search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடி அகழாய்வு இடங்களை பார்வையிட்ட ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன்
    X
    கீழடி அகழாய்வு இடங்களை பார்வையிட்ட ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன்

    கீழடி அகழாய்வு இடங்களை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் பார்வையிட்டார்

    மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கீழடி, கொந்தகை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 5 கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளில் மொத்தம் 14 ஆயிரத்து 598 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    கடந்த பிப்ரவரி 19-ந்தேதி 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன. இதில் சூதுபவளம், அகேட், பல வரிசைகள் கொண்ட செங்கல் சுவர், விலங்கின முழு உருவ எலும்புக்கூடு, எடைக்கற்கள், உறைகிணறுகள், முதுமக்கள் தாழிகள், குழந்தையின் எலும்புக்கூடு, மனித மண்டை ஓடு, மனித முழு உருவ எலும்புக்கூடு, பளபளப்பான செவ்வண்ண பானை, தங்க நாணயம், சீன மண்பாண்ட ஓடு, கத்திகள், சங்கு வளையல்கள், நத்தை ஓடுகள், சுடுமண் உலை உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30-ந்தேதியுடன் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்தன. தொடர்ந்து பொருட்கள் ஆவணப்படுத்துதல் (வரைபடம் தயாரிக்கும்) பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் 38 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் அந்தப்பணி பாதிக்கப்பட்டு சுவர்கள் கரைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கீழடி, கொந்தகை பகுதிக்கு வருகை தந்தார். அவரை திருப்புவனம் தாசில்தார் மூர்த்தி வரவேற்றார். இரு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த விவரங்களை நீதிபதி கேட்டறிந்தார்.

    மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை விளக்கிக் கூறினார். ஏற்கனவே நேற்று முன் தினம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், வைத்தியநாதன் ஆகியோர் வந்து பார்வையிட்டு சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.
    Next Story
    ×