என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • பேவர் பிளாக் சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.
    • சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சி 21-வது வார்டு பிள்ளைவயல் காளியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான பூமிபூஜையை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தொடங்கி வைத்தார்.

    இதில் துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் அயூப்கான், சண்முகராஜன், விஜயகுமார், சி.எல்.சரவணன், ஆறுசரவணன், மகேஷ், மதியழகன், ஒப்பந்ததாரர்கள் தனசேகர், அமுதன் மற்றும் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரான்மலை கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
    • குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    சித்திரை திருவிழா 10 நாள் விழாவாக அனுஷ்டிக்கப்பட்டு 9-ம் நாள் தேரோட்டம் நடக்கிறது. தினந்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு தேவஸ்தான பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவசாரியாரிடம் திருக்கட்டளை வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில் மேள தாளத்துடன் பொன்னம்பல அடிகளாரை வரவேற்று மந்திர உபதேசங்கள் பெற்று திருக்கட்டளை வாங்கும் வைபவம் நடந்தது.

    அதை தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    • வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை'' செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொேரானா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி ெபற்றுப் பயன் பெறலாம். அவர்கள் ெகாரோனா பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5சதவீதம் செலுத்த வேண்டும்.

    மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.

    மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க (MEGP) என்ற இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இது குறித்து மேலான விவரங்கள் மற்றும் ஆலோச னைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி மூலமாகவோ அணுகி பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை, இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மற்றும் இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த ஆய்வுகளின்போது இ.சேவை மையம், நில அளவைப்பிரிவு, வட்ட வழங்கல் பிரிவு, வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த அலுவ லர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நிலுவையில் உள்ள பதிவேடுகளின் நிலை மற்றும் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும், அது தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

    அலுவலகப் பணியா ளர்களின் வருகைப்பதிவேடு, தன்பதிவேடு, பூர்த்தி செய்யப்பட்ட பணியிடங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் முடிவுற்றுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் துறைவாரியாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகளின் விபரங்கள், பயன்பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை ஆகியவைகள் தொடர்பான பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவை யான வழிமுறைகளைக் கூறி விண்ணப்பிக்க செய்து, அரசின் பயன்களை பெறுவதற்கு உதவ வேண்டும். தனித்துறையின் மூலம் செய்யக்கூடியப்பணிகளை விரைந்து முடிக்கவும், பிறதுறை களுடன் இணைந்து மேற்கொள்ளும் பணிகளை கலந்து பேசி காலதாமதமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர்கள் பாலகுரு (சிவகங்கை), கோபிநாத் (இளையான்குடி), தனி வட்டாட்சியர்கள் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அந்தோணிராஜ் (இளையான்குடி), கண்ணன் (சிவகங்கை) உள்பட பலர் உடனிருந்தனர்.

    • சிவகங்பிகை அருகே பிரான்மலையில் பால்குட ஊர்வலம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரான்மலை வடுக பைரவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜெயந்தன் பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி பி.மதகுபட்டி ராமர் கோவிலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மலைக்கோவிலை நோக்கி புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் மலைக்கோவிலை வந்தடைந்தது. அங்கு வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.

    மேலும் மண்ணால் செய்யப்பட்ட நாய், பன்றி பதுமைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • தேவகோட்டை அருகே பெரியநாயகி அம்பாள்-பழம்பதிநாதர் கோவிலில் லட்சதீப பெருவிழா
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள வெளிமுத்தி கிராமத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான ஆளுகைக்கு உட்பட்ட பெரியநாயகி அம்பாள் பழம்பதிநாதர் கோவில் உள்ளது. இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் லட்சதீப பெருவிழா நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர், கோவை ஆனந்த கல்பா பவுண்டேஷன் ஈஸ்வரன் குருஜி, அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலாளர் யதீசுவரி சாரதேசுவரி பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    லட்ச தீப விழாவில் ஓம் நமச்சிவாயம், லிங்கம், தீபம், வேல் போன்ற வடிவங்களில் அகல் விளக்குகளை வரிசைப்படுத்தி கோவிலை சுற்றி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வைத்தனர். பொதுமக்கள் இந்த அகல்விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    விளக்குகள் வெளிச்சத்தில் கோவில் ஜொலித்தது. லட்சதீப விழாவை தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் கதை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • சிவகங்கையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    சிவகங்கை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    இதையடுத்து சிவகங்கையில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிக்குமார், பாபு, நகர நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன், அண்ணா தொழிற்சங்கம் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.
    • அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி-சுக்காம்பட்டி சாலையில் ரமேஷ் என்பவர் செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிலர் பணிபுரிந்து வருவதாக சென்னை தொழிலாளர் ஆணையத்திற்கு புகார் வந்தது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை தொழிலாளர் நல உதவி ஆணையர் ராஜ்குமாருக்கு மின்னஞ்சல் மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால் துரை தலைமையில் அதிகாரிகள் செங்கல் சூளையில் திடீர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது வீரன் (வயது58), செல்வி (46), மகேஸ்வரி (29), குணா (22), திருமூர்த்தி (21), பிரகாஷ் (17), முத்துக்கருப்பன் (39), கயல்விழி (22), விஜயசாந்தி (17) உள்ளிட்ட 9 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரிய வந்தது.

    உடனடியாக 9 பேரும், அவர்களுடன் இருந்த 5 குழந்தைகளும் உடமைகளுடன் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களது சொந்த ஊரான மதுரை மாவட்டம் புலிப்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தென் சிங்கம்புணரி கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த ஆய்வின்போது சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர்கிருஷ்ண மூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் மற்றும் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சிவகங்கை தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறையினர் உடனிருந்தனர். 

    • படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • தனிப்படை போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜெகதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது55). இவர் நிலத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு.

    அதன்படி சம்பவத்தன்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது, காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது.

    இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனிடையே கண்ணனை கொலை செய்து காரில் தப்பிய கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது சென்னை எண்ணூரை சேர்ந்த பன்னீர்செல்வத்துக்கும், கண்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதும், அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பன்னீர்செல்வத்தின் மகன் ஜெகதீஷ் (வயது 28), அவரது ஆதரவாளர்கள் வினோத், மில்டன் உள்பட 5 பேர் கண்ணணை கொலை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று, அங்கு பதுங்கியிருந்த ஜெகதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக தேடப்பட்ட மேலும் 2பேர், ஏற்கனவே பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
    • கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் மாணவர் கொண்டாட்டம் கொண்டாடுதல் முதல்கட்ட நிகழ்வு நேற்று தொடங்கி 10 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்களான காற்றோட்டமான வகுப்ப றைகள், தூய்மையான குடிநீர் வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி, தமிழ் வழி பிரிவுகளுடன் ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதும் விளக்கப்படும். அதேபோல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்பு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்படும். எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவுத் திட்டம், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா, இல்லம் தேடிக் கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்றவை பற்றியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேரணியில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் சீதாலெட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கோவில் திருவிழாவில் பூத்தட்டை பெண்கள் எடுத்து வந்தனர்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திருப்பத்தூர் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூத்தட்டு எடுத்து பெண்கள் வழிபாடு செய்தனர். முதல் நாளான நேற்று சித்தர் முத்துவடுகநாத சுவாமி கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர்.

    காளியம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருகிற 25-ந் தேதி பால்குடம், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • தேவகோட்டை ரெங்கநாதபெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • நாளை உற்சவ சாந்தி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் மிகப் பழமையான ரெங்கநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 140-வது பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு சிம்மம், ஹனுமாந்தம், கருடன், சேஷ, யானை, புஷ்பக விமானம், குதிரை, கன்றுக் குட்டி ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. தேரில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் ரெங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்தனர். இதில் பெண்கள் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பி வடம்பிடித்து இழுத்தனர். வழியில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. இன்று புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் சேவையும், நாளை உற்சவ சாந்தி திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.

    ×