என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடியில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்தவர் பூமாலை (வயது 54). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது காரைக்குடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பலசரக்கு மற்றும் வெள்ளைப்பூண்டு மொத்த வியாபாரம் செய்யும் அருளானந்துசாமி என்பவர் பூமாலை குடும்பத்தினருடன் நெருங்கிப்பழகி, எனது மகனும், மகளும் பிரபல ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறார்கள்.

    அவர்களுக்கு டாக்டர்களிடம் நல்ல பழக்கம் உண்டு. அவர்கள் மூலம் 2 சிறுநீரகத்தையும் மாற்றிவிடலாம். ஆனால் அதற்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பூமாலையும் அவரது குடும்பத்தினர் பலரிடம் கடன் பெற்று வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து ரூ.60 லட்சத்தை அருளானந்துசாமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர் இதுநாள் வரை சிறுநீரகத்திற்கோ, மாற்று அறுவை சிகிச்சைக்கோ எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பூமாலையிடம் வாங்கிய ரூ.60 லட்சத்தையும் திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகவும் தெரியவருகிறது. இதை தொடர்ந்து பூமாலை அவரது நண்பர்கள் மூலமாக அருளானந்துசாமி வீட்டுக்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். அப்போது பூமாலையை ஆபாசமாக பேசி பணத்தை திருப்பி தர முடியாது எனக்கூறி அருளானந்து சாமி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

    இது குறித்து பூமாலை காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணம் மோசடி செய்ததாக அருளானந்து சாமி, மனைவி புஷ்பா, அவரது மகன் நெப்போலியன், மகள் நான்சி (தற்போது சிங்கப்பூரில் உள்ளார்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அருளானந்து சாமியை கைது செய்தனர்.
    திருப்பத்தூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது75). இவர் பிள்ளையார்பட்டியில் இருந்து திருக்கோஷ்டியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கிக்கொண்டு நடந்து வீடு திரும்பியுள்ளார்.

    அப்போது தானிப்பட்டி விளக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் முத்துக்கருப்பனுக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மானாமதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் இறந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி உடலை வாங்க மறுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    மானாமதுரையை அடுத்த கீழப்பிடாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது24). கடந்த 29-ந்தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரமேசை சிலர் பணம்கேட்டு மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் எனவே அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மு.கண்ணகி, நகர் செயலாளர் எம்.எஸ்.கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் மற்றும் விஸ்வநாதன், சந்திரன், நாகராஜ், கணேசன் உள்பட பலர் சிவகங்கை-மானாமதுரை ரோட்டில் பஸ்மறியல் போராட்டம் செய்ய முயன்றனர்.

    தகவல் அறிந்து நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் போலீசாருடன் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், இன்ஸ்பெக்டர் சேது ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துபேசி இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    மானாமதுரையில் உள்ள நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி ஆய்வு செய்தார்.
    மானாமதுரை:

    மானாமதுரை சப்-கோர்ட்டு, முன்சீப் கோர்ட்டு, ஜே.எம். கோர்ட்டு ஆகிய நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி அவர்கள் ஆய்வு செய்தார். முன்னதாக, சப்-கோர்ட்டுக்கு வருகை தந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாஹியை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன், மானாமதுரை சார்பு நீதிபதி அன்வர் சதாத், நீதித்துறை நடுவர் முத்து இசக்கி, சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ராஜகோபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் நீதிமன்றங்களை பார்வையிட்டு தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். அவர் மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்தினை செயல்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மானாமதுரை வக்கீல் சங்கம் சார்பில் தலைவர் முத்துக்குமார், முன்னாள் செயலாளர் குரு.முருகானந்தம், மூத்த வக்கீல்கள் ஆதிமூலம், முத்துராமலிங்கம், ஜெயராமன், அரசு வக்கீல்கள் ஊர்காவலன், லிங்கேஸ்வரன், ராஜாங்கம், சிவகாமி, அனுசூர்யா, அழகர்சாமி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடத்தை கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணி காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 5-ம் வகுப்பு வரைபடித்திருக்க வேண்டும் 1.7.2020 அன்று பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்பவர்கள் அந்தந்த கிராமத்தில் அல்லது தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

    விருப்பம் உடையவர்கள் தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதிக்குள் கொடுக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    சிவகங்கைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கைக்கு வருகிற நவம்பர் மாதம் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருகிறார். இதையொட்டி அவருக்கு சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் கதர் கிராமதொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், எம்.ஜி.ஆர். இளைஞர்அணி துணை செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசியதாவது:-

    கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கைக்கு வருகிற 3-ந்தேதி அல்லது 4-ந்தேதி வருகை தர உள்ளார். அவருக்கு தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் தான் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்ற பெயரை பெற்று தரும் வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். வழக்கமான முறையில் வரவேற்பு என்று இருக்காமல் மாவட்டத்தின் பெருமைகளை கூறும் வகையில் கிராமமக்களுடன் இணைந்து வரவேற்க வேண்டும். மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம், புகழ் ஆகியவைகள் தெரியும் வகையில் வரவேற்பு இருக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- சிவகங்கை வருகை தரும் முதல்- அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு தரவேண்டும். அவர் வரும் வழியில் அதிக அளவில் மக்கள் வரவேற்பு தரும் வகையில் இருக்க வேண்டும். அதிலும் கிராமத்து மக்களை வைத்து முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். முதல்-அமைச்சர் தான் ஒரு விவசாயி என்பதை அடிக்கடி கூறுவார். அவர் எப்போதுமே விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்துவார். எனவே அவரது வரவேற்பில் விவசாயிகளின் பங்கு அதிகஅளவில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், முன்னாள் மாவட்டசெயலாளர் முருகானந்தம், மாணவர்அணி மாவட்டசெயலாளர் என்.எம்.ராஜா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் ஆசைதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஆவின் தலைவர் அசோகன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிவகங்கை நகர் அவை தலைவர் வி.ஆர். பாண்டி நன்றி கூறினார்.
    பண்டிகை காலத்திற்குப்பின் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள், துணை இயக்குனா் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா படிப்படியாக குறைந்துள்ளது. இந்தநிலை தொடர்ந்து சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்தடுத்து வரும் பண்டிகை நாட்களுக்குப்பின் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் முன்எச்சரிக்கையுடனும், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசின் வழிமுறைகளான கை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைப்பிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். பொருட்கள் வாங்க சொல்லும்போது, காற்றோட்ட வசதி இல்லாத கடைகளுக்கு செல்வதையும், கூட்ட நெரிசலோடு செல்வதையும் தவிர்க்க வேண்டும். இவற்றை முறையாக பின்பற்றினால், பண்டிகை நாட்களுக்கு பிந்தைய காலங்களிலும், கொரோனா இல்லாத வாழ்க்கை அமையும்.

    மேலும் முதியவா்கள், நாள்பட்ட நோயாளிகள் அடுத்துவரும் 6 மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும். மழைக்காலம் என்பதால் குடிநீரை காய்ச்சிப்பருக வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அனைத்து மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவசமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது. கொரோனா, டெங்கு, டைபாய்டு, மலேரியா, எலி காய்ச்சல், பரிசோதனையை மருத்துவா்களின் ஆலோசனைப்படி செய்துகொள்ள வேண்டும். அலட்சியம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே நகர் பா.ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தேவகோட்டை:

    பெண்கள் குறித்து தவறான கருத்தை வெளியிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே நகர் பா.ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் தலைவர் பஞ்சநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி தலைவி கோமதி நாச்சியார் முன்னிலை வகித்தார்.இதில் நகர் பொதுச் செயலாளர்கள் பாலராம்குமார், வடிவேலு, நகர் மகளிர் பிரிவு தலைவி சுப்புலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.
    தீபாவளி பண்டிகையையொட்டி செட்டிநாடு பகுதியில் கைத்தறி மூலம் கண்டாங்கி சேலைகள் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
    காரைக்குடி:

    கண்டாங்கி சேலைகளுக்கு என்று தனி மவுசு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தற்போது செட்டிநாடு பகுதியில் கண்டாங்கி சேலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுவாக தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது முதலில் புத்தாடை தான். ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின்போது வீடுகளில் புத்தாடை எடுத்து அன்றைய நாளில் அணிந்து தீபாவளி கொண்டாடுவது அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கும்.

    அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந்தேதி வர உள்ளது. இதையடுத்து தற்போது செட்டிநாடு பகுதியில் கைத்தறி மூலம் சேலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட சேலைகள் ஏற்றுமதி செய்யும் பணியும் மற்றொருபுறத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதகாலமாக கைத்தறி தொழில் முடங்கிய நிலையில் இருந்து வந்தது. மேலும் அந்த கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேக்கமடைந்தும் காணப்பட்டது.

    ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கைத்தறி தொழில் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி தற்போது இந்த சேலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து காரைக்குடியை அடுத்த கானாடுகாத்தான் பகுதியில் கைத்தறி உற்பத்தியாளர் வெங்கட்ராமன் கூறும்போது, இத்தொழிலை நாங்கள் 3 தலைமுறையாக செய்து வருகிறோம். தற்போது ரெடிமேட் ஆடைகள் வரத்து அதிகரித்துள்ளதால் கைத்தறிக்கு இருந்த மவுசு குறைய தொடங்கியது. இதனால் செட்டிநாடு என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் இத்தொழிலை நம்பியிருந்தவர்கள் இதை விட்டு வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். இருப்பினும் ஒரு சில கைத்தறி நெசவாளர்கள் இத்தொழிலை தமது பாரம்பரிய தொழிலாக நினைத்து செய்து வருகின்றனர்.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு செட்டிநாடு கண்டாங்கி சேலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்ததால் இத்தொழில் மக்களிடையே நல்ல அங்கீகாரம் கிடைத்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு செட்டிநாடு கண்டாங்கி சேலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைத்தறி பட்டு புடவைகளில் கோர்வை தாழம்பூ ரக பட்டு புடவை மற்றும் உடல் காட்டன் பட்டு ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டு புடவைகளின் எடை 350 கிராம் குறைவாக உள்ளதால் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இங்கு தயாரிக்கப்பட்ட கண்டாங்கி சேலைகள் டெல்லி, ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சென்னை, கோவை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. மிகவும் நலிவு பெற்ற இந்த தொழிலை மேலும் வலிமையுடையதாக மாற்ற அரசு சார்பில் கைத்தறி நெசவு கலைஞர்களுக்கும், இந்த தொழிலை நடத்தி வரும் உற்பத்தியாளர்களுக்கும் மானியம் உதவி செய்து தந்தால் மேலும் இத்தொழிலை விரிவுப்படுத்தலாம் என்றார்.
    கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு நடந்த இடங்களை ஆவணப்படுத்தும் பணியின் போது நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இதில் 6-வது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று, கடந்த மாதம் 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    இந்த அகழ்வாராய்ச்சியின் போது, மண்பாண்ட ஓடுகள், எடைக்கற்கள், தங்க நாணயம், சங்கு வளையல்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றதால், அதன் பின்னர் புதிதாக குழிகள் ஏதும் தோண்டப்படவில்லை. இதைதொடர்ந்து, தொல்லியல் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கீழடியில் ஏற்கனவே ஒரு குழியில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் அதன் அருகில் உள்ள மற்றொரு குழியிலும் செங்கல் கட்டிடத்தின் தொடர்ச்சி போல் தெரிந்தது. இந்த செங்கல் கட்டுமானத்தை ஆவணப்படுத்தும் பணிக்காக தொல்லியல் துறையினர் அந்த 2 குழிகளையும் இணைத்து ஒரே குழியாக மாற்றிய போது அங்கு நீளமான செங்கல் சுவர் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. இந்த செங்கல் சுவரின் உயரம், அகலம், நீளம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    கீழடியில் 6-வது கட்ட அகழாய்வு நடந்த இடங்களை ஆவணப்படுத்தும் பணியின் போது நீளமான செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இதில் 6-வது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று, கடந்த மாதம் 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    இந்த அகழ்வாராய்ச்சியின் போது, மண்பாண்ட ஓடுகள், எடைக்கற்கள், தங்க நாணயம், சங்கு வளையல்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவு பெற்றதால், அதன் பின்னர் புதிதாக குழிகள் ஏதும் தோண்டப்படவில்லை. இதைதொடர்ந்து, தொல்லியல் ஆய்வாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கீழடியில் ஏற்கனவே ஒரு குழியில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் அதன் அருகில் உள்ள மற்றொரு குழியிலும் செங்கல் கட்டிடத்தின் தொடர்ச்சி போல் தெரிந்தது. இந்த செங்கல் கட்டுமானத்தை ஆவணப்படுத்தும் பணிக்காக தொல்லியல் துறையினர் அந்த 2 குழிகளையும் இணைத்து ஒரே குழியாக மாற்றிய போது அங்கு நீளமான செங்கல் சுவர் கட்டுமானம் இருப்பது தெரிய வந்தது. இந்த செங்கல் சுவரின் உயரம், அகலம், நீளம் ஆகியவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    சிங்கம்புணரியில் பேரூராட்சி மற்றும் நகர்ப்புற வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நகர்புற பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மணியம்மை, ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் சாந்தி தலைமையில் வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கோரிக்கை மனுவுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் ஜான்முகமதுவிடம் தனித்தனியாக தங்களது மனுவை கொடுத்து வேலை கோரி விண்ணப்பம் செய்தனர்.

    விவசாய பணிகள் இல்லாமல் நகர்ப்புறத்தில் வாழ்ந்து வரும் இந்த ஏழை, எளிய மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரி இந்த மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி வளாகத்தில் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 100 நாள் வேலை கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களில் 10 சதவீதம் பேர் கூட முக கவசம் அணியாமல் வந்திருந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    ×