என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மானாமதுரையில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பட்டத்தரசி தெருவைச் சேர்ந்தவர் பாலு. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாஸ்கரன் (வயது 18). மானாமதுரையில் உள்ள பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று மாலை திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாஸ்கரன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    தேவகோட்டை அருகே என்ஜினில் திடீர் கோளாறால் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    தேவகோட்டை:

    சென்னையில் இருந்து நேற்று மாலை 5.50 மணிக்கு பயணிகளுடன் எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டது.

    தஞ்சாவூர்,காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக செல்லும் இந்த ரெயில் ராமேசுவரத்திற்கு அதிகாலை சென்றடையும்.

    சிவகங்கை மாவட்டம், கல்லல் ரெயில் நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 1.40 மணிக்கு ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கு பயணிகள் ஏறியவுடன் டிரைவர் ரெயிலை இயக்க முற்பட்டார்.

    அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனே ரெயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். பலமணி நேரம் போராடியும் பழுதை சரி செய்ய முடியவில்லை.

    இதையடுத்து காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தொழில் நுட்ப ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போராடியும் எந்தவித பலனும் இல்லை.

    இந்த நிலையில் காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் வந்தது. அந்த ரெயில் என்ஜினை கல்லலுக்கு கொண்டு சென்று ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொருத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் 4.40 மணியளவில் ராமேசுவரத்திற்கு புறப்பட்டது. காலை 7.10 மணி அளவில் ராமேசுவரம் சென்றடைந்தது.

    என்ஜின் கோளாறால் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே செல்லும் பயணிகள் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி பொதுநல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி வள்ளல் அழகப்பர் நடையாளர் சங்கம், அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம், தொழில் வணிக கழகம், அரிமா சங்கம், ரெயில் பயணிகள் பாதுகாப்பு கழகம் ஆகிய பொதுநல சங்கத்தினர் திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான அகல ரெயில் பாதை பணி கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ரூ.700கோடி மதிப்பீட்டில் தொடங்கி நிறைவு பெற்றது. இதையொட்டி சுமார் 73 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த ரெயில் பாதையில் கடந்த மார்ச் மாதம் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது.

    பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த ரெயிலை அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பஸ் கட்டணம் தற்சமயம் அதிகஅளவு உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினசரி சென்று வருகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தினந்தோறும் சுமார் 70 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய பகுதியில் உள்ள மாணவர்கள் காரைக்குடி மற்றும் மதுரைக்கும் கல்லூரி படிப்பிற்கு சென்று வருகின்றனர். தற்போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிகஅளவு கட்டணம் உள்ளதால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காரைக்குடி-பட்டுக்கோட்டை பயணிகள் ரெயிலை தினந்தோறும் சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டித்து இயக்கினால் அதிகஅளவில் இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    திருப்பத்தூர் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை கற்பழித்துக் கொலை செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகே உள்ளது அச்சரம்பட்டி. இங்கு வாய் பேச முடியாத 17 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தார்.

    தாய்-தந்தை வேலைக்கு சென்று விட்ட நிலையில் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த யாரோ மர்ம நபர் வீட்டினுள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    பின்னர் சிறுமி அடையாளம் காட்டி விடுவார் என பயந்து தலையில் பயங்கர ஆயுதத்தால் அடித்துக்கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் உள்ள மரங்கள் அடர்ந்த புதருக்குள் வீசி விட்டு தப்பியோடி விட்டார்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் லிங்காவும் வரவழைக்கப்பட்டது.

    சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடிய லிங்கா 100 மீட்டர் தூரத்தில் உள்ள பழனிசாமி வீட்டு முன்பு நின்றது.

    அந்த வீட்டில் இருந்த பழனிச்சாமியின் மகன் மாணிக்கம் (27) என்பவரை பிடித்து விசாரித்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி, ரசூலா சமுத்திரத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை செய்துதர கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இளையான்குடி:

    இளையான்குடியை அடுத்த ரசூலா சமுத்திரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இளையான்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட இங்கு அடிப்படை வசதிகள் என்பது சரிவர செய்துதரவில்லை என்று பலமுறை இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ரசூலா சமுத்திரத்தில் சீராக குடிநீர் வழங்காததால் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தெருக்களின் சாலை சேதமடைந்தும், மின்விளக்குகள் சரிவர எரியாமலும் உள்ளது. ஆனால் இதுதொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    இந்தநிலையில் ரசூலா சமுத்திரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருக்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டும், இறந்தவர்களை அடக்கம் செய்ய மயானம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து தரவேண்டும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர்கள் பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி, தங்களது கோரிக்கைகளை பேரூராட்சி அலுவலகத்தில் முறையிடுமாறு கூறிவிட்டனர். அதன்பின்பு அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து போலீசாரும், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜாராமும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    தேவகோட்டையில் உடல் நலமில்லாத தாயை பார்க்க வந்த மகன் பரிதாபமாக இறந்தார். அதனைக் கேட்ட அதிர்ச்சியில் தாயும் இறந்தார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள பனிப்புலான் வயலைச் சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 55). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தாய் சிகப்பி (76).

    கடந்த சில நாட்களாக சிகப்பி உடல் நலமின்றி இருந்தார். அவரை பார்ப்பதற்காக மெய்யப்பன் சொந்த ஊர் வந்தார். தேவகோட்டை பஸ் நிலையம் இறங்கிய அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட அங்குள்ள சிமெண்ட் இருக்கையில் படுத்தார்.

    நீண்ட நேரமாக அவர் எழுந்திருக்காததால் அக்கம், பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது மெய்யப்பன் இறந்துவிட்டது தெரியவந்தது.

    அவரது உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர். தனது ஒரே மகன் இறந்த செய்தியை கேட்டதும், உடல் நலமில்லாமல் இருந்த சிகப்பியும் அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார்.

    தாயும், மகனும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பொருட்களின் எடையளவு குறைவு தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரே‌ஷன் கடை விற்பனையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டி ரேசன் கடையில் முத்துப்பாண்டி என்பவர் பொருட்களை வாங்கி உள்ளார். எடையின் அளவு குறைவாக இருந்ததால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி மற்றும் புதுப்பட்டி பொதுமக்கள் விற்பனையாளரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

    இதையடுத்து கான்பா நகரைச் சேர்ந்த தங்கபாண்டி (வயது31) என்பவர் ரேசன் கடை சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடம் விற்பனையாளர் குறித்து புகார் அளித்துள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த புதுப்பட்டி ரேசன் கடையின் விற்பனையாளரான நெற்குப்பையை சேர்ந்த ராமச்சந்தின் (43), தனது நண்பர் ஏகப்பன் (24) மூலம் தங்கபாண்டிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    ஏகப்பன் பேசியதை அப்படியே பதிவு செய்த தங்கபாண்டி ஆதாரத்துடன் திருப்பத்தூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து, ராமச்சந்திரன், ஏகப்பன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்

    அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக சிவகங்கை தொகுதியில் பயன்படுத்த புதிய வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிவகங்கை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு (2019) இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தற்போது விரைவாக செய்து வருகிறது. இதில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கையின் போது புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி), சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தலின் போது பயன்படுத்துவதற்காக 3 ஆயிரத்து 310 வாக்குப்பதிவு எந்திரங்கள், 1,800 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தேர்தல் பொறுப்பு அலுவலர் கண்ணபிரான், தேர்தல் பிரிவு தாசில்தார் ரமேஷ் மற்றும் பறக்கம் படை தாசில்தார் பாலகுரு ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூருவில் இருந்து சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் அதிகாரிகள் இந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை சுற்றிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
    மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தில் வைகை ஆற்றின் தடுப்பு கல்லை உடைத்து மர்ம நபர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை வட்டாரத்தில் விடிய, விடிய நடக்கும் மணல் திருட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மானாமதுரையில் அரசு மணல் குவாரி இல்லாததால் பலரும் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் வசிக்கும் பலரும் அதிகாரிகளை சரிகட்டி மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் வைகை ஆற்றில் இறங்கும் கும்பல் விடிய, விடிய மணலை அள்ளி பக்கத்து கிராமங்களில் குவித்து வைத்து பகலில் லாரிகள் மூலம் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்துகின்றனர்.

