என் மலர்tooltip icon

    சிவகங்கை

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை சிவகங்கை வருகிறார்.
    தேவகோட்டை:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நாளை (29-ந் தேதி) சிவகங்கை வருகிறார்.

    காளையார்கோவிலில் கட்சி பிரமுகரின் இல்லத் திருமண விழாவை நடத்தி வைக்கும் தினகரன் பின்னர் பனங்குடி, சொக்கநாதபுரம், செம்பனூர், ஆலங்குடி, மானகிரி ஆகிய பகுதிகளில் நடைபெறும் கொடியேற்று விழாக்களிலும் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து தேவகோட்டையில் வடக்கு ஒன்றியம், முள்ளிக்குண்டு ஆகிய இடங்களில் கட்சிக் கொடி ஏற்றுகிறார். சாத்தான்கோட்டையில் கட்சி பிரமுகரின் இல்ல விழாவில் பங்கேற்கிறார்.

    இறகுசேரியில் குமார் இல்ல புதுமனை விழாவில் பங்கேற்கும் தினகரன் பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா ஆகியோர் வீடுகளுக்கு செல்கிறார்.

    டி.டி.வி. தினகரன் சிவகங்கை மாவட்டம் வருவதையொட்டி அவருக்கு மேள,தாளங்கள் முழங்க பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பு மாவட்டச் செயலாளர் உமாதேவன் தலைமையில் அளிக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை இளைஞரணி இணைச் செயலாளர் முருகன், தேவகோட்டை நகரச் செயலாளர் கமலக்கண்ணன், கண்ணன் குடி ஒன்றியம் சரவண மெய்யப்பன் என்ற கார்த்திக், இறகு சேரி குமார், தமிழ்குமரன், கண்ணன், நிலவழகன், செந்தில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    சிவகங்கை அருகே விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது 38). இவர் சிவகங்கையில் உள்ள கட்டிட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    நேற்று மாலை வேலை முடிந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். செய்களத்தூர் விலக்கில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் முகமது இஸ்மாயில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    காரைக்குடியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி ரெயில்வே குட்செட் தெருவை சேர்ந்தவர் போதும்பொன்னு. இவரது மகள் சரண்யா (வயது 18). இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார்.

    வீட்டில் இருந்து சென்ற மின்வயர் அங்குள்ள முள் செடியின் மீது கிடந்தது. இதை அறியாத சரண்யா குளித்து விட்டு தனது துணிகளை அதன்மீது காயப் போட்டார். அப்போது எதிர்பாராத வீதமாக மின்சாரம் தாக்கியது. இதில் சரண்யா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்து சரண்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை அருகே ஐஸ் கம்பெனி உரிமையாளர் மர்மமாக இறந்து கிடந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தேவகோட்டை:

    தேவகோட்டையை அடுத்த கருதாஊரணி அருகே உள்ள டியூரைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 50). அந்த பகுதியில் ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார். வேலை முடிந்ததும் ஐஸ் கம்பெனியிலேயே படுத்துக் கொள்வார்.

    இன்று அதிகாலை 4 மணி அளவில் ஐஸ் வாங்குவதற்காக வியாபாரிகள் 4 பேர் வந்தனர். அவர்கள் கம்பெனிக்குள் சென்று சின்னச்சாமியை அழைத்தனர். பதில் ஏதும் இல்லை. அங்குள்ள அறையில் சின்னச்சாமி அசைவின்றி கிடந்தார்.

    சந்தேகமடைந்த வியாபாரிகள் அங்குள்ள கடைக்காரர்களை அழைத்து வந்தனர். அவர்கள் உடனே 108ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பரிசோதித்து விட்டு சின்னச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் சின்னச்சாமியின் உறவினர்கள் அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சின்னச்சாமியை பரிசோதித்த டாக்டர்களும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    எனவே சின்னச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் சின்னச்சாமியின் சாவில் மர்மம் உள்ளதாக தேவகோட்டை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு மணல் குவாரி செயல்படாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அரசு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மானாமதுரை பகுதியில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் கடந்த 13-ந்தேதி தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் குவாரி தொடங்கப்பட்டது. அப்போது 13 லாரிகளில் மணல் அள்ளி பொதுப்பணித்துறை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் குவாரியில் மின் இணைப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது குவாரியில் மணல் அள்ளி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை சார்பில் குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. இதில் லாரிகள் உள்ளே வரும் பாதை, வெளியே செல்லும் பாதை, குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையில் பதிவு செய்யப்பட்ட லாரிகளில் மட்டும் மணல் ஏற்றப்படும். மணல் ஏற்றப்பட்ட லாரி ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுப்பணித்துறை குடோனில் இருந்து மணல் ஏற்றுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 4 ஆயிரத்து 700 லாரிகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சிவகங்கை அருகே காயாங்குளம் பொதுப்பணித்துறை குடோன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.

    குவாரி அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குவாரியில் இருந்து வெளியே செல்லும் லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்காணிக்க முடியும். குவாரியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவை சென்னையில் இருந்து இயக்கி கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 
    வைகையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு பூர்வீக பாசன பகுதியாக உள்ள மானா மதுரைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி பூர்வீக வைகை பாசன பகுதியாகும். மழை பெய்து வைகை ஆற்றில் தண்ணீர் வெள்ளம்போல் வரும்போது தான் கண்மாய்களில் தண்ணீரை தேக்க முடியும்.

    வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட மானாமதுரை பகுதி வந்து சேரவில்லை.

