என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி காரைக்குடி பகுதியில் செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் செட்டிநாடு பகுதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் காணப்படும் ஆயிரம் ஜன்னல் வீடு, ஆத்தங்குடி மற்றும் கானாடுகாத்தான் பகுதியில் உள்ள அரண்மனை போல் காணப்படும் வீடுகள், ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் டைல்ஸ்கள், பாரம்பரியமிக்க முறையில் கைத்தறி மூலம் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பட்டுப்புடவை மற்றும் சேலைகள், செட்டிநாட்டு உணவு வகைகள் ஆகியவைகள் இதன் பெருமையை உலகிற்கு பறைசாற்றி வருகிறது. இந்த வகையில் மேலும் ஒரு வைரக்கற்களாக இங்கு தயாரிக்கப்படும் இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் வகைகளும் பிரசித்தி பெற்றது.

    பொதுவாக விழாக்காலம், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக இந்த செட்டிநாட்டு பலகாரங்களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வந்து சேரும். இதுதவிர ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின்போதும் இந்த செட்டிநாட்டு பலகாரங்களின் தேவை அதிகரிக்கும். நொறுங்க தின்றால் நூறு வயது என்று அப்போதே நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்களும் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு இந்த பலகாரங்கள் தயாரிக்கும் முறையும் அடங்கி உள்ளது. இங்கு 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட செட்டிநாட்டு தேன்குழல் முறுக்குகள், அதிரசம், மணகோலம், சீடை, தட்டை, கை முறுக்கு, பிரண்டை முறுக்கு, மாவு உருண்டை, காரா பூந்தி, மிக்சர், மைசூர்பாகு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டும் உள்ளதால் தற்போதே இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் ஈடுபட்டுள்ள கோட்டையூரை சேர்ந்த மீனாள்பெரியகருப்பன் ஆச்சி கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகை வர இருப்பதையடுத்து தற்போது இந்த பலகாரங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பலகாரங்கள் தயாரிக்க செக்கு எண்ணெய் பயன்படுத்துவதால் 3 மாதங்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். இந்தாண்டு முன்கூட்டியே பலகாரங்கள் செய்யும் பணியை தொடங்கி உள்ளதால் ஆர்டர்கள் வர தொடங்கி உள்ளது. பலகாரங்களை கடந்தாண்டு போலவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் அவரது உறவினர்கள் வாங்கி அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    சிவகங்கை:

    சிவகங்கை கொட்டக்குடி தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 66). தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவர் நேற்று மதுரை செல்ல திட்டமிட்டு இருந்தார்.

    அதன்படி அதே ஊரை சேர்ந்த தையாபுதீன்(42) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் படமாத்தூர் அருகே வந்தபோது அந்த வழியாக ஒரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த லாரி, மனோகரன் உள்ளிட்ட 2 பேர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மேலும் மோதிய வேகத்தில் அந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மனோகரன் மற்றும் அவரது நண்பர் தையாபுதீன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், தையாபுதீன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் ஜம்சித் (32) காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுதொடர்பாக பூவந்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஜம்சித்தை கைது செய்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் விபத்தில் பலியான தகவல் அறிந்ததும் சிவகங்கை பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் மருத்துவமனைக்கு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சியை சேர்ந்த அரசனிபட்டி கிராமத்தில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி பா. சிதம்பரத்தின் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 5 லட்சத்து 83 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட நாடக மேடை திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மணிமுத்து முன்னிலை வகித்தார். நாடக மேடையை திறந்து வைத்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார்.

    விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கியசாந்தாராணி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், மகளிர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யாகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது :- மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழர்களுக்கு விரோதமான அரசு. நமக்கு சேர வேண்டிய தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது நம்முடைய பணம். நமது ஊரின் வளர்ச்சிக்கு செல்ல வேண்டிய பணம். இதை நிறுத்தி வைத்துக்கொண்டு நமக்கு துரோகம் செய்கின்றனர். நடிகை குஷ்பு 180 டிகிரி அந்தர் பல்டி அடித்துள்ளார். இது சாதாரணமான விஷயம் இல்லை. தமிழக அரசு தொழில் முனைவோர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    இதற்கு முன்பு போட்ட ஒப்பந்தங்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. தேர்தலுக்கு 6 மாதம் முன்பு இதுபோல நாடகங்கள் நடக்கிறது. ஜி.எஸ்.டி. வரியை பொறுத்தவரை அது முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அனைத்து மாநிலங்களுக்கும் வரவேண்டிய பங்கு இதுவரை கிடைக்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமான அரசாக தமிழக அரசு இருந்தும் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை.

    தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம். நடைபெறவுள்ள தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கீழடி, கொந்தகை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளில் மொத்தம் 14 ஆயிரத்து 598 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    கடந்த பிப்ரவரி 19-ந்தேதி 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன. இதில் சூதுபவளம், அகேட், பல வரிசைகள் கொண்ட செங்கல் சுவர், விலங்கின முழு உருவ எலும்புக்கூடு, எடைக்கற்கள், உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள், குழந்தையின் எலும்புக்கூடு, மனித மண்டை ஓடு, மனித முழு உருவ எலும்புக்கூடு, பளபளப்பான செவ்வண்ண பானை, தங்க நாணயம், சீன மண்பாண்ட ஓடு, கத்திகள், சங்கு வளையல்கள், நத்தை ஓடுகள், சுடுமண் உலை உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதியுடன் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன. தொடர்ந்து பொருட்கள் ஆவணப்படுத்துதல் (வரைபடம் தயாரிக்கும்) பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 38 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் அந்தப்பணி பாதிக்கப்பட்டு சுவர்கள் கரைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கீழடி, கொந்தகை பகுதிக்கு வருகை தந்தார். அவரை திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி வரவேற்றார். இரு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார்.

    மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை விளக்கிக் கூறினார். ஏற்கனவே நேற்று முன் தினம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் வந்து பார்வையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.
    காரைக்குடியில் போலீசார் சார்பில் பொதுமக்கள் கொடுத்த புகார்கள் குறித்து நேரடி விசாரணை செய்யப்பட்டது.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் மாவட்ட போலீசாருக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி போலீஸ் நிலையத்திற்கு வந்து பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் குறித்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், மாவட்டம் முழுவதும் ஒரே இடத்தில் வைத்து பொதுமக்களை வரவழைத்து நீண்ட நாள் பிரச்சினைகள், கொடுக்கல்-வாங்கல் பிரச்சினைகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்து இதுநாள் வரை தீர்வாகாமல் இருக்கும் பொதுமக்களை ஒரே இடத்தில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக புகார் மனுக்கள் மேளா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று காரைக்குடி 100அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் புகார் மனுக்கள் குறித்து பொதுமக்களை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அதிகஅளவில் பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை, குடும்ப பிரச்சினையால் கணவன்-மனைவி பிரிந்து வாழ்தல், வரதட்சணை பிரச்சினை, சொத்து பிரச்சினை, வில்லங்க பிரச்சினை, முன்விரோத போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி சமரச தீர்வு காணப்பட்டது.

    மேலும் காரைக்குடி பகுதியில் புகார் கொடுத்த பொதுமக்களின் வீடுகளுக்கே நேரடியாக மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தி பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வை ஏற்படுத்தினர். போலீசாரின் இந்த நேரடி சந்திப்பு பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    மானாமதுரை பகுதியில் புகார் கொடுக்கும் பொதுமக்களின் மனுக்கள் மீது வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் ஆகியோர் ஆலோசனையின் பேரில் மானாமதுரை பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களை போலீஸ் நிலையத்திற்கு வந்து அலையவிடாமல் நேரடியாக அவர்கள் வீடுகளுக்கே சென்று போலீசார் விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் மற்றும் போலீசார் போலீஸ் நிலைத்திற்கு வந்து புகார் கொடுத்த பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசாரின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களின் தரப்பில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக பொதுமக்கள் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.
    சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் வெங்கடகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசு ஒதுக்கீட்டின் படி நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

    அதன்படி பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியினருக்கு, மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியர், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம் பழுதுபார்த்தல், பற்ற வைப்பவர், ஆடை தயாரித்தல், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடல் உதவியாளர் ஆகிய பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் வருகிற அக்டோபர் 16 மற்றும் 17-ந் தேதி நிரப்பப்படஉள்ளது.

    இந்த பிரிவுகளில் சேர விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை சிவகங்கை மற்றும் காரைக்குடியில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இலவசமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து தரப்படும். எனவே மேற்கண்ட தொழில் பிரிவுகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    பா.ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி தமிழகத்தின் 2-வது பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 25 ஆயிரம் வீடுகள் மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    பெரிய ஊராட்சியாகவும், வீடுகள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளதால் இந்த ஊராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது முறையான கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஏதும் இல்லாததால் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஓடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு பரவிய காலகட்டத்தில் முதன் முதலில் இந்த சங்கராபுரம் பகுதியில் இருந்து தான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் தெருக்கள் முழுவதும் சாக்கடை நீர் ஓடும் நிலை இருந்து வருகிறது.

    ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூ.125 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்ட சபையில் அறிவித்து அதற்கான பணிகள் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் சங்கராபுரம் ஊராட்சி பகுதி இடம் பெறாததால் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே தற்போது நடைபெற்று வரும் இந்த பாதாள சாக்கடை திட்ட பணியை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்நிலையில் காரைக்குடி நகர் வளர்ச்சி பாதைக்கு பெரிதும் கை கொடுப்பது இந்த சங்கராபுரம் ஊராட்சியும் ஒன்றாகும். எனவே தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் இனி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் பேசினார்.
    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் முன்னாள் யூனியன் தலைவரும், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருமான மேப்பல் சக்தி தலைமையில் 10 ஆயிரம் பேர் பா.ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி காளையார்கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

    முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் பேசியதாவது:-

    கொரோனா காலக்கட்டத்தில் சுமார் 1 கோடி மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உள்ளோம். தற்போது தமிழகத்தில் மற்ற கட்சிகளில் இருந்தும், பிரபல தொழில் அதிபர்கள், சினிமாவைச் சேர்ந்த பிரமுகர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருவதால், வருகிற சட்டமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று, சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அமருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    கடந்த 6 ஆண்டுகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் சார்பில் இலவசமாக 35 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தீபாவளி பண்டிகை வரை கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சினை மற்றும் அயோத்தி பிரச்சினையை நரேந்திரமோடி தீர்த்து வைத்துள்ளார். ராமர் கோவில் பிரச்சினையில் சரியான முடிவை எடுத்தார்.

    தமிழகத்தில் விவசாய சட்டம் மற்றும் இந்தி மொழி குறித்து மக்களிடம் ஒரு மாயையை தி.மு.க. ஏற்படுத்தி வருகிறது. முதலில் தமிழக மக்கள் இந்தி மொழி படிக்கக்கூடாது என கூறும் தி.மு.க.வினர் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்கட்டும். அதன் பின்னர் தமிழக மக்களிடம் அவர்களின் கருத்தை தெரிவிக்கலாம். மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது.

    வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வால் வெற்றி பெறமுடியாது. பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் இனி ஆட்சியில் அமர முடியும். தி.மு.க. இனி தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது. அதேபோல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆகும் கனவும் பலிக்காது. அ.தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்காக முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மானாமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் மானாமதுரை அண்ணா சிலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்த சோனைபாண்டி, ரவி மீது மோதினார். இதில் ரவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள வழக்காணிகிராமத்தைச் சேர்ந்தவர் பால்கரசு (வயது68). இவர் தலையாரி வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர். இவர் மோட்டார் சைக்கிளில் சாலைக்கிராமம் நோக்கி சென்றுள்ளார். அப்போது கோட்டையூர் பாத்திமா சேம்பர் அருகே நிலை தடுமாறி வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    சிவகங்கை பகுதியில் மணல் கடத்தியதாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை: 

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் உத்தரவின்பேரில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிவகங்கையை அடுத்த தமராக்கி பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து போலீசார் அந்த டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த சக்திவேல் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிவகங்கையை அடுத்த திருவேலன்குடி பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த தேவன் (40), ஈஸ்வரன் (34), சந்தன கருப்பு (55) ஆகிய 3 பேரை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் கைது செய்தார்.

    திருப்பத்தூரை அடுத்த கண்டவராயன்பட்டி பகுதியில் லாரியில் கடத்திவரப்பட்ட மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக முத்துக்குமார் (24), மாணிக்கம் (29), லாரி உரிமையாளர் ஆறுமுகம் (62), டிரைவர் கார்த்திக் (29), வடிவேல் (40) ஆகிய 5 பேர் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். மானாமதுரை அடுத்த ராஜகம்பீரம் பகுதியில் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த 150 யூனிட் மணலை போலீசார் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக மானாமதுரை இன்ஸ்பெக்டர் சேது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் மணல் மற்றும் கிராவல், போன்றவை கடத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வர முடியாது.மேலும் தொடர்ந்து இதுபோல் செயல்படுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மணல் கொள்ளையர்களுக்கு உதவும் போலீஸ் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×