    குறிப்பாக கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம், வேதியரேந்தல், கீழமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு அதிகம் நடந்து வருகிறது. இதற்கிடையில் மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் மணல் திருட்டு அதிகாரிகள் உடந்தையுடன் படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மானாமதுரையை அடுத்த கால்பிரவு அருகே மணல் திருட்டு நடக்காமல் இருக்க ஆற்றையொட்டி தடுப்பு கற்களை வைத்து இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தடுப்பு கற்களை உடைத்து மர்ம நபர்கள் லாரியை கொண்டு மணல் அள்ளி சென்றுள்ளனர். இது அப்பகுதி விவசாயிகளிடையே மேலும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மணல் திருட்டை தடுக்க வேண்டிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதே இதற்கு காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து தாசில்தார் சுந்தராஜனிடம் கேட்டபோது, தடுப்புகள் அமைத்தும் அதனை உடைத்து மணல் அள்ளிச் செல்கின்றனர். இதற்கு மேல் என்னதான் செய்யமுடியும். யார் அள்ளினார்கள் என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

    விவசாயிகள் கூறுகையில், மணல் திருட்டால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதுடன், விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இதனை தடுக்க சிறப்புக்குழுக்கள் மூலம் கண்காணித்து மணல் திருடுவோர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    அ.ம.மு.க. நிர்வாகிகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் பேசினார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், அவைத்தலைவர் சொக்கநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் முன்னிலை வகித்தார். சிவகங்கை நகர செயலாளர் அன்புமணி வரவேற்றார். கூட்டத்தில் மண்டல பொறுப்பாளரும், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்காக கட்சியில் உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கை பணிக்காக 4 தொகுதிகளுக்கும் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் இணைந்து செயல்பட்டு பணியை முடிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் வந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறாது. அதனால்தான் தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் பதவியை நீட்டித்து வருகின்றனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கின் தீர்ப்பு, காலம் கடத்துவதற்காக வழங்கப்பட்ட தீர்ப்பு. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கு அனைத்து நிர்வாகிகளும் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அம்மா பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, இளைஞரணி இணை செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் மேப்பல் ராஜேந்திரன், பொருளாளர் சக்தி, ஒன்றிய செயலாளர்கள் முத்து, மந்தக்காளை, முன்னாள் நகர்மன்ற தலைவர் அர்ச்சுனன், ஊராட்சி செயலாளர்கள் கண்ணன், சக்திமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்து நன்றி கூறினார். 
    மானாமதுரை பகுதியில் அமைக்கப்படும் மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
    மானாமதுரை:

    மானாமதுரை பகுதி வைகை ஆற்றுப்படுகையில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அரசு மணல் குவாரி அமைக்க முடிவு செய்து, பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பகுதி வைகை ஆற்றில் இருந்து விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 72 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் திருப்புவனம், மானாமதுரை ஆகிய 2 தாலுகாக்களிலும் வைகை ஆற்றை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அரசு மணல் குவாரி அமைத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி தலைமையில் நேற்று மானாமதுரை பழைய பஸ் நிலையம் எதிரே தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தின்போது, மணல் குவாரி அமைப்பதை அரசு மறுபரிசீலனை செய்யாவிடில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அனைத்து கட்சியினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது உண்ணாவிரதத்தில் அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் உமாதேவன், குருமுருகானந்தம், விஜயகுமார், சுரேஷ்பாபு, நகர வர்த்தகர் சங்க தலைவர் பாலகுருசாமி, தி.மு.க. சார்பில் அண்ணாத்துரை, ராஜாமணி, பொன்னுச்சாமி, இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தங்கமணி, குணசேகரன், ம.தி.மு.க. சார்பில் கண்ணன், மருது, தே.மு.தி.க. தர்மாராமு, த.மா.கா. முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலசுப்பிரமணியன், பா.ஜ.க. சார்பில் கண்ணன், சங்கரசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த போராட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணலை விற்று மக்களை அழித்து ஆட்சி நடத்த வேண்டிய அவசியமில்லை. மக்களை அழிப்பதற்கு என்றே தமிழக அரசு செயல்படுவதை ஏற்க மாட்டோம். மணல் குவாரியால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார். 
    குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பல இடங்களில் கால்வாய்களை சுத்தம் செய்யாததாலும், பிளாஸ்டிக் பொருட்களின் தேக்கத்தினாலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி வீதிகளில் தேங்கி நிற்கின்றன. குறிப்பாக அச்சுக்கட்டு பகுதியில் அபுபக்கர் நகர், காளியம்மன் கோவில் தெரு, கண்மணிபாக்கம், உசேன் அம்பலம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கின்றன.

    இதனால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், மக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முறையான வாய்க்கால் அமைத்து கழிவுநீர் செல்ல பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×