    வைகையில் வரும் தண்ணீரை நம்பி இடைக் காட்டூர், கட்டிகுளம், கீழப்பசலை ஆகிய கிராம விவசாயிகள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தண்ணீர் வருகைக்காக காத்து இருக்கின்றனர்.

    வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர மானாமதுரை நகர் பகுதியில் உள்ள ஆதனூர் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதை சுற்றியும் வைகை ஆற்றிலும் சீமை கருவேல் மரங்களை அகற்றாததால் வறண்டு தடுப்பணை கட்டியும் வீணாக உள்ளது.

    குடிநீர் திட்டங்களில் உள்ள நீர் ஊற்றுகளும் வறண்டதால் மானாமதுரை பகுதியில் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வைகையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு பூர்வீக பாசன பகுதியாக உள்ள மானா மதுரைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ரூ.25 லட்சம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக கலெக்டர் லதா கூறியுள்ளார். #keralafloods
    சிவகங்கை:

    கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அனைத்து பகுதிகளில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வசதியாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், கொடையாளர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட உணவு தானியங்கள், மருந்து பொருட்கள், போர்வை, ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் என ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் தலைமையில் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட வழங்கல் அதிகாரி ராம்பிரதீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் லதா தெரிவித்துள்ளார். #keralafloods
    சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    சிவகங்கை:

    சிவகங்கை வட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டம், அதன் தலைவர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் இக்னேசியஸ் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். இந்த கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மெய்யப்பன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் வடிவேலு, வட்ட பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், மாதந்தோறும் மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும், பண்டிகை முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய வேண்டும், மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டிக்கு அகல ரெயில் பாதை அமைக்க வேண்டும், சென்னை-ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கருப்பையா நன்றி கூறினார்.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 7 லட்சத்து 55 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் லதா தெரிவித்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த வாணியங்குடி ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் லதா தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மண் பரிசோதனை செய்து விவசாய பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மூலமாக வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மூலம் மண்வள அட்டை வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் அதிக லாபம் பெற மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் வகைகளை பயிரிட வேண்டும். இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் 2015-16-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, அதாவது கடந்த 4 ஆண்டுகளில் மாவட்டத்தில் மொத்தம் 7 லட்சத்து 55 ஆயிரத்து 653 விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்காக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி அலுவலர்களின் ஆலோசனைப்படி விவசாயப் பணிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தப்பட்டதால் பயணிகளிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகர் மற்றும் புறநகர் போக்குவரத்து கிளைகளில் இருந்து அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்தின் திருமயம் தாலுகாவில் உள்ள சில ஊர்களுக்கும், அதே போன்று புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் மற்றும் அதன் அருகில் உள்ள சில ஊர்களுக்கும் நாள்தோறும் இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் ஏம்பலுக்கு இயக்கப்பட்டு வந்த 2ஏ மற்றும் 2பி ஆகிய நகரப் பேருந்துகளும், அதே போல் ஏம்பல் வழியாக மணமேல்குடிக்கு இயக்கப்பட்டு வந்த புறநகர் பேருந்தும் நிறுத்தப்பட்டு விட்டது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்களும் மாணவர்களும் காரைக்குடி கிளை மேலாளர் மற்றும் அலுவலகத்தினரை தொடர்பு கொண்டு பல முறை கோரிக்கைகள் வைத்தும் மனுக்கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களில் வசிக்கும் எங்களுக்கு ஒரு அத்தியாவசிய தேவை அல்லது முதல் உதவி மருத்துவம் என்றால் கூட அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட பகுதியான ஏம்பலுக்கு சென்றுதான் எங்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

    மேலும் அங்கு உள்ளவர்கள் மருத்துவம் உள்பட அனைத்து வசதிகளுக்காகவும் காரைக்குடிக்குதான் வரவேண்டிய சூல்நிலை உள்ளது.

    ஏம்பல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் காரைக்குடி வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு இரண்டு மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் இயக்கப்பட்டு வந்த பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    மேலும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாள்தோறும் சிறு சிறு விபத்துக்களும் அதிகரித்து வருகிறது.

    எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்து வழித்தடத்தை மீண்டும் தொடங்கவும், அதேபோல் காரைக்குடியில் இருந்து ஏம்பலுக்கு ஜெயங்கொண்டான் வழித்தடத்தில் புதிய நகரப்பேருந்து இயக்க வழியுறுத்தியும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    வெள்ளத்தில் பாதிப்படைந்த கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை தாராளமாக வழங்குங்கள் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் லதா வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை கலெக்டர் லதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரணம் வழங்கலாம்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிட ஏதுவாக சிவகங்கை மாவட்டத்திலுள்ள கொடையாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஆகியோரிடம் நிதியுதவி, உணவு தானியப் பொருட்கள், மருத்துவப்பொருட்கள் மற்றும் ஆடைகள் பெறப்படுகின்றன.

    கொடுக்கக்கூடிய நபர்கள் தாராளமாக முன்வந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகத்தில் வழங்கலாம்.

    மேலும் தகவல் தெரிவிக்க கைப்பேசி எண்: 9445008149 மற்றும் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுத்தம் செய்யப்படாததை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளயில் 850-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    பள்ளி கழிவறையை மாத கணக்கில் சுத்தம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் கழிவறையில் நேப்கின் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது.

    இதனைக் கண்டித்து மாணவிகளின் பெற்றோர் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி தலைமை ஆசிரியை ஷெலினா அங்கு இல்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாணவிகள் கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளது. கழிவறையை தினமும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×