search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததற்கான பட்டியலை எல் முருகனிடம் வழங்கிய போது எடுத்த படம்.
    X
    10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க.வில் இணைந்ததற்கான பட்டியலை எல் முருகனிடம் வழங்கிய போது எடுத்த படம்.

    பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் இனி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்- முருகன் பேச்சு

    பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் இனி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் பேசினார்.
    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் முன்னாள் யூனியன் தலைவரும், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருமான மேப்பல் சக்தி தலைமையில் 10 ஆயிரம் பேர் பா.ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி காளையார்கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.

    முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் பேசியதாவது:-

    கொரோனா காலக்கட்டத்தில் சுமார் 1 கோடி மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி உள்ளோம். தற்போது தமிழகத்தில் மற்ற கட்சிகளில் இருந்தும், பிரபல தொழில் அதிபர்கள், சினிமாவைச் சேர்ந்த பிரமுகர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருவதால், வருகிற சட்டமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று, சட்டசபையில் அதிக எண்ணிக்கையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அமருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

    கடந்த 6 ஆண்டுகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் சார்பில் இலவசமாக 35 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தீபாவளி பண்டிகை வரை கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சினை மற்றும் அயோத்தி பிரச்சினையை நரேந்திரமோடி தீர்த்து வைத்துள்ளார். ராமர் கோவில் பிரச்சினையில் சரியான முடிவை எடுத்தார்.

    தமிழகத்தில் விவசாய சட்டம் மற்றும் இந்தி மொழி குறித்து மக்களிடம் ஒரு மாயையை தி.மு.க. ஏற்படுத்தி வருகிறது. முதலில் தமிழக மக்கள் இந்தி மொழி படிக்கக்கூடாது என கூறும் தி.மு.க.வினர் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழியை நீக்கட்டும். அதன் பின்னர் தமிழக மக்களிடம் அவர்களின் கருத்தை தெரிவிக்கலாம். மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது.

    வருகிற சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வால் வெற்றி பெறமுடியாது. பா.ஜ.க. ஆதரவு பெறும் கட்சிதான் இனி ஆட்சியில் அமர முடியும். தி.மு.க. இனி தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியை பிடிக்க முடியாது. அதேபோல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், முதல்-அமைச்சர் ஆகும் கனவும் பலிக்காது. அ.தி.மு.க.வில் சட்டமன்ற தேர்தலுக்காக முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×