search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகங்கை பகுதியில் மணல் கடத்திய 5 பேர் கைது

    சிவகங்கை பகுதியில் மணல் கடத்தியதாக 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை: 

    சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் உத்தரவின்பேரில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சிவகங்கையை அடுத்த தமராக்கி பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து போலீசார் அந்த டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த சக்திவேல் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிவகங்கையை அடுத்த திருவேலன்குடி பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி வந்த தேவன் (40), ஈஸ்வரன் (34), சந்தன கருப்பு (55) ஆகிய 3 பேரை தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் கைது செய்தார்.

    திருப்பத்தூரை அடுத்த கண்டவராயன்பட்டி பகுதியில் லாரியில் கடத்திவரப்பட்ட மணலை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக முத்துக்குமார் (24), மாணிக்கம் (29), லாரி உரிமையாளர் ஆறுமுகம் (62), டிரைவர் கார்த்திக் (29), வடிவேல் (40) ஆகிய 5 பேர் மீது கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முத்துக்குமார் கைது செய்யப்பட்டார். மானாமதுரை அடுத்த ராஜகம்பீரம் பகுதியில் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்த 150 யூனிட் மணலை போலீசார் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக மானாமதுரை இன்ஸ்பெக்டர் சேது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் நாதன் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் மணல் மற்றும் கிராவல், போன்றவை கடத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வர முடியாது.மேலும் தொடர்ந்து இதுபோல் செயல்படுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மணல் கொள்ளையர்களுக்கு உதவும் போலீஸ் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×