என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    சங்கராபுரம் ஊராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்- பா.ஜனதா வலியுறுத்தல்

    காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    காரைக்குடி:

    பா.ஜனதா கட்சியின் தமிழ் வளர்ச்சி மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்குடி சங்கராபுரம் ஊராட்சி தமிழகத்தின் 2-வது பெரிய ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சேர்த்து சுமார் 25 ஆயிரம் வீடுகள் மற்றும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    பெரிய ஊராட்சியாகவும், வீடுகள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளதால் இந்த ஊராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது முறையான கால்வாய் மற்றும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஏதும் இல்லாததால் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஓடும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட தொற்று நோய்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் டெங்கு பரவிய காலகட்டத்தில் முதன் முதலில் இந்த சங்கராபுரம் பகுதியில் இருந்து தான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பகுதியில் முறையான கால்வாய் வசதி இல்லாததால் தெருக்கள் முழுவதும் சாக்கடை நீர் ஓடும் நிலை இருந்து வருகிறது.

    ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் ரூ.125 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்ட சபையில் அறிவித்து அதற்கான பணிகள் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் சங்கராபுரம் ஊராட்சி பகுதி இடம் பெறாததால் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே தற்போது நடைபெற்று வரும் இந்த பாதாள சாக்கடை திட்ட பணியை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

    இதுதொடர்பாக கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்நிலையில் காரைக்குடி நகர் வளர்ச்சி பாதைக்கு பெரிதும் கை கொடுப்பது இந்த சங்கராபுரம் ஊராட்சியும் ஒன்றாகும். எனவே தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியை சங்கராபுரம் ஊராட்சிக்கும் விரிவுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×