என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக ரூ.60 லட்சம் மோசடி- வியாபாரி கைது

    காரைக்குடியில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரைச் சேர்ந்தவர் பூமாலை (வயது 54). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது காரைக்குடி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பலசரக்கு மற்றும் வெள்ளைப்பூண்டு மொத்த வியாபாரம் செய்யும் அருளானந்துசாமி என்பவர் பூமாலை குடும்பத்தினருடன் நெருங்கிப்பழகி, எனது மகனும், மகளும் பிரபல ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறார்கள்.

    அவர்களுக்கு டாக்டர்களிடம் நல்ல பழக்கம் உண்டு. அவர்கள் மூலம் 2 சிறுநீரகத்தையும் மாற்றிவிடலாம். ஆனால் அதற்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பூமாலையும் அவரது குடும்பத்தினர் பலரிடம் கடன் பெற்று வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து ரூ.60 லட்சத்தை அருளானந்துசாமியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் அவர் இதுநாள் வரை சிறுநீரகத்திற்கோ, மாற்று அறுவை சிகிச்சைக்கோ எந்த ஏற்பாடும் செய்யவில்லை. பூமாலையிடம் வாங்கிய ரூ.60 லட்சத்தையும் திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததாகவும் தெரியவருகிறது. இதை தொடர்ந்து பூமாலை அவரது நண்பர்கள் மூலமாக அருளானந்துசாமி வீட்டுக்கு சென்று கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு உள்ளார். அப்போது பூமாலையை ஆபாசமாக பேசி பணத்தை திருப்பி தர முடியாது எனக்கூறி அருளானந்து சாமி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

    இது குறித்து பூமாலை காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணம் மோசடி செய்ததாக அருளானந்து சாமி, மனைவி புஷ்பா, அவரது மகன் நெப்போலியன், மகள் நான்சி (தற்போது சிங்கப்பூரில் உள்ளார்) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அருளானந்து சாமியை கைது செய்தனர்.
    Next Story
    ×