என் மலர்tooltip icon

    சிவகங்கை

    இன்றைய சூழலில் உயர் கல்வி என்பது மாணவர்கள் மிகவும் அவசியமானது என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள அழகப்பச் செட்டியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முருகப்பா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் இளங்கோ வரவேற்று பேசினார். விழாவில் சென்னை ஐ.ஐ.டி. மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ரமேஷ் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேரூரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய சூழலில் மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது மிகவும் அவசியமானது. தற்போதைய வாழ்க்கை முறையில் சாதிக்க வேண்டும் என்றால் உயர்கல்வி தேவை. மாணவர்கள் நீண்ட தொலைநோக்கு சிந்தனையோடு செயல்பட வேண்டும். எனவே அதற்கான இலக்கை நோக்கியே முன்னேற வேண்டும். முடியும் என்ற முனைப்போடு செயல்பட்டு வெற்றியை காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பட்டமளிப்பு விழாவில் 328 பி.இ. மாணவ-மாணவிகளுக்கும், 121 எம்.இ. மாணவ-மாணவிகளுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. முடிவில் துணை முதல்வர் கணேசன் நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். 
    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கண்ணுக்கான புதிய சிகிச்சை மையங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய சிகிச்சை மையங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் திறப்பு விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு பி.ஆர்.செந்தில் நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி புதிதாக தொடங்கப்பட்டுள்ள 14 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு மையம், 25 படுக்கைகள் கொண்ட கண் அறுவை சிகிச்சை பிரிவு மையம், 20 படுக்கைகள் கொண்ட சிறு நீரக அறுவை சிகிச்சை பிரிவு மையம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    அதன்பிறகு அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். ஆனாலும் இங்குள்ள மருத்துவமனையில் மதுரை, சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களுக்கு ஈடாக நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரியாறு பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா, உறைவிட டாக்டர் மகேந்திரன், நிலைய அலுவலர் குழந்தை ஆனந்தன், துணை நிலை அலுவலர் ராஜராஜன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மேலும் 26 பேருக்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் எந்திரங்களையும் அவர் வழங்கினார். 
    சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது 29). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லெட்சுமியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    திருப்புவனம் அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலையாரியை லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மணல் கடத்தல் தொடர்பாக மேலும் 10 பேர் சிக்கினர்.
    திருப்புவனம்:

    திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது கொத்தன்குளம் கிராமம். இங்குள்ள கண்மாயின் கரையை சேதப்படுத்தி மணல் அள்ளுவதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த சில நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். உடனே தலையாரி மலைச்சாமி அந்த லாரிகளை நிறுத்த முயன்றார். அப்போது அவர் மீது லாரியை மோதுவது போல் சென்றனர். இதில் நிலை தடுமாறி தலையாரி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் திருப்பாச்சேத்தி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த காளஸ்வரன், ரவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து காளஸ்வரனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    பூவந்தி அருகே திருப்புவனம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி வந்த 4 லாரிகளை அதிகாரிகள் பிடித்து தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக லாரி உரிமையாளர்களான திருச்சியைச் சேர்ந்த சரவணன், சிவச்சந்திரன், சங்கர், தர்மர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோல் திருப்புவனத்தை அடுத்த மணலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 லாரிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் ராஜா, பூமி ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி அருகே கொத்தரிவிலக்கு பகுதியில் பள்ளத்தூர் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் மறித்து சோதனை செய்தனர். இதில் மேட்டுக் குடிப்பட்டியைச் சேர்ந்த சந்திரன் (வயது 30) என்பவர் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. சந்திரன் கைது செய்யப்பட்டார்.
    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். #VinayagarChathurthi #GaneshChathurthi
    திருப்பத்தூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    தேரோட்ட திருவிழாவையொட்டி விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    10-ம் நாளான இன்று காலை கோவில் எதிரே உள்ள குளத்தில் விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதன் பின்னர் கற்பக விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

    இன்று இரவு 11 மணிக்கு ஐம்பெரும் தீர்த்தங்கள் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் விநாயகரை தரிசிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.  #VinayagarChathurthi #GaneshChathurthi

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றிய தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

    வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின்கீழ் வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடியில் பருப்பு ஆலை அமைக்கும் முறை குறித்த பயிற்சி நடத்தியது.

    வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி உதவி பேராசிரியர் தேன்மொழி கலந்து கொண்டு பருப்பு ஆலை அமைக்கும் முறை பற்றியும், பருப்பு வகைகளில் மதிப்புக் கூட்டுதல் பற்றிய அனைத்து தொழில் நுட்பங்களையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.

    அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரங்கசெல்வி அட்மா திட்டத்தின் மூலம் செயல் படுத்தப்படும் பயிற்சிகள் மற்றும் உழவர் நண்பர்களின் செயல்பாடுகள் பற்றி கூறினார்.

    உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முக பாண்டி, வினோதா உழவன் செயலி மற்றும் ஸ்மார்ட் சிவகங்கை செயலி குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    காரைக்குடி பகுதியில் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 பேரை கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் உள்ள திருச்சி பைபாஸ் சாலையில் குன்றக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற லாரியை நிறுத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பியோடிவிட்டார். இதனைத்தொடர்ந்து லாரியை போலீசார் சோதனையிட்டபோது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று நேமத்தான்பட்டி பகுதியில் செட்டிநாடு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற காளையார்கோவிலை சேர்ந்த திருவளர்செல்வன் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வடக்காத்தான்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் நேமத்தான்பட்டி வழியாக லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை போலீசார் கைதுசெய்து, லாரியை பறிமுதல் செய்தனர். 
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஜே.சி.பி. டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
    திருப்புவனம்:

    மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் முனீசுவரன்(வயது 32). இவர் ஜே.சி.பி. டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை பூவந்தியில் இருந்து சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதேபோன்று சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை புதுச்சேரியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் ஓட்டிச் சென்றார். பூவந்தி கீழ்புறம் உள்ள வளைவில் வந்தபோது மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதி விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முனீசுவரன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிந்து லாரி டிரைவர் அருள்ராஜை கைதுசெய்தார். 
    இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் நாளை 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, காலாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தாலுகாக்களில் உள்ள பள்ளிகளில் நடக்க இருந்த காலாண்டு தேர்வுகள் வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார். 
    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் தயாராக உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். #TTVDhinakaran
    காரைக்குடி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் காரைக்குடியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு சுங்க வரியை ரத்து செய்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். ஏழை எளிய சாதாரண மக்கள் வாழ வேண்டுமானால் பெட்ரோல் டீசல் விலை குறைய வேண்டும்.

    உலகத்தமிழர்கள் அனைவரும் பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை ஆவலுடன் எதிர் பார்த்துள்ளனர். தமிழக கவர்னர் அதை நிறைவேற்ற வேண்டும்.

    தமிழ்நாட்டில் நடப்பது, மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சி நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை. பா.ஜ.க.வுடன், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது தேவையற்ற அரசியல்.

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். 2 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    தொழிலில் நஷ்டம் காரணமாக கடனை செலுத்த முடியாமல் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 28). இவர் பழைய மரங்கள், இரும்பு பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். மேலும் தனது தொழில் தேவைக்காக சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.

    இதற்கிடையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் செந்தில்குமார் தவித்தார்.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    இடைநிற்றல் உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து மேலாண்மையையும் மேற்கொள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘எமிஸ்‘ அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. #EMISCard #GovernmentSchool
    மானாமதுரை:

    தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை கண்டறியும் வகையிலும், பல்வேறு காரணங்களால் இடமாறும் மாணவர்களை எளிதில் மற்ற அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையிலும் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, அந்தந்த பள்ளி தலை மை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 16 இலக்க எண் கொண்ட எமிஸ் அடையாள அட்டை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும் எமிஸ் திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    முதற்கட்டமாக ஆசிரியர் தினத்தன்று பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது. இதேபோன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 76 மாணவ-மாணவிகளுக்கு எமிஸ் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி அடையாள அட்டைகளை வழங்கினார். இதேபோன்று அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறியீடு கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களின் பணியில் சேர்ந்த நாள், பதவி உயர்வு, இதுவரை பணியாற்றிய பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×