search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Officers Investigation"

    செய்யாத்துரை மகனின் நண்பர் வீட்டில் சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித்துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். #ITRaid #SPK

    காரைக்குடி:

    நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் வரி ஏய்ப்பு மோசடி செய்ததாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரது வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. செய்யாத்துரை மற்றும் அவரது மகனின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் செய்யாத் துரையின் மகன் நாகராஜின் நண்பர் கிருஷ்ணன் என்பவரது வீடு காரைக்குடி சுப்பிரமணியபுரம் தெற்கு 4-வது வீதியில் உள்ளது.

    இங்கு சோதனை நடத்துவதற்காக இன்று காலை சென்னை வருமான வரித் துறை இணை இயக்குநர் தலைமையில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது கிருஷ்ணனின் வீடு பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் திரும்பிச்சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #ITRaid #SPK

    அருப்புக்கோட்டையில் வருமான வரித்துறையினரின் சோதனையில் செய்யாத்துரை வீடு மற்றும் அலுவலகங்களில் ரூ.450 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #ITRaid #SPK

    மதுரை:

    தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடந்துள்ள வருமான வரி சோதனை அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை தந்த வண்ணம் உள்ளது.

    சாலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை நடத்தி வரும் இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததோடு மட்டுமின்றி பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் சேர்த்து வைத்திருப்பதும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை தலைமை இடமாக கொண்டு சாலை பணி ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. அன்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை அருப்புக்கோட்டை பாலையம் பட்டியை சேர்ந்த செய்யாதுரை மற்றும் அவரது மகன்கள் நாகராஜன், பாலசுப்பிரமணி, கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோர் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

    தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளில் முக்கியமாக திகழும் எஸ்.பி.கே. குழுமம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள், சார்பு நிறுவனங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 200 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

     


    இந்த சோதனையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் வீடு, நிறுவனமும் தப்பவில்லை. சென்னையில் மட்டும் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    கடந்த 16-ந்தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. நேற்று செய்யாத்துரையின் வீட்டில் மட்டும்தான் சோதனை நடந்தது. அது முடிந்ததும் சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    5 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த வருமான வரி சோதனையில் ரூ.183 கோடி பணம் ரொக்கமாக சிக்கியது. சொகுசு கார்களில் இருந்து மட்டும் சுமார் ரூ.45 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே இந்த வருமான வரி சோதனைக்கு “ஆபரே‌ஷன் பார்க்கிங் மணி” என்று அதிகாரிகள் பெயர் சூட்டினார்கள்.

    பணம் மட்டுமின்றி 2 கிலோ தங்க நகைகளும் கிடைத்தன. கணக்கில் வராத 105 கிலோ தங்க கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. இந்த தங்க கட்டிகள் தி.நகர் மற்றும் மயிலாப்பூரில் உள்ள 2 நகை கடைகளில் வாங்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே 5 நாட்கள் சோதனையில் நூற்றுக்கணக்கான ரகசிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். நுற்றுக்கும் மேற்பட்ட பென்டிரைவ்கள், கம்ப்யூட்டர் டிஸ்குகளில் அந்த ஆவணங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

     


    அப்போது பினாமிகள் மூலம் பணப் பரிமாற்றம் நடந்து இருப்பது தெரிய வந்தது. போலி நிறுவனங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரங்களும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.

    இதையடுத்து செய்யாதுரையின் மகன் நாகராஜனை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரித்தனர். சோதனையின்போது சிக்கிய ரொக்கப்பணம், தங்க கட்டிகள் தொடர்பாக செய்யாதுரை, அவரது மகன்களிடம் தனித்தனியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயராகவன், அஜய்ராபின் தலைமையிலான குழுவினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் எஸ்.பி.கே. குழுமம் நடத்திவரும் நூற்பாலை, நட்சத்திர ஓட்டல், கல்குவாரி உள்ளிட்ட நிறுவனங்களில் நடந்த வரி ஏய்ப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் செய்யாத்துரையும் அவரது மகன்களும் கணக்கில் வராத ரூ.450 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றியும் அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    பிறகு அந்த ஆவணங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பெட்டிகளில் வைத்து எடுத்து சென்றனர். அந்த ஆவணங்களை மேலும் ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்போது செய்யாதுரை குடும்பத்தினர் செய்துள்ள வரி ஏய்ப்பு தொடர்பான முழு விவரங்களும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்து சரி பார்க்கப்பட்ட பிறகு இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் விவரம் தெரிய வரும். அவர்களை விசாரணைக்கு அழைக்க வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    செய்யாதுரைக்கும் அவரது மகன்களும் மற்றும் அவரது நிறுவனங்களில் பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளுக்கும் இதற்காக சம்மன் அனுப்பப்படும். விரைவில் இதற்கான பணி தொடங்கும் என்று தெரிகிறது.

     


    எஸ்.பி.கே. நிறுவனங்களில் சோதனை முடிந்ததை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. குழும அலுவலகத்தில் உள்ள அறையில் ஒரே இடத்தில் வைத்தனர். அந்த அறையை வருமானவரித்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.

    சென்னை, அருப்புக்கோட்டை, மதுரை, காரியப்பட்டி பஞ்சாலை, கமுதி அருகே உள்ள கல்குவாரி, கீழமுடிமன்னார்கோட்டையில் உள்ள வீடு உள்பட பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அந்த அறைக்குள் உள்ளது.

    இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணையில் செய்யாதுரையும், அவரது மகன்களும் ஒருவருக்கொருவர் மாறுபாடான முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து இந்த ஆவணங்களை காட்டி விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    விரைவில் இந்த விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது செய்யாதுரைக்கும், அவரது சார்பு நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது முழுமையாக தெரிய வரும். #ITRaid #SPK

    ஒப்பந்த பணிகளை பெற எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து செய்யாத்துரை மகன்கள் 4 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. #ITRaid #SPK
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 65). தொடக்கத்தில் ஆட்டுத்தரகு பார்த்து வந்த இவர், கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முதல்நிலை ஒப்பந்ததாரராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

    இவரது எஸ்.பி.கே. நிறுவனம் தமிழகம் முழுவதும் முக்கிய சாலைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.



    இந்த நிலையில் எஸ்.பி.கே. நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் செய்யாத்துரையின் அலுவலகம், வீடுகள் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    சோதனையின்போது 185 கோடி ரொக்கப்பணம், 105 கிலோ தங்க கட்டிகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் வருமான வரித்துறை வசம் சிக்கின.

    5-வது நாளான இன்றும் அருப்புக்கோட்டையில் தொடர்ந்து சோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. செய்யாத்துரையின் மகன்களான நாகராஜ், பாலசுப்பிரமணியன், ஈஸ்வரன், கருப்பசாமி ஆகியோரது வீடுகளிலும் ஏராளமான நகை, பணம் சிக்கியதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்தை அதிகரித்துள்ளனர்.

    நேற்று மாலை நாகராஜனை சென்னையில் இருந்து அருப்புக்கோட்டை அழைத்து வந்தனர். அதன் பின்னர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன்கள் 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    சாலை ஒப்பந்தப்பணிகள் தொடர்பாகவும் இதற்காக யார் யாருக்கு எவ்வளவு தொகை கைமாறியது? என்பது குறித்தும் கேள்விகள் கேட்டு விசாரித்தனர்.

    விடிய, விடிய நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்துள்ளன.

    மேலும் இந்த சோதனையின் போது ரகசிய சி.டி. ஒன்றும் சிக்கியுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை தகவல் வெளியிடவில்லை என்றாலும் இந்த சி.டி. குறித்து ரகசியமாக பல கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

    இந்த சி.டி.யில் செய்யாத்துரையுடன் தொடர்புடைய அரசியல் புள்ளிகள் பலரது குரல்கள் பதிவாகி உள்ளன. 40-க்கும் மேற்பட்டோரின் உரையாடல்கள் இந்த சி.டி.யில் இடம் பெற்றுள்ளன. அவர் கள் பேசிய உரையாடல்கள் அனைத்தும் பணப்பரிமாற்றம் தொடர்பாக இருந்ததாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்வதற்காக கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டபோது எம்.எல்.ஏ.க்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    எம்.எல்.ஏ.க்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக செய்யாத்துரையிடம் முக்கிய பிரமுகர்கள் பேசியது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அந்த ரகசிய சி.டி.யில் இடம் பெற்றுள்ளதால் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையின் முழு விவரங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் டெல்லி அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து டெல்லியில் இருந்து இன்று அதிகாரிகள் அருப்புக்கோட்டைக்கு வந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    செய்யாத்துரையின் நிறுவனங்களில் ஆடிட்டராக பணி புரிந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட மேலும் சிலரி டமும் அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    செய்யாத்துரையிடம் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் விசாரணை விவரங்கள் அடங்கிய அறிக்கையை வருமான வரித்துறை இணை ஆணையர் ஜெயராகவன் தலைமையில் 8 பேர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    டெல்லி அதிகாரிகள் வருகைக்கு பிறகு செய்யாத் துரை விவகாரத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் செய்யாத் துரையுடன் தொடர்புடைய அமைச்சர்கள், அரசியல் புள்ளிகளுக்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #ITRaid #SPK
    ×