என் மலர்
சிவகங்கை
திருப்புவனம் பக்கமுள்ள பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது இலுப்பக்குடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பிரியா (வயது 28). இவர் 100 நாட்கள் வேலைத் திட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வீட்டின் கதவை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து பிற்பகலில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள மரக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த செயின்கள், மோதிரங்கள், தோடுகள் என சுமார் 12 பவுன் நகைகளை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு குறித்து பிரியா, பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் சுந்தரி (வயது 47). இவரது கணவர் மாதவன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். காரைக்குடி கற்பக விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி காமாட்சி. சுந்தரியும் காமாட்சியும் நெருங்கிய தோழிகள். இருவரது குடும்பத்துக்கும் நெருங்கிய பழக்கம் உண்டு.
இந்த நிலையில் காமாட்சியும் அவரது கணவர் சீனிவாசனும் சுந்தரியிடம் ஷேர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றில் முதலீடு செய்தால் நன்கு சம்பாதிக்கலாம். அதன்மூலம் நிறைய வருமானம் வருகிறது. நீங்களும் முதலீடு செய்தால் உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். இருந்த இடத்திலிருந்து பல லட்ச ரூபாய் சம்பாதிக்க இதுவே சிறந்த வழி என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.
மேலும் நாம் இருவரும் சேர்ந்து செய்யும் முதலீட்டில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கும் உரிய பங்கு தருகிறோம் என கூறியுள்ளனர். இதை நம்பிய சுந்தரி தன்னிடமிருந்த ரூ.8 லட்சத்தை பங்கு முதலீடு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்திற்காக காமாட்சி, சீனிவாசன் தம்பதியிடம் கொடுத்துள்ளார். மேலும் தனது சகோதரி, தாயார் ஆகியோரிடம் இருந்து 11 பவுன் நகைகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சில நாட்களில் காமாட்சி, சீனிவாசன் தம்பதியினர் சுந்தரியிடம் ரூ.3 லட்சத்தை பங்கு முதலீட்டில் வந்த லாபத்தில் உங்கள் பங்கு என்று கூறி கொடுத்துள்ளனர். இதனால் உற்சாகமடைந்த சுந்தரி மேலும் தன்னிடம் இருந்த 39 பவுன் நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர்கள் சுந்தரியை பார்க்கவே இல்லை. பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து சுந்தரி கேட்டபோது ஏதேதோ காரணங்களை கூறி வந்துள்ளனர். அப்போது சுந்தரி நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தால் போதும் எனக்கு வேறு ஏதும் தேவையில்லை என்று கூறி ரூ.8 லட்சம் பணத்தையும் 50 பவுன் நகைகளையும் திருப்பி கேட்டுள்ளார். அதற்கு இதோ தருகிறேன் என்று அவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். சம்பவத்தன்று சுந்தரி நகைகளையும் பணத்தையும் கேட்டு காமாட்சி வீட்டுக்கு வந்த போது காமாட்சியும், சீனிவாசனும் சுந்தரியை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுந்தரி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனிடம் புகார் செய்தார்.அவரது உத்தரவின் பேரில் காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சுந்தரியிடம் 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 லட்சத்தை மோசடி செய்ததாக காமாட்சி, சீனிவாசன் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவர்களை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் பவர்ஹவுஸ் அருகில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
நகராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து விதமான குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ குப்பை கிடங்கில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ குப்பைகளில் பரவி மளமளவென எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமானது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தூர்நாற்றம், நோய்பரவல் உள்ளிட்ட காரணங்களால் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக 2 வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஊரடங்கின் போது, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இந்தநிலையில், கீழச்சிவல்பட்டி பகுதியில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது விராமதி பஸ் ஸ்டாப்பில் சந்தேகம்படும்படி நின்றுகொண்டிருந்த நபரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் நெய்வாசலைச்சேர்ந்த ரெங்கசாமி மகன் சுப்பிரமணியன் (வயது40) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையில் சுமார் 42 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்து, கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கீழச்சிவல்பட்டி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலையரசு வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியத்தை கைது செய்ததார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று கீழச்சிவல்பட்டி டாஸ்மாக் கடையில் 28 மதுபாட்டில்களை வாங்கிச்சென்ற ஆவினிப்பட்டியை சேர்ந்த முருகேசன் (51) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 68 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதேபோன்று 25 மதுபாட்டில்களை கடத்தி சென்ற திருப்பத்தூர் அருகே மணமேல்பட்டியை சேர்ந்த குமரேசன் (39) என்பவரையும், 28 மதுபாட்டில்களை வாங்கிச்சென்ற திருப்பத்தூர் சமஸ்கான் பள்ளிவாசல் தெருவைச்சேர்ந்த முத்து (52) என்பவரையும் திருப்பத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி கைது செய்து விசாரித்து வருகிறார். அவர்களிடம் இருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது .
மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 820 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 126 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
சிங்கம்புணரி தாலுகாவில் தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று கொரோனா விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்கிறார்களா? என ஆய்வு செய்தனர். கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது சிங்கம்புணரி பஸ் நிலையம் முன்புறம் உள்ள ஒரு மருந்து கடையில் டாக்டர் பரிந்துரையின்றி மருந்துகள் வினியோகித்தது தெரிய வந்தது. அதோடு முககவசம், கையுறை இன்றி வாடிக்கையாளர்களுக்கு மருந்துகள் வழங்கி கொண்டிருந்தார். வாடிக்கையாளர்களும் முககவசம் இன்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மருந்து வாங்கி கொண்டு இருந்தனர். இதையடுத்து அந்த மருந்து கடையை தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
கீழடியில் ஏற்கனவே பாசி, மணிகள், மண்பாண்ட ஓடுகள், சிறிய,பெரிய பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் தாயக்கட்டை, கல்லாலான விவசாய கருவி, காதில் அணியும் தங்க ஆபரண வளையம் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டபோது ஒரு குழியில் முழுமையான சிறிய பானை மூடியுடன் சேதாரமில்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாசி மணிகளும் அதில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன.
மற்றொரு குழியில் கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட பல வகையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு சிறிய வாய்க்கால் போல் உள்ளது.






