என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கடத்தப்பட்ட மகளை மீட்டு தரக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தந்தை உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த இடைக்காட்டூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). இவருடைய மனைவி கலைச்செல்வி (40). இவர்களுக்கு சினேகா(22) மற்றும் கீர்த்திகா(21) என்ற இரண்டு மகளும், அஜய் (20) என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் சினேகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவருக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. லட்சுமணனின் இரண்டாவது மகளான கீர்த்திகா பி.இ. படித்துள்ளார். கீர்த்திகாவிற்கு வருகிற 26-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 21-ம் தேதி அதே ஊரை சேர்ந்த தினேஷ்குமார் உள்பட சிலர் இரவில் லட்சுமணன் வீட்டில் நுழைந்து மிளகாய் பொடியை தூவி கலைச்செல்வி மற்றும் அஜய் ஆகியோரை தாக்கிவிட்டு கீர்த்திகாவை கடத்தி சென்று விட்டனர்.

    இதில் காயமடைந்த கீர்த்திகாவின் தாய் கலைச்செல்வி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இந்தநிலையில் இதுவரை கீர்த்திகாவை போலீசார் மீட்டு தராததை கண்டித்து கீர்த்திகாவின் தந்தை லட்சுமணன், அக்கா சினேகா மற்றும் மாற்றுத்திறனாளியான மாமா இளையராஜா ஆகிய 3 பேர் நேற்று மதியம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் லட்சுமணன் வைத்து இருந்த தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் 3 பேரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினார்கள். தகவல் அறிந்து சிவகங்கை தாசில்தார் மைலாவதி அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் 26-ந் தேதி கீர்த்திகாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதால் அவரை மீட்டுத் தரவேண்டும் என்றும், இல்லை என்றால் தாங்கள் தீக்குளித்து இறந்து விடுவோம் என்றும் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து அவர்களை சமாதானம் செய்த தாசில்தார் அவர்கள் 3 பேரையும் அங்கிருந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றார்.
    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போரிட்டு, வீரமரணமடைந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் நினைவுதினம் நாளை (அக்டோபர் 24-ந்தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாளை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் மணிமண்டபத்தில் நடைபெறும் 219-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது.

    இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இதையொட்டி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் மருதுபாண்டியர்கள் மணிமண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ஆகியோர் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி, பணிகளை முடுக்கிவிட்டனர்.

    தற்போது மருதுபாண்டியர்கள் மணிமண்டபத்தில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்தும் பணி, வண்ண விளக்குகள் அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. காவல்துறை சார்பில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி, முக்கிய பிரமுகர்கள் காரில் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இதேபோல் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் அக்டோபர் 27-ந்தேதி குருபூஜை விழா நடைபெறும். அன்றைய தினமும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் காளையார்கோவிலுக்கு வந்து அங்குள்ள மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதையடுத்து அங்குள்ள நினைவிடத்திலும் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    50 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பெற்றுவந்த ஊக்க ஊதியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 28-ந்தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.
    சிவகங்கை:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    ஆசிரியர்கள் பணியில் இருந்துகொண்டே பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், 1969-ம் ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி ஒரு ஆசிரியர் தனது பணிக்காலத்தில் தான் பெற்ற உயர் கல்விக்காக அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை கடந்த 50 ஆண்டுகாலமாக பெற்று வந்தனர்.

    இந்தநிலையில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்ட அரசாணையில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10.3.2020 முதல் முன்ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது தமிழகத்தில் ஆரம்பப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை பணியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரதிர்ச்சியையும், பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் 50 ஆண்டு காலமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது நியாயமற்றது. எனவே உடனடியாக இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். மேலும் ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 ஆக குறைத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக வருகிற 28-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வருவாய்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
    சிவகங்கை:

    வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் தர்மராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை உடனடியாக அமல்படுத்தி வருவாய் துறையில் பணிபுரியும் நேரடி நியமன அலுவலர்களுக்கு திருத்திய துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு அமைச்சுப்பணி விதிகளின்படி அனைத்து நேரடி நியமன உதவியாளர்களுக்கும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பயிற்சிகள் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். தகுதி பெற்றுள்ள நபர்களுக்கு காவல்துறை பயிற்சி, நீதித்துறை பயிற்சி போன்ற பயிற்சிகளை எவ்வித சுணக்கமுமின்றி மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    6-வது ஊதியக்குழுவில் நேரடி நியமன வருவாய் உதவியாளர்களுக்கு ரூ.9,300 என்ற ஊதிய விகிதத்திலும், வட்டாட்சியர்களுக்கு ரூ.15,600 என்ற ஊதிய விகிதத்திலும் ஊதிய மறு நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்ற அரசு அலுவலர்களுக்கும் கருணைத்தொகையாக ரூ.2 லட்சம் மற்றும் உயிரிழந்த அரசு அலுவலர்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவை உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் பிரசார இயக்கமும், வருகிற 28-ந்தேதி கலெக்டர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய மானிய நிதிக் குழு மானியத்தை வழங்கக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சிகளுக்கு வழங்கவேண்டிய மாநில நிதிக்குழு மானியம் கடந்த 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணி ஆணைகளை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலையிடுவதை நிறுத்த வேண்டும்.

