என் மலர்tooltip icon

    சிவகங்கை

    7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர். #ChildMolested
    காரைக்குடி:

    காரைக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றிருந்த அந்த சிறுமியை அழைப்பதற்காக அவரது தாய் சென்றுள்ளார். அழைத்து வரும்போது, எதிரே அந்த வாலிபரை கண்டதும் சிறுமி தனது தாயின் பின்னால் ஒளிந்தாள்.

    இதுகுறித்து கேட்டபோது, வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைதுசெய்தனர். 
    காரைக்குடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை மேல மணக்குடியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவியை அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு நடந்து வந்தார். அப்போது எதிரே மணிகண்டன் (17) என்ற வாலிபர் வந்தார்.

    அவரை கண்டதும் அந்த சிறுமி தாயாரின் பின்னே சென்று ஒளிந்தாள். ஏன் அவரை பார்த்ததும் இப்படிச் செய்கிறாய்? என்று தாயார் கேட்டதும் அந்த சிறுமி தேம்பி தேம்பி அழுதாள்.

    வீட்டுக்கு சென்றதும் சிறுமியிடம் தாயார் விசாரித்தார். அப்போது அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியை தனியே அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். விசாரணையில் அவர் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து மணிகண்டனிடம் விசாரணை நடைபெறுகிறது.
    தேவகோட்டையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மீது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவரது மனைவி பிரேமா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கணவன்-மனைவியும் தேவகோட்டை பஸ் நிலையத்தில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். மகன்கள் இருவரும் வெளியூரில் வேலை பார்ப்பதால் கணவன், மனைவி மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு இருவரும் வீடு திரும்பினர். சிறிதுநேரத்தில் ராஜா வெளியே புறப்பட்டார்.

    பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது பிரேமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ் பெக்டர் மருது ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே பிரேமாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், ராஜா மீது சந்தேகம் உள்ளதாகவும் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

    சிவகங்கை அருகே கிராம சாலையை சீரமைத்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Ruralroad

    சிவகங்கை:

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் மேலப்பூங்குடி ஊராட்சிக்குட்பட்டது, வலையராதினிப்பட்டி. இந்த கிராமத்தில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் என்பது இன்றளவும் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கீழப்பூங்குடி செல்லும் சாலை சேத மடைந்து காணப்படுகிறது.

    சாலை வசதி ஓரளவு இருந்தும், இந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் அன்றாட பணிகளுக்கு வெளியூர் சென்று வர வேண்டும் என்றால் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலை கிராமத்திற்குச் சென்று, பின்பு அங்கிருந்து பஸ்சில் வெளியூர் செல்ல வேண்டும்.

    இதுதவிர வலைய ராதினிப்பட்டியில் தொடக்கப்பள்ளி மட்டும் உள்ளது. இங்குள்ள மாணவ-மாணவிகள் மேல் படிப்பிற்கு 4 கி.மீ. தொலைவில் கீழப்பூங்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.

    வலையராதினிப் பட்டிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால், அந்த கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் தினசரி 4 கி.மீ. நடந்து சென்று படித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வலைய ராதினிப்பட்டியை சேர்ந்த அழகர் கூறுகையில், சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் முறையிட் டும் எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை.

    சில மாதங்களுக்கு முன்பு மாணவ-மாணவிகளை அழைத்துக்கொண்டு சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

    இதையடுத்து அரசு அலுவலர்கள் கிராமத் திற்கு வந்து இங்குள்ள போக்குவரத்து வழித் தடத்தை பார்வையிட்டு சென்றனர். அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வலையராதினிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்று வதுடன், பஸ் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார். #Ruralroad

    மானாமதுரை ரெயில்வே மேம்பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. #Railwaybridge

    மானாமதுரை:

    மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலை பணிகளுக்கு விரகனூர், சிலைமான், திருப்புவனம், லாடனேந்தல், மானாமதுரை நகர் பகுதி, மேலபசலை, கமுதகுடி, தெளிச்சாத்தநல்லூர், பரமக்குடி ஆகிய பகுதிகளில் மதுரை-ராமேசுவரம் ரெயில் பாதையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மேலப் பசலை ரெயில்வே மேம்பாலம் முழுமையாக முடிக்கப்பட்டு போக்கு வரத்து நடந்து வருகிறது.

    மீதமுள்ள பகுதியில் பாலங்கள் இடையே உள்ள தண்டவாளத்தின் மீது ராட்சத இரும்பு கருடர்கள் அதிக எடை தாங்கும் 5 கிரேன்கள் உதவியுடன் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    கர்டர்கள் இணைக்கப்பட்டு பாலப்பணிகள் முழுவதும் முடிந்து விட்டால் மதுரை-ராமேசுவரம் தங்க நாற்கர சாலையில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.#Railwaybridge

    திருப்பத்தூர் அருகே உயர் மின் கோபுரத்தில் ஏறிய தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 55). கட்டிட தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மன நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பையா அதன்பின் வீடு திரும்பவில்லை.

