என் மலர்
சிவகங்கை
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 28). இவர், நெடுஞ்சாலை வாகன ரோந்து காவலராக பணிபுரிந்தார்.
நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜீவா, இன்று காலை வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். வீட்டு முன்பு கிடந்த நீளமான இரும்பு கம்பியை அப்புறப் படுத்துவதற்காக எடுத்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி மீது எதிர்பாராத விதமாக இரும்பு கம்பி உரசியது. இரும்புக் கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஜீவா மீது கண் இமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜீவாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான ஜீவாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இவரது மனைவி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். #Tamilnews
முகாமில் கொல்லங்குடி, கீரனூர் கண்டனிப்பட்டி, சாத்தம்புளி, அரியாக்குறிச்சி, அழகாபுரி மேப்பல், பெரிய நரிக்கோட்டை, நடுவாளி, தச்சன்கண்மாய், உசிலனேந்தல், கல்லணை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு சாலை வசதி, குடிநீர் வழங்குவதற்கு தேவையான பணிகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், புதிதாக மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், முதியோர் உதவித் தொகை மற்றும் தெருவிளக்கு அமைத்தல், பட்டா மாறுதல், பசுமை வீடு வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:-
தமிழக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக இந்த குறைதீர் முகாமில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாகவும், முதியோர் உதவித்தொகை கேட்டும் அதிக அளவில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள கண்மாய் மடைகளை சீரமைக்க வேண்டும் என்றால் உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, காளையார்கோவில் தாசில்தார் பாலகுரு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் வக்கீல் ராஜா, ஆர்.எம்.எல் மாரி, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோதாயுமானவன் நன்றி கூறினார்.
முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொல்லங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளி கூடத்தை அமைச்சர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கிருந்த மாணவ-மாணவிகளிடம் ஆசிரியர்கள் சரியான நேரத்தில் வகுப்புகளுக்கு வருகிறார்களா என்றும் சத்துணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
மேலும் அங்குள்ள குடிநீரை குடித்து பார்த்த அமைச்சர் அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் அதை அகற்றிவிட்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அமைச்சர் பாஸ்கரனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் பகுதியாக திருப்பத்தூர் விளங்குகிறது. இங்கு விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களே பிரதானமாக உள்ளது. இந்தநிலையில் சமீப காலமாக திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள் மற்றும் ஆற்றுப்பகுதியில் அருகில் உள்ள பட்டா நிலங்களில் தொடர்ந்து மணல் திருடப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து திருட்டு மணல் கொண்டு வந்து இப்பகுதியில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆறு, கண்மாய் ஓரங்களில் உள்ள பட்டா நிலங்களில் விதிமீறி 10 முதல் 15 அடி ஆழத்திற்கு தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது. இந்த மணல் திருட்டால் ஆறு, கண்மாய் கரையில் உள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணிக்கு, திருப்பத்தூர்-திருக்கோஷ்டியூர் ரோட்டில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் மணல் திருடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நள்ளிரவில் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது திருப்பத்தூர் அருகே தானிப்பட்டி ஆற்றுப்பகுதியில் உள்ள தேவரம்பூரைச் சேர்ந்த வெள்ளக்கண்ணு என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மணல் திருடுவது தெரியவந்தது. அப்போது அதிகாரிகளை கண்டதும், மணல் திருடர்கள் ஜே.சி.பி. எந்திரத்தை மட்டும் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். பின்னர் அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரத்தை பறிமுதல் செய்து திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் நிலத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தி புகார் கொடுத்துள்ளனர். மணல் திருடிய நிலத்தின் ஒரு பகுதியில் சுமார் 15 அடி ஆழத்திற்கு ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு தோண்டி மணல் திருடியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் கூறுகையில், திருப்பத்தூர் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்றில் மணலை திருடி வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் நீர்வளம் குறைந்து வருகிறது. மேலும் மணல் திருடர்கள் சிலர், வெளிமாவட்டங்களில் உள்ள டிப்பர் லாரிகள் மற்றும் ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு வந்து மணல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னாள் அரசு அலுவலர் ஒருவர் தலைமையில் இந்த மணல் திருடர்கள் செயல்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பட்டா நிலங்களில் மணல் திருடினால் அந்த நிலத்தின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசர்குலம் பகுதியை சேர்ந்த தப்ளிக் ஜமாத் கமிட்டியினர் திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து திருப்பத்தூர் வழியாக அறந்தாங்கி நோக்கி அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
நேற்று மாலை திருப்பத்தூர் அருகில் சிங்கம்புணரி சாலையில் அவர்கள் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாலாற்று கால்வாய்க்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில் காரில் சென்ற அறந்தாங்கியை சேர்ந்த ஹாஜிசுல்தான்(வயது 70) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். மேலும் காரில் சென்ற முகமது அலி(54), பீர்முகமது(71), அப்துல்ஜபார்(51), டிரைவர் ஷேக் அப்துல்லா(47) ஆகியோர் பலத்த காயங்களுடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையாளர் அயூப்கான், தாசில்தார் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகர், ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் இந்த செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க கடையில் இருந்து 3 அடிக்கு தரையில் கால் ஊன்றாமல் மேற்கூரை அமைக்க அனுமதி பெற்று தான் அமைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அத்துடன் உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் அகற்றுவது நியாயம் இல்லை என்றனர்.
இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர்.
இதுகுறித்து நகர் வர்த்தகர் சங்க தலைவர் அறிவுத்திலகம் கூறும்போது, சிவகங்கையில் முக்கிய வர்த்தக பகுதியாக நேருபஜார் உள்ளது. இங்கு தான் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.
அவ்வாறு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க வசதியாக அனுமதிபெற்று மேற்கூரை அமைத்துள்ளோம். இந்தநிலையில் அதனை ஆக்கிரமிப்பு கூறி எந்தவித அவகாசம் தராமல் திடீரென்று அகற்றியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே இதுதொடர்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) வர்த்தகர் மற்றும் அனைத்துக்கட்சியினர் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம் என்றார்.
அதிகாரிகள் கூறுகையில், சிவகங்கை நகரில் நேரு பஜாரை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றனர்.
திருப்பத்தூர்:
வாணியம்பாடி அடுத்த ஓமகுப்பத்தை சேர்ந்தவர் அசோகன் (33). இவரது மனைவி வித்யா (27). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் அசோகன், கடந்த மே மாதம் 18-ம் தேதி சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் மோட்டார் இயக்கும் வேலைக்கு 9 மாத ஒப்பந்த அடிப்படையில் சென்றார்.
மே 20-ந்தேதி பணியில் சேர்ந்து விட்டதாக கூறி வாட்ஸ்- அப் மூலம் தெரிவித்தார். அதன் பிறகு தினந்தோறும் செல்போனில் என்னிடம் பேசி வந்தார்.
கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி கப்பலில் குற்றச் செயல்கள் நடை பெறுகின்றன. இதனை தட்டிக் கேட்டபோது, சிலரால் மிரட்டப்படுவதாக கூறினார். இதையடுத்து, வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு வந்து விடுமாறு நான் கூறினேன். ஆனால் ஒப்பந்தம் முடியாமல் அனுப்ப மாட்டார்கள். ஒப்பந்த காலம் முடிந்த பிறகு வந்து விடுகிறேன் என்று கூறினார்.
கடைசியாக 14-ம் தேதி பேசினார். அதன் பிறகு என்னால் எனது கணவரின் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கிடையில் கடந்த 17-ம் தேதி எனது கணவருடன் பணி புரியும் ஒருவர் என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு எனது கணவர் கப்பலில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது கப்பல் வெகு தொலைவில் இருப்பதால் ஜூலை 20-ந்தேதி தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு வரும், அங்கிருந்து 4 நாட்களில் அசோகன் உடன் மும்பைக்கு வந்தடையும். பின்னர் அங்கு வந்து உடலை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
இதைக் கேட்ட நான் அதிர்ச்சியடைந்து, அவர் எப்படி உயிரிழந்தார் என கேட்டபோது இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையில், கடந்த 23-ந்தேதி மும்பையை சேர்ந்த சாந்த குமார் என்பவர், எங்கள் கிராமத்துக்கு வந்து எனது கணவரை பற்றி விசாரித்து விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால், என்னிடம் எந்த விசாரணையும் நடத்த வில்லை. எனவே, எனது கணவர் மரணத்தில் நிறைய சந்தேகங்கள் உள்ளன.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழையல்ல. கப்பலில் நடக்கும் தவறுகள் பற்றி அவர் என்னிடம் பேசியுள்ள ஆடியோஆதாரம் உள்ளது.
அதன்படி பார்த்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே எனது கணவர் மரணத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எனது கணவர் உடலை விரைவாக கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கலெக்டர் ராமன் மூலம் இந்திய தூதரகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் மூலம் அசோகனின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை சொந்த ஊருக்கு உடல் கொண்டு வரப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மேலாளர் சுஜய் தலைமையில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் குறித்த சொற்பொழிவு, கவிதை, பாடல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படைத்தனர். முடிவில் அதில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பத்தூர் நேஷனல் கேட்டரிங் சமுதாயக்கல்லூரியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி நினைவு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜோதிராஜா வரவேற்றார். பின்னர் ‘கலாம் இறக்கவில்லை, சற்று இளைப்பாறுகிறார்’ என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் கலாமின் சாதனைகளை விளக்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மலேசியவாழ் தமிழர்கள் காயத்ரி, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளிச் செயலாளர் குணாளன் நன்றி கூறினார்.
தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பஞ்சு தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ‘மாமனிதர் அப்துல்கலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி செயலாளர் கார்த்திக், முதன்மை முதல்வர் நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் மாணவர்கள் அப்துல்கலாம் வேடமணிந்தும், அவரது முகமூடி அணிந்தும் வந்தனர்.
சிவகங்கை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் உள்ள நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக சென்ற டி.டிவி தினகரனுக்கு மாவட்ட கழகம் சார்பில் மணலூர், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை போன்ற சிவகங்கை மாவட்ட எல்கையில் இருந்து மாவட்ட முடிவு வரை பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் உமாதேவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரியப்பன்கென்னடி மாவட்ட துணை செயலாளர் மேப்பல்ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் சக்தி, இளைஞரணி இணைச் செயலாளர் இறகு சேரிமுருகன் வக்கீல் பிரிவு இணை செயலாளர் அன்பரசன் பாசறை இணைசெயலாளர் அந்தோணிராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் தேர்போகிபாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் மந்தகாளை, தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி.முத்து, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் அண்ணாமலை, விவசாய பிரிவு இணை செயலாளர்அர்ச்சுணன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் கார்த்திகைசாமி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், நகர செயலாளர் அன்புமணி, தொகுதி செயலாளர் மகேஷ் மற்றும் நகர, ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் சார்பில் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது.
காரைக்குடி:
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. செய்யாத்துரை மற்றும் அவரது மகனின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் செய்யாத் துரையின் மகன் நாகராஜின் நண்பர் கிருஷ்ணன் என்பவரது வீடு காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு 4-வது வீதியில் உள்ளது.
இங்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித் துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது கிருஷ்ணனின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #ITRaid #SPK
காரைக்குடி பாண்டியன் திடலில் 21-ம் ஆண்டு கலைஞர் தமிழ்ச்சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கலைஞர் தமிழ்ச்சங்க புலவர் தொழில் அதிபர் படிக்காசு முன்னிலை வகித்தார். சங்க நிறுவுனரும், முன்னாள் அமைச்சருமான தென்னவன் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ரகுபதி வாழ்த்துரை வழங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராஜா, நகைச்சுவை பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆ.ராசா தனது சிறப்புரையில் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கலைஞரின் அரசியலோடு இலக்கியமும் எப்போதும் இணைந்தே இருக்கும். தந்தை பெரியார், கலைஞரின் இலக்கிய ஆற்றலை கண்டு வியந்து பாராட்டியுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் 50 ஆண்டுகாலமாக தனது ஆளுமையை நிலை நாட்டி வருபவர் கலைஞர். பெண்களுக்கு சொத்துரிமை, பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது உள்பட பல்வேறு புரட்சிகரமான திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர். இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் நிறைவேற்ற தயங்கிய சட்டங்களை துணிச்சலாக நிறைவேற்றியவர் கருணாநிதி.
தற்போதுள்ள மாநில அரசு ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், குட்கா ஊழல், சமீபத்தில் ஆளுவோருக்கு வேண்டியவர்களான காண்டிராக்டர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். மத்தியில் மதவெறி கொண்ட ஆட்சியும், மாநிலத்தில் மக்களை பற்றி சிறிதும் சிந்திக்காத ஆட்சியும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் விழாவில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார். இந்த விழாவில் மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் கரு.அசோகன், நகர அவைத்தலைவர் ராகோ அரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுப.சின்னத்துரை, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், கல்லல் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். #ARaja #DMK