    பசுமை வீடு மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் பயனாளிகள் ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்பு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தனி அலுவலர் என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி ஆணை வழங்கி கையெழுத்திடுவதை நிறுத்த வேண்டும். 15-வது நிதிக்குழு மானிய நிதியில் அடிப்படை பணிகளை தேர்வு செய்து உடனடியாக பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் மானாமதுரை சண்முகநாதன், திருப்புவனம் ரவி, தேவகோட்டை பழனிவேல் உள்பட மாவட்டம் முழுவதையும் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மாவட்ட ஊரக வளர்ச்சித் முகமைதிட்ட இயக்குனர் வடிவேல் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    பணி பாதுகாப்பு கோரி ஊராட்சி செயலர்கள் சிவகங்கை கலெக்டர்அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி செயலர் சிந்துஜா மீது தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கை திரும்ப பெறக்கோரியும், ஊராட்சி செயலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், ஊராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவருக்கு பதிலாக அவரது குடும்ப ஆண்கள் தலையிடுவதை கண்டித்தும், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுரவ தலைவர் செல்லபாண்டியன், மாவட்ட தலைவர் பாக்கியராஜ், மாவட்ட செயலாளர் ராமநாதன், பொருளாளர் மாரிமுத்து, மாநில இணைச் செயலாளர் ரமேஷ், மாநில துணைச் செயலாளர் நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன், மாவட்ட மகளிரணி செயலாளர் மஞ்சுளா மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்குடி அருகே 4வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக்கோரி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமத்தின் வழியாக செல்லும் மதுரை-காரைக்குடி 4 வழிச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், நாம் தமிழர் கட்சியினர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    அப்போது கிராம மக்கள் கூறியதாவது:- தற்போது அமைக்கப்படும் 4 வழிச் சாலையால் இந்த பகுதியில் 25 வீடுகள் இடிக்கப்படும் நிலை உள்ளது. இதுதவிர கண்மாய்கள், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலையும் உள்ளது. எனவே இந்த 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தேவகோட்டை அருகே நாம் தமிழர்கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தேவகோட்டை:

    மத்திய அரசு விவசாயிகளுக்கும், இந்திய மக்களுக்கும் எதிராக கொண்டுவந்த வேளாண்மை திருத்த சட்டத்தை நீக்கக்கோரி தேவகோட்டை புளியாளில் நாம் தமிழர்கட்சி வடக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் சீமான் குணா, காரைக்குடி பாசறை துணை செயலாளர் சின்னப்பன், அருள்பணி அற்புதராஜ், துணை தலைவர் ஆரோக்கியசாமி, ஒன்றிய செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியசாமி, பிரேம்குமார், மலர்வேந்தன், வினோத் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    காரைக்குடி அருகே பதிவேடுகளை முறையாக சமர்ப்பிக்காததால் கலெக்டர் புகாரின் பேரில் ஊராட்சி செயலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன். இவர் கடந்த மார்ச் மாதம் வரை ஊராட்சியில் பணியாற்றிய ஊராட்சி பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமலும், அலுவலக பதிவேடுகளை முறையாக சமர்பிக்காமல் இருந்ததால் காரைக்குடியை அடுத்த கொத்தமங்கலம் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தொடர்ந்து அந்த ஆவணங்களை சமர்ப்பிக்காமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இவரை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு அதன்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இருப்பினும் சங்கராபுரம் ஊராட்சி அலுவலக பதிவேடுகளை முறையாக சமர்பிக்காமல் மோசடி செய்யும் நோக்கில் இளங்கோவன் நடப்பதாக கூறி மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் அவர் மீது நடவடிக்கை எடுக்க காரைக்குடி வடக்கு போலீசாருக்கு புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரசின் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 70 ஆயிரம் எக்டோ் பரப்பில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்நோக்கும் நெல் பருவத்தை கருத்தில் கொண்டு யூரியா 3,139 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி. 770 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 819 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 1, 879 மெட்ரிக் டன்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த மாத தேவைக்கான உள் ஒதுக்கீடாக 5,625 மெட்ரிக்டன் யூரியா, 1,500 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 790 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 2,200 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அத்துடன் யூரியா 45 கிலோ மூடை ஒன்றிற்கு ரூபாய் 266.50-க்கும், இப்கோ, கிரிப்கோ மற்றும் ஐ.பி.எல்.-ன் டி.ஏ.பி. உரங்கள் 50 கிலோ மூடை ஒன்றிற்கு ரூ.1,200-க்கும், ஐ.பி.எல். பொட்டாஷ் ரூ. 875-க்கும், இப்கோ, கிரிப்கோ மற்றும் ஐ.பி.எல். காம்ப்ளக்ஸ் உரங்கள் ரூ.975-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்றாலோ, வேறு மாவட்டத்திற்கு உரத்தை கடத்தினாலோ, விற்பனை முனைய எந்திரம் மூலம் விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யவில்லை என்றாலோ, உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தேனம்மை ஊருணி மேல்கரை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். அவருடைய மனைவி சிட்டு (வயது 50). இவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்திற்கு வரிவிதிப்பு செய்வதற்காக தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், நகராட்சி வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமி வரி விதிக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சிட்டு வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமியை சந்தித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் வரிவிதிப்பு செய்வேன் என கூறினாராம்.

    இதுதொடர்பாக சிட்டு, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமன்னன் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளரிடம் சிட்டு நேற்று கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த துணை சூப்பிரண்டு மணிமன்னன், இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், குமரவேல், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமுகமது மற்றும் போலீசார் விரைந்து வந்து வருவாய் ஆய்வாளர் வேலுச்சாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் தேவகோட்டை செல்வபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின் வேலுச்சாமியை, சிவகங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    காரைக்குடி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
    காரைக்குடி:

    காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைக்கோட்டை, பாரிநகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை, கோவிலூர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 

    இந்த தகவலை காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    ×