    இந்தநிலையில் தென் கரை கண்மாய் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் சிக்கிய முதியவர் பிணமாக தொங்குவதாக நாச்சியார்புரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தது கருப்பையா என தெரியவந்தது.

    கருப்பையா மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நகை பட்டறை அதிபரை கத்தியால் குத்தி 94 பவுன் நகையை 4 பேர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கத்திடலைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரவணன் (வயது 36).

    இவர், காரைக்குடி அம்மன் சன்னதி பஜாரில் நகை பட்டறை நடத்தி வருகிறார். சரவணனிடம் பலரும் நகை ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.

    தனது பட்டறையில் நகைகளை தயாரிக்கும் சரவணன் அதில் ‘ஹால்மார்க் முத்திரை’ பதிக்க மதுரை கொண்டு செல்வார். நேற்று காலை நகைகளுடன் பட்டறையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்சில் சரவணன் மதுரை சென்றார். அங்கு வேலையை முடித்துவிட்டு இரவில் காரைக்குடி திரும்பினார். பின்னர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சரவணன் வீட்டுக்கு புறப்பட்டார்.

    சங்கத்திடல் பகுதியில் வந்தபோது, அங்கு நின்ற 4 பேர் வழிமறித்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சரவணன் வைத்திருந்த நகைகளை கேட்டனர்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சரவணனின் கழுத்தில் கத்தியால் குத்தினர். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரவணன் வைத்திருந்த நகைகளை 4 பேரும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சரவணன், காரைக்குடி தெற்கு போலீசில் புகார் செய்தார். 94 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர். கழுத்தில் காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சரவணன் மதுரைக்கு நகைகளை கொண்டு சென்று வருவதை அறிந்த யாரோ திட்டமிட்டு இந்த துணிகர செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர்.

    நகைப்பட்டறை அதிபரை கத்தியால் குத்தி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி அருகே காலத்தால் அழியாத மற்றும் 400 ஆண்டு கால வரலாற்று புகைப்படங்களை நகரத்தார் மாளிகை முழுவதும் வைத்து கண்காட்சி கூடமாக முதியவர் ஒருவர் மாற்றியுள்ளார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது கானாடுகாத்தான். இங்குள்ள து.க.தெருவில் வசித்து வருபவர் குப்பன் செட்டியார்(வயது 65). இவர் காரைக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக தனது சேகரிப்பின் மூலம் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷ களஞ்சியத்தை தனது வீட்டில் சேகரித்து வருகிறார். எளிதில் கிடைக்கப்பெறாத 400 ஆண்டு கால பழமைவாய்ந்த புகைப்படங்கள், ஓலைச்சுவடி உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்துள்ளார். இதுதவிர இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களின் ஆங்கிலத்தை தமிழர்கள் கற்க பயன்படுத்திய முதல் புத்தகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய டைரி, சுதந்திரம் கிடைத்தபோது அவற்றை கொண்டாடிய விதம், ஒருவருக்கொருவர் அனுப்பிய வாழ்த்து அஞ்சல் அட்டை, கலை, இலக்கியம், புராணம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இவரது சேகரிப்பில் அடங்கியுள்ளள. மேலும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் தொழில் செய்தபோது அவர்கள் எழுதிய 100 ஆண்டுகள் பழமையான வரவு-செலவு புத்தகம், முதன்முதலில் வெளியான தமிழ், ஆங்கிலம் அகராதி தொகுப்புகள், இதழ்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

    இதுகுறித்து குப்பன் செட்டியார் கூறியதாவது:- கானாடுகாத்தான் பகுதியில் உள்ள இந்த நகரத்தார் வீட்டை வாடகைக்கு எடுத்து இதில் கடந்த 40 ஆண்டுகாலமாக அரிய வகை பொக்கிஷங்களை சேகரித்து வருகிறேன். மழைநீர் சேகரிப்பு முற்றம் தோற்றம் உள்ள இந்த பிரமாண்ட வீட்டின் உள்பகுதியில் 2 பெரிய அரங்கு மற்றும் ஒரு பெரிய அரங்கு முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வரிசைப்படுத்தி கண்காட்சிக்காக வைத்துள்ளேன். இதில் முக்கியமாக கடந்த 1884-ம் ஆண்டு நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்திய தபால் தலைகள், லண்டன் ராணி பயன்படுத்திய தபால் தலைகள், பண்டைய இயல், இசை, நாடகம் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம், 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருவிளையாடல் புராணம், 120 வருடத்திற்கு முன்பு நமது தமிழர்கள் பயன்படுத்திய பனை ஓலையால் ஆன அரிச்சுவடிகள், பண்டைய காலத்தில் தமிழர்களின் திருமணம் குறித்த தகவல்கள் உள்ளன. இதுதவிர கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் புகைப்படம் எடுத்த நெல்லை நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவாரூர் தேரோட்டம், குற்றாலம் அருவிகள், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், மெரினா பீச், மவுண்ட் ரோடு, ஐகோர்ட்டு கட்டிடம் உள்ளிட்ட அரிய வகை புகைப்படங்களும் உள்ளன.

    மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிறிஸ்த ஆலயங்களின் புகைப்படங்கள், உலக அளவில் காணப்பட்ட பறவைகள் குறித்த படங்கள், கடந்த 1800-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் எழுதிய சுதந்திர போராட்டம் குறித்த டைரிகள், புகைப்படங்கள், இந்திய ராணுவத்திற்கு அப்போதே சுமார் ரூ.2 லட்சம் வரை அதிக அளவில் பண உதவி செய்த தமிழர்கள் குறித்த தகவல்கள், தமிழர்கள் வெளிநாட்டில் செய்த வாணிபம், இன்று அழைக்கப்படும் வியட்நாம் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. மேலும் கடந்த 1900-ம் ஆண்டு முதல் 1923-ம் ஆண்டு வரை காரைக்குடியில் தயாரிக்கப்பட்ட அப்போதைய சொகுசு கார்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    காரைக்குடி-பட்டுக்கோட்டை ரெயில் மதுரை வரை நீட்டிக்கப்படும் என்றும், இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் கொடுப்பேன் என்றும் செந்தில்நாதன் எம்.பி. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியை அடுத்த குன்றக்குடியில், குன்றக்குடி அடிகளார் பிறந்தநாள் விழா செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் லதா, கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ., குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மணி மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், முக்கிய பிரமுகர்களுடன் அரசு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. அதனை எம்.பி., கலெக்டர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இந்த விழாவில் செய்தி-மக்கள் தொடர்பு துறை அலுவலர் பாண்டி, திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அசோகன், குன்றக்குடி ஆதீன மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழா முடிந்தபின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த செந்தில்நாதன் எம்.பி. கூறும்போது, காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையேயான ரெயில் வழித்தடத்தில் ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளில் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையிலான ரெயில் பயண நேரத்தை மேலும் குறைக்க முயற்சி எடுக்கப்படும். இத்துடன் அந்த ரெயிலை மதுரை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகத்திடம் முறையிடப்படும். மேலும் வாரம் இருமுறை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படும். இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவேன் என்றார். 
    சிவகங்கை பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் லதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    பேரணி பழைய அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வந்தடைந்தது.

    பேரணியில் கல்லூரி மாணவிகள் “இரண்டிற்கு மேல் எப்பொழுதும் வேண் டாம்”, “குடும்ப நலம் நாட்டின் நலம்”, “பெண் கள் நலம் நாட்டின் நலம்”, “சிறு குடும்பம் சீரான குடும்பம்”, “இரண்டு குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவை”, “பெண் சிசுவை காப்பாற்றுவோம்” என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

    பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் மக்கள் தொகை பெருக்கம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்ட குடும்பநலத் திட்டத்தில் சாதனை புரிந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    மேலும் உலக மக்கள் தினத்தையொட்டி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியளவிலும், சிவகங்கை மன்னர் மேல் நிலைப்பள்ளி அளவிலும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
    கண்மாயில் மணல் திருடிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். டிராக்டர் உரிமையாளரான ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மானாமதுரை:

    மானாமதுரை கண்மாய் பகுதியில் சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வருவாய் ஆய்வாளர் அருள்ஜேம்ஸ், கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து மற்றும் பணியாளர்கள் கண்மாய் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு டிராக்டரில் சிலர் மணல் எடுத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் அதிகாரிகளை கண்டதும் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    வருவாய்த்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து மானாமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த டிராக்டர் கீழமேல்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோனைதேவன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கல்வி உதவித் தொகை முகாமின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை முகாமின் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. அவர், முகாமை தொடங்கி வைத்து கல்வி கடனிற்கான விண்ணப்பங்கள் மற்றும் கையேடுகளை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது:- சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய மற்றும் இதர பிரிவினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை சிறுபான்மையின சமுதாய மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மேலும் சிறுபான்மையின மக்கள் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் கல்விக்கடன் திட்டம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் வங்கிகளில் இருந்து பெற்ற கல்வி உதவித் தொகையை நல்ல முறையில் திரும்பி செலுத்த வேண்டும். தங்களுக்கு தெரிந்த தகவல்களை உடன் படிக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். சிறுபான்மையின சமூக மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கல்வித்தரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்தி சமூகத்தில் முன்னேற பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திருவாசகம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×