்டை சாலையில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இங்கு நெல்மணிகளை அரிசியாக மாற்றி அதை கோம்போ என்றழைக்கப்படும் தானியங்கி சேமிப்பு எந்திரத்தில் சேமித்து வைப்பார்கள். பின்னர் கன்வேயர் மூலம் அரிசி கீழே இறங்கும். அதனை சாக்குகளில் பிடித்து அடுத்த பிரிவுக்கு அனுப்புவார்கள். பின்னர் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு லாரிகளில் ஏற்றப்படும்.
இந்தநிலையில் நேற்று அரிசி ஆலையில் அரிசியை சாக்குகளில் பிடிக்கும் பணியில் கண்டனூரை சேர்ந்த முத்துச்சாமி (வயது40), பீகார் மாநிலம் பூரணியா பகுதியை சேர்ந்த குந்தன் குமார்(25) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அரிசி சேமிப்பு ராட்சத எந்திரம் உடைந்து கீழே விழுந்தது. இதில் சிக்கி முத்துச்சாமி, குந்தன்குமார் ஆகியோர் காயமடைந்தனர். அப்போது எந்திரத்தில் இருந்து 14 டன் அரிசி மொத்தமாக 2 தொழிலாளர்கள் மீதும் கொட்டியது. அரிசி குவியலில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதனை கண்ட மற்ற ஊழியர்கள் பலியான 2 தொழிலாளர்களின் உடல்களையும் மீட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் சாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான 2 தொழிலாளர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து முத்துக்குமாரின் மனைவி மீனாட்சி சாக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர் சேகர்(65), அவரது மகன் கண்ணன்(39) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சாக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
- இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விளையாட்டுத் துறை யில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஒய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.
சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம்,2-ம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், மத்திய அரசின் விளை யாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணை யத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் போன்ற தகுதியான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
2023-ம் வருடம் ஜனவரி மாதம் (31.1.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran/Masters Sports meet) வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 19.4.2023 மாலை 5 மணி ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து மெக்சிகோ தூதர் வியப்படைந்தார்.
- கல்மண்டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார்.
மதுரை-ராமேசுவரம் சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டு தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் மார்ச் 5 முதல் திறக்க பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் ஆய்வின் போதுகிடைத்த காட்சிபடுத்தப்பட்ட அரிய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.
உலகதரத்தில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தையும் அகழ்வாராய்ச்சி நடந்த அகரம், கொந்தகை, மணலூர் பகுதியை பார்வையிட்ட இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டு துாதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டு ரசித்து வியந்தார்.
அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த தூதர் கல்மண் டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த தளம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
அவரை கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்று அகழ்வைப்பகத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி எடுத்துக்கூறினார்.
- தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
- தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.
விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
தேவகோ ட்டை அருகே ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த பெரியகோடகுடி கிராமத்தில் மிகப்பழமை யான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் தர்ம முனீஸ்வரர், ஆகாச வீரன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை 5:30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப சபா சுவாமிக்கு, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, ஆசிர்வாதம் தீபாரணை நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தலைமை தாங்கினார்.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், திருப்பட்டு சாற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 ஆயிர த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






