search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "400 year old photos"

    காரைக்குடி அருகே காலத்தால் அழியாத மற்றும் 400 ஆண்டு கால வரலாற்று புகைப்படங்களை நகரத்தார் மாளிகை முழுவதும் வைத்து கண்காட்சி கூடமாக முதியவர் ஒருவர் மாற்றியுள்ளார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ளது கானாடுகாத்தான். இங்குள்ள து.க.தெருவில் வசித்து வருபவர் குப்பன் செட்டியார்(வயது 65). இவர் காரைக்குடியில் உள்ள தபால் நிலையத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக தனது சேகரிப்பின் மூலம் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷ களஞ்சியத்தை தனது வீட்டில் சேகரித்து வருகிறார். எளிதில் கிடைக்கப்பெறாத 400 ஆண்டு கால பழமைவாய்ந்த புகைப்படங்கள், ஓலைச்சுவடி உள்ளிட்டவற்றை காட்சிக்கு வைத்துள்ளார். இதுதவிர இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களின் ஆங்கிலத்தை தமிழர்கள் கற்க பயன்படுத்திய முதல் புத்தகம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன்படுத்திய டைரி, சுதந்திரம் கிடைத்தபோது அவற்றை கொண்டாடிய விதம், ஒருவருக்கொருவர் அனுப்பிய வாழ்த்து அஞ்சல் அட்டை, கலை, இலக்கியம், புராணம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இவரது சேகரிப்பில் அடங்கியுள்ளள. மேலும் மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் தமிழர்கள் தொழில் செய்தபோது அவர்கள் எழுதிய 100 ஆண்டுகள் பழமையான வரவு-செலவு புத்தகம், முதன்முதலில் வெளியான தமிழ், ஆங்கிலம் அகராதி தொகுப்புகள், இதழ்கள் குறித்த விவரங்கள் உள்ளன.

    இதுகுறித்து குப்பன் செட்டியார் கூறியதாவது:- கானாடுகாத்தான் பகுதியில் உள்ள இந்த நகரத்தார் வீட்டை வாடகைக்கு எடுத்து இதில் கடந்த 40 ஆண்டுகாலமாக அரிய வகை பொக்கிஷங்களை சேகரித்து வருகிறேன். மழைநீர் சேகரிப்பு முற்றம் தோற்றம் உள்ள இந்த பிரமாண்ட வீட்டின் உள்பகுதியில் 2 பெரிய அரங்கு மற்றும் ஒரு பெரிய அரங்கு முழுவதும் சேகரிக்கப்பட்ட அரிய வகை புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை வரிசைப்படுத்தி கண்காட்சிக்காக வைத்துள்ளேன். இதில் முக்கியமாக கடந்த 1884-ம் ஆண்டு நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் பயன்படுத்திய தபால் தலைகள், லண்டன் ராணி பயன்படுத்திய தபால் தலைகள், பண்டைய இயல், இசை, நாடகம் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம், 400 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருவிளையாடல் புராணம், 120 வருடத்திற்கு முன்பு நமது தமிழர்கள் பயன்படுத்திய பனை ஓலையால் ஆன அரிச்சுவடிகள், பண்டைய காலத்தில் தமிழர்களின் திருமணம் குறித்த தகவல்கள் உள்ளன. இதுதவிர கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் புகைப்படம் எடுத்த நெல்லை நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில், திருவாரூர் தேரோட்டம், குற்றாலம் அருவிகள், சென்னை எழும்பூர் ரெயில் நிலையம், மெரினா பீச், மவுண்ட் ரோடு, ஐகோர்ட்டு கட்டிடம் உள்ளிட்ட அரிய வகை புகைப்படங்களும் உள்ளன.

    மேலும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கிறிஸ்த ஆலயங்களின் புகைப்படங்கள், உலக அளவில் காணப்பட்ட பறவைகள் குறித்த படங்கள், கடந்த 1800-ம் ஆண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் எழுதிய சுதந்திர போராட்டம் குறித்த டைரிகள், புகைப்படங்கள், இந்திய ராணுவத்திற்கு அப்போதே சுமார் ரூ.2 லட்சம் வரை அதிக அளவில் பண உதவி செய்த தமிழர்கள் குறித்த தகவல்கள், தமிழர்கள் வெளிநாட்டில் செய்த வாணிபம், இன்று அழைக்கப்படும் வியட்நாம் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் உள்ளன. மேலும் கடந்த 1900-ம் ஆண்டு முதல் 1923-ம் ஆண்டு வரை காரைக்குடியில் தயாரிக்கப்பட்ட அப்போதைய சொகுசு கார்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×