என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள அ.தெக்கூர் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை(என்.சி.சி.) மாணவர்களுக்கு மலையேற்ற பயிற்சி, சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலையில் நடைபெற்றது. இதில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 100 மாணவர்கள், தேசிய படை அதிகாரி வடிவேல் தலைமையில் மலையேற்ற பயிற்சியை மேற்கொண்டனர்.

    இந்த பயிற்சி குறித்து மாணவர்களுக்கு தேசிய மாணவர் படை 9-வது பேரணி ஹவில்தார் சஞ்சீவிகுமார் விளக்கம் அளித்தார்.

    பின்னர் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையை மாணவர்கள் கடந்து சென்று, அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் காடுகளின் அவசியம் மற்றும் அவற்றை பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் மரம் நடுதல் அவசியம் குறித்தும், தூய்மை இந்தியா திட்டம் குறித்தும் விளக்கினார்.

    அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பல பேரிடம் ரூ.16 1/2 லட்சம் வரை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். #arrest

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள நவரத்தினநகரைச் சேர்ந்தவர் பீட்டர் (வயது 68). இவரது மருமகளுக்கு அரசு ஊடகத்துறையில் எழுத்தர் வேலை வாங்கித்தருவதாக, அதே பகுதியில் உள்ள பாரி நகரைச் சேர்ந்த சண்முகநாதன் (54) என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்கு பணம் தேவை என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய பீட்டர் பல்வேறு தவணைகளில் சண்முகநாதனுக்கு ரூ.6 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.

    இதே போல் காரைக்குடியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் மகனுக்கும் கால்நடைத்துறையில் உதவியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி சண்முகநாதன் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.

    2 பேரிடமும் ரூ.9 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர வில்லை.

    சண்முகநாதன் இதே போல் கார் வாங்கி 2-வது நபருக்கு விற்பனை செய்து பல லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து பீட்டர் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவகி வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தார்.

    அரசு வேலை, கார் வாங்கி மோசடி என ரூ.16 1/2 லட்சம் வரை சண்முகநாதன் மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    மானாமதுரையில் உள்ள வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என பலரும் அவதியடைந்து வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளும், வியாபாரிகளும் பொருட்களை விற்பனை செய்ய கடை அமைப்பார்கள். இதுதவிர மதுரையில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாரச்சந்தையில் கடை அமைத்து வியாபாரம் செய்வார்கள். காய்கறிகள் மட்டுமின்றி பழங்கள், பலசரக்கு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பூ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைப்பதால் மானாமதுரை நகரில் உள்ள 18 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க வருவார்கள்.

    இந்தநிலையில் மானாமதுரை வாரச்சந்தையில் குடிநீர், கழிப்பறை, போதிய கட்டிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் வாரச்சந்தையில் கடை அமைத்துள்ள விவசாயிகள் பலரும் நெருக்கடிக்கு இடையே கடை அமைத்துள்ளனர். 300 முதல் 500 கடைகள் வரை வாரச்சந்தையில் உள்ளன. இவற்றிற்கு கட்டிட வசதி கிடையாது. வாருகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் வாரச்சந்தை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. குறிப்பாக சந்தை ஆரமித்த ஆண்டில் இருந்து ஒப்பந்த தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் வாரச்சந்தை மட்டும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக காணப்படுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாரச்சந்தை ரூ.1 கோடி வரைக்கும் ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வருமானம் பேரூராட்சிக்கு கிடைத்தும், வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்யாமல் இருப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. சாலையிலேயே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்துதருவதுடன், வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியும் செய்துதர வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர். 
    லஞ்சம் வாங்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
    சிவகங்கை:

    மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2.5.2011 அன்று தன்னுடைய காரில் காரைக்குடி அருகே உள்ள புதுவயலுக்கு சென்றார். அப்போது கார் பழுதானதால் அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். பின்னர் 10 நாட்கள் கழித்து புதுவயல் சென்று பார்த்தபோது, அந்த காரை சாக்கோட்டை போலீசார் கைப்பற்றி சென்றது தெரிந்தது.

    இதனால் முருகன் அந்த காரை எடுக்க போலீஸ் நிலையம் சென்றபோது, அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனை யடுத்து காமாட்சியிடம் ரசாயனம் தடவிய பணத்தை முருகன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் காமாட்சி மற்றும் போலீஸ்காரர் சிவ முருகன் ஆகியோரை கைதுசெய்தனர்.

    மேலும் இதுதொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட காமாட்சிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிவமுருகன் விடுதலை செய்யப்பட்டார். 
    வெளிநாட்டில் இறந்துபோன கணவரின் உடலை மீட்டு தரக்கோரி கலெக்டர் மற்றும் எம்.பி.யிடம் பெண் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை வள்ளிசந்திர நகரை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது 44). இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு சுபாஷினி(15), கார்த்திகை செல்வி(13) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நாகரத்தினம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஜமாமில் நக்மோர் என்ற இடத்தில் டிரைவராக வேலைக்கு சென்றார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி அங்கு நடந்த விபத்தில் நாகரத்தினம் இறந்துள்ளார். இந்தநிலையில் அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப பணம் கட்ட வேண்டும் என்ற கூறியுள்ளனர். ஏற்கனவே மிகவும் வறுமையான நிலையில் இருக்கும் செல்வராணி, வெளிநாட்டில் இறந்துபோன கணவரின் உடலை ஊருக்கு கொண்டு வரமுடியாத நிலையில் தவித்து வருகிறார்.

    இதனையடுத்து வெளிநாட்டில் இறந்த தனது கணவர் உடலை மீட்டு தரக்கோரி மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் கணவர் உடலை மீட்க முடியாமல் செல்வராணி பெரிதும் அவதியடைந்து வருகிறார்.

    இதற்கிடையில் நேற்று அவர் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். மேலும் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதனிடமும் தனது கணவர் உடலை ஊருக்கு கொண்டு வர உதவிடும்படி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
    திருப்பத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும், பிரிமிய தொகையின் மீதும், தாமத கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும், காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான கால அளவை 2 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும், லாபம் ஈட்டும் நிறுவனங்களில் மட்டும் எல்.ஐ.சி. நிதியை முதலீடு செய்ய வேண்டும், ஐ.ஆர்.டி.ஏ. நிர்ணயித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க துணைத்தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் வீரப்பன், மாவட்ட செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார். இதனைத்தொடர்ந்து 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்றும், எல்.ஐ.சி. வாரவிழாவை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். 
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர்.
    சிவகங்கை:

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட 11 ஆயிரத்து 751 பெண்கள் அதிகமாக உள்ளனர்.

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை தாசில்தார் ராஜா மற்றும் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஆனந்தன், தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் பெரோஸ்காந்தி, பா.ஜ.க. இளைஞரணி தலைவர் நாகேசுவரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    பின்னர் நடந்த நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட, அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 5 லட்சத்து 45 ஆயிரத்து 300 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 57 ஆயிரத்து 51 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 48 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 2 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியல் படி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட 11 ஆயிரத்து 751 பெண்கள் அதிகமாக உள்ளனர். 
    தபால்துறை மூலம் வங்கி சேவை திட்டம் இன்று முதல் தொடங்குகிறது என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    தபால்துறை மூலம் வங்கி சேவை திட்டம் இன்று முதல் தொடங்குகிறது என சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை இன்று(சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த வங்கி சேவை முதல் கட்டமாக நாடு முழுவதும் 650 கிளைகளில் தொடங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4 தலைமை தபால் நிலையங்கள், 79 துணை தபால் நிலையங்கள், 232 கிளை தபால் நிலையங்கள் உள்ளன. இதில் சிவகங்கை அஞ்சலக கோட்டத்தில் உள்ள மானாமதுரை, ராஜகம்பீரம், மேலப்பிடாவூர், சவேரியார்பட்டிணம் மற்றும் செய்களத்தூர் ஆகிய 5 இடங்களில் புதிய வங்கி சேவை இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.

    இந்த வங்கி சேவையில் புதிய கணக்கு தொடங்குவதற்கு வைப்புத்தொகை, படிவங்கள் எதுவும் தேவையில்லை. ஆதார் எண் மற்றும் செல்போன் எண் இருந்தால் போதும். குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க தேவை இல்லை. அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கணக்கில் இருக்கும் இருப்பு தொகைக்கேற்ப 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் சிறு,குறு தொழில் உள்பட எந்த ஒரு தொழிலுக்கும் நடப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

    இந்த வங்கி சேவை அனைத்து மக்களுக்கும் ஏற்ற வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கியூ.ஆர். கோடு கொண்ட அட்டை வாயிலாக கணக்கு செயல்படுத்தப்பட்டு அனைத்து பரிவர்த்தனைகளும் கைவிரல் ரேகை வாயிலாக செயல்படுத்தப்படும். மேலும் அந்தந்த பகுதி தபால்காரர்கள் உங்கள் வீட்டுக்கே வந்து வங்கி சேவை அளிப்பார்கள். மேலும் இந்தியாவின் எந்தவொரு வங்கி கணக்கிற்கு எந்த நேரத்திலும் பணம் செலுத்தவும், பெறவும் முடியும்.

    இதுதவிர மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், காப்பீடு பிரீமியம் தொகை போன்ற பல்வேறு சேவைகளுக்கு இந்த வங்கி கணக்கின் மூலம் பணம் செலுத்த முடியும்.

