என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் சண்முகநாதன், ஆறுமுகம், சந்திரசேகர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பிரிவினரால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்ற வேண்டும், மானாமதுரை காவல் உட்கோட்டத்தை சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் நடக்கும் சட்டவிரோத சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொது அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மானாமதுரையில் இமானுவேல் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சங்கர் அம்பேத்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெகதீசன், முருகானந்தம், ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தியாகி இமானுவேல் பேரவை மாநில பொதுச் செயலாளர் சந்திரபோஸ், மாவட்ட நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, வேல்முருகன், புலி பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.
முன்னதாக பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்ட மூவரது உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மானாமதுரை:
மத்திய அரசின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வு, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளது போன்ற நட வடிக்கைகளைக் கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்தும் மகளிர் காங்கிரஸ் அமைப்பினர் மானாமதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத மாநில அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மகளிர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் வித்யா கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி செந்தாமரை, பாண்டியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வராஜ், மாவட்ட நிர்வாகி ரமேஷ்கண்ணா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
காங்கிரஸ் கிழக்கு வட்டாரத் தலைவர் ஆரோக்கிய தாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் பிரேம சந்திரன், நிர்வாகிகள் புருஷோத்தம்மன், காசி மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் மேனகப்பிரியா நன்றி கூறினார்
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது தேவையில்லாமல் போலீஸ் மூலம் கைது நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும், தேவையற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், சிவகங்கையில் உள்ள கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் பணிகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த பொதுச் செயலாளர் கணேசன் பேசும்போது, மாவட்ட கூட்டுறவு துறை சமீபகாலமாக மத்திய வங்கி பணியாளர்கள் மீது வேண்டுமென்றே வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஏற்படும் இழப்புகளுக்கு அந்தந்த சங்கமே பொறுப்பாகும். இதற்கு மத்திய வங்கி ஊழியர்களும், கள ஆய்வாளர்களும் நேரடி பொறுப்பாகமாட்டார்கள். ஆனால் வீண் பழி சுமத்துவதற்காக மத்திய வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
ஆர்ப்பாட்ட முடிவில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
கச்சநத்தம் கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் மாற்று சமுதாயத்தினரால் கொலை செய்யப்பட்ட மூவரது வீடுகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
கச்சநத்தம் கிராமத்தில் நடந்துள்ள கொலைகள் காட்டு மிராண்டித்தனமானது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட இக்கிராம மக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிராமத்திலிருந்து வெளியேறி செல்ல முடியாமல் உள்ளனர்.
இவர்களது வாழ்வாதாரத்துக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளனர். உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும். இந்தக் கொலைச் சம்பவத்துக்கு காவல்துறை முக்கிய காரணமாகும். கச்சநத்தம் கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள் எஸ்.குணசேகரன், தங்கமணி, மாநிலக்குழு உறுப்பினர் முத்தையா, மாவட்டச் செயலாளர் கண்ணகி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
காரைக்குடி அருகே உள்ளது ஆத்தங்குடி கிராமம். முத்துப்பட்டி ஊராட்சி, ஆற்காடுவெளுவூர், அரண்மனைப்பட்டி ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தவிர சுற்றுலாத்தலமாக உள்ள இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடுகள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன.
இதையடுத்து இந்த வீட்டை காண்பதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாட்டு சுற்றுலாப்பயணிகள் இந்த கிராமத்திற்கு வந்து இந்த வீட்டை பார்த்து ரசித்து செல்கின்றனர். இது தவிர இங்கு புகழ்பெற்ற டைல்ஸ் தயாரிக்கும் ஆலைகள் மற்றும் கட்டுமான தொழில்களும் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கிராமத்திற்கு பல்வேறு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. குறிப்பாக இந்த பகுதியில் சரியான பஸ்வசதிகள் இல்லாததால் இப்பகுதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். கிராம மக்கள் சரக்குவாகனங்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.
இது குறித்து ஆத்தங்குடியைச் சேர்ந்த சாகுல் என்பவர் கூறியதாவது:- பொதுவாக இந்த வழியாக காரைக்குடியில் இருந்து தினந்தோறும் 6ஏ, 9ஏ, 5,8, 2சி ஆகிய 4அரசு டவுன் பஸ்களும், காரைக்குடி-திருமயத்திற்கு தனியார் பஸ் ஒன்றும் இயங்கி வருகிறது.
இதுதவிர கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் இருந்து அரசு விரைவு பஸ் ஒன்று காரைக்குடி மற்றும் ஆத்தங்குடி வழியாக திருச்சிக்கு சென்று வந்துக்கொண்டிருந்தது. இந்த பஸ் தேவகோட்டையில் தினந்தோறும் அதிகாலை 3.50மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வழியாக ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 4.30மணிக்கு வரும். அதன் பின்னர் கோனாப்பட்டு வழியாக திருச்சிக்கு காலை 6.45மணிக்கு சென்றடையும், மறு மார்க்கத்தில் திருச்சியில் காலை 10மணிக்கு புறப்பட்டு ஆத்தங்குடி கிராமத்திற்கு காலை 11.45மணிக்கு வந்து சேரும்.
மகளிர் பஸ்
அதன் பின்னர் தேவகோட்டைக்கு மதியம் 1மணிக்கு சென்றடையும். 1.30மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5 மணிக்கு சென்றடையும். இவ்வாறு தினந்தோறும் விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் ஆத்தங்குடி, கோனாப்பட்டு, பலவான்குடி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர். இந்நிலையில் இந்த பஸ் ஆத்தங்குடி வழியாக செல்வது நிறுத்தப்பட்டு திருச்சியில் இருந்து பை-பாஸ் சாலையில் காரைக்குடி நோக்கி செல்கிறது. இதனால் இந்த கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிஅடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த அரசு பஸ் திருச்சியில் இருந்தோ அல்லது தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையத்தில் புறப்படும்போது அதன் கண்டக்டர் ஆத்தங்குடி செல்லாது என்று கூறி பின்னர்தான் பஸ்சை இயக்குகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால் அதற்கு தகுந்த பதில் கூறுவதில்லை. மேலும் ஆத்தங்குடி பகுதியில் இருந்து கல்லூரி மாணவிகள் 60 பேர் காரைக்குடி, பள்ளத்தூர், திருப்பத்தூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த கல்லூரி மாணவிகள் அந்த பஸ்சில் செல்ல மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கல்லூரி மாணவிகளுக்கு என்று மகளிர் பஸ் ஒன்று இந்த வழியாக இயக்க வேண்டும்.
நடவடிக்கை
இது தவிர புகழ்பெற்ற ஆத்தங்குடி நகருக்கு பலவான்குடியில் இருந்து வரும் சாலை ஒருவழி சாலையாகவும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் சில அரசு பஸ்கள் ஊருக்குள் வராமல் சென்று விடுகின்றன. மேலும் ஆத்தங்குடியில் இருந்து மதுரைக்கு செல்ல வேண்டுமானால் இந்த பகுதி மக்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள காரைக்குடியில் இருந்தோ அல்லது சுமார் 7கிலோ மீட்டர் தூரம் உள்ள குன்றக்குடிக்கு சென்று அதன் பின்னர்தான் செல்ல வேண்டும்.
இது தவிர ஆத்தங்குடியில் இருந்து குன்றக்குடிக்கு நேரடியாக அரசு பஸ்கள் இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் கனரக சரக்கு வாகனத்தில் தினந்தோறும் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே காரைக்குடியில் உள்ள போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்கனவே தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, ஆத்தங்குடி வழியாக இயக்கப்பட்ட இந்த அரசு விரைவு பஸ்சை தினந்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தங்குடி வழியாக ஒரு வழிச்சாலையாக உள்ள சாலையை விரிவுப்படுத்த சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த சில நாளாக வதந்தி பரப்பப்பட்டு வந்தது.
இதன் எதிரொலியாக போளூர் அருகே உள்ள களியம் கிராமத்தில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர்கள் சென்ற காரை மறித்த கிராம மக்கள், குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து கொடூரமாக தாக்கினர்.
இதில் ருக்மணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுதொடர்பாக, 11 கிராமங்களை சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர். செய்யாறில் குழந்தை கடத்தல் வதந்தி குறித்து வதந்தி பரப்பிய வாட்ஸ்-அப்பில் செல்பி வீடியோ வெளியிட்ட சக்தி என்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர்.
இந்த நிலையில், அதே போன்று திருப்பத்தூரிலும் குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ராவுதம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் மகன் யாதவமூர்த்தி (வயது 31). கட்டிட மேஸ்திரியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. வீடியோவில், 400 வடமாநிலத்தவர்கள் குழந்தை கடத்த ஊடுருவி உள்ளனர்.
ஒருவன் சிக்கி விட்டான். மீதமுள்ள 399 பேரை எங்கு பார்த்தாலும் அடித்து கொள்ளுங்கள். ஆந்திராவில் குழந்தை கடத்தல் கும்பலை போலீசார் என்கவுண்டர் செய்கின்றனர். தமிழக போலீசார் எதற்கும் லாயக்கில்லை. குழந்தை கடத்தல்காரர்களை பொதுமக்கள் பிடித்து கொடுத்தாலும், போலீசார் விடுவிக்கின்றனர் என்று பேசி இருந்தார்.
இந்த வீடியோ குறித்து எஸ்.பி. பகலவன் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் உலக நாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார், யாதவமூர்த்தியை தேடி பிடித்து கைது செய்தனர்.
தவறான தகவல் பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மகேந்திரன்(வயது 45). இவர் திருப்பத்தூர் கிளை சிறைச்சாலையில் உதவி ஜெயிலராக பணியாற்றி வந்தார். மகேந்திரன் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு பஸ்சில் சென்றுள்ளார். ஒக்கூர் அண்ணாநகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அவர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஈசனூரை சேர்ந்த லிங்கராஜ், பின்னால் அமர்ந்து வந்த கார்த்திக்ராஜா ஆகியோரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கையை அடுத்த எறும்புகுடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது 19). இவர் சிவகங்கையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார். இந்தநிலையில் சிவகங்கையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தனது கிராமத்திற்கு சதீஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிவகங்கையை அடுத்த வாணியங்குடி என்ற இடம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கச்சநத்தம் கிராமத்திற்கு ஆயுதங்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த மருது என்ற சண்முகநாதன், ஆறுமுகம் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மேலும் படுகாயம் அடைந்த 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் என்பவர் நேற்று இறந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து பழையனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்டதாக பழையனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ஜானகிராமன் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.