    அஞ்சல்துறையின் அனைத்து சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு தங்களுடைய கணக்கின் மூலம் எளியமுறையில் பணம் செலுத்தலாம். விரைவில் அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த வங்கி சேவையானது இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவுபடுத்தப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதன் தொடக்க விழா மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் உடனிருந்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் பெரியகருப்பன், கே.ஆர். ராமசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 
    சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து முதல்நிலை பரிசோதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது.
    சிவகங்கை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்திற்கு புதிதாக மின்னணு வாக்கு பதிவு எந்திரம் வந்துள்ளது. இந்த எந்திரம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல்நிலை பரிசோதனை செயல் விளக்கம் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    பெங்களூரு பெல் நிறுவனத்திலிருந்து பொறியாளர் துபே தலைமையில் வந்த பொறியாளர்கள் குழுவினர் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.

    அதன் பின்னர் கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்திற்கு பெங்களூருவில் இருந்து 3 ஆயிரத்து 310 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 1800 மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1800 வாக்காளர்களின் வாக்குப்பதிவு குறித்த விவரத்தை தெரிவது குறித்த எந்திரம் ஆகியவை புதிதாக வந்துள்ளது. இந்த எந்திரங்கள் முழுவதும் சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த மின்னணு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த முதல் நிலை பரிசோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி 20 நாட்கள் நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மின்னணு எந்திர பராமரிப்பு அலுவலர் ராமபிரதீபன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரமேஷ், சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்று டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #Thiruparankundramconstituency

    தேவகோட்டை:

    தேவகோட்டையில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வினர் எங்களை வில்லன் என்று கூறுகின்றனர். பின்னர் எப்படி நாங்கள் அவர்களுடன் பேசமுடியும். அவர்கள் யாரும் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அமைச்சர்கள் யாரும் வரமாட்டார்கள்.

    பொதுச்செயலாளருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்தவர்கள் வரமாட்டார்கள். தொண்டர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள் வருவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் எங்கள் பக்கம் அவர்கள் வந்து விடுவார்கள்.

    தமிழகம் முழுவதும் எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து ஒரே கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை வேறு கூட்டங்களுக்கு அழைத்து செல்கிறார்கள் என்று உளவுத்துறை தவறான தகவல்களை கூறி வருகின்றனர்.

    சர்க்கஸ் கூடாரம் போன்று மக்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டுவது என்பது அவர்களின் ஆசையாக இருக்கும். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னை அ.தி.மு.வின் வில்லன் என்று கூறுகிறார். எனது போட்டோவையும், அவரது போட்டோ வையும் வைத்து ஒப்பிட்டு பாருங்கள். இதில் யார் முகம் வில்லன் மாதிரி இருக்கிறது என்று தெரியும்.


    இடைத்தேர்தல் வரும் போது மட்டுமே யாருடன் கூட்டணி வைப்பது என்பது தெரியவரும். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு சென்று கலைஞரின் நினைவிடத்தை அண்ணா நினைவிடம் அருகில் அமைக்க வேண்டும் என்று கேட்டதே தவறு. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது இதே மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜருக்கு இடம் இல்லை என்று கூறினார்.

    பின்னர் எப்படி கருணாநிதிக்கு இடம் கொடுப்பார்கள். இருந்தும் ஸ்டாலின் தனது குடும்பத்தோடு எடப்பாடி பழனிசாமியிடம் கருணாநிதிக்கு இடம் கேட்டது தலைமை பண்பான செயல் அல்ல.

    எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெறும். வருகிற பாராளுமன்ற தேர்தலோடு, சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருக்கோஷ்டியூரில் அலுவலக நேரத்தை நீட்டிக்க கோரி வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருக்கோஷ்டியூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் இந்த வங்கி மட்டுமே இருப்பதால் திருக்கோஷ்டியூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் இங்கு கணக்கு வைத்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த வங்கியினை மாற்ற முயற்சித்தபோது மக்கள் போராட்டத்தின் மூலம் மாற்றம் கைவிடப்பட்டது.

     தற்போது வங்கி கிளையில் அலுவலக நேரம் குறைக்கப்பட்டு, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்று துண்டு பிரசுரம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனை செய்யமுடியாமல் அவதியடைந்தனர். மேலும் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் 200–க்கும் மேற்பட்டோர், வழக்கம் போல் அலுவலக நேரத்தை நீட்டிக்க கோரி வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனையடுத்து வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    சிவகங்கையை அடுத்த கோட்டையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த கோட்டையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கவுஸ் முகைதீன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணியின்போது, தமிழகம் முழுவதும் வருகிற 1-1-19 முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது என்றும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் வரும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மேலும் துணிப்பைகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கோட்டையூரில் உள்ள தெற்கு ஊருணியில் பேரூராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். 
